20 மனைவிகளுடன் ஒருவர் தகராறு இல்லாமல் வாழ்ந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதிலும் 16 மனைவிகளை ஒரே வீட்டில் வைத்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. யார் அந்த மகராசன் என்று கேட்கத் தோன்றுகிறதா. அந்த அதிசய மனிதரின் பெயரும் அவரது குடும்பத்தைப் போலவே நீண்டது.
எம்சி எர்னஸ்டோ முயினுச்சி கபிங்கா என்பது அவரது முழுப் பெயர். தான்சானியா நாட்டைச் சேர்ந்த அவர், 1961இல் முதல் திருமணத்தை முடித்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. பழங்குடியினத்தில் கூடுதல் மனைவி கட்டிக் கொள்ள தடை இல்லாததால், அவரது தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் பல மனைவிகளை கட்டி குடும்பத்தை பெருக்கிக் கொண்டார் கபிங்கா. 5 திருமணங்கள் முடிக்கும் வரை அவரது தந்தை, கபிங்காவின் குடும்ப வரவு செலவுகளை கவனித்தார்.
அதன்பிறகு செய்த திருமணங்களுக்கு கபிங்காவே பொறுப்பேற்று முழுமையான குடும்பத் தலைவராக உயர்ந்தார். தற்போது வரை 20 திருமணங்கள் முடித்துள்ளார். 16 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார். மற்ற 4 மனைவிகள் இறந்து போனார்கள். இப்போது அவரது குடும்பத்தில் ஆண்களும், பெண்களுமாக 104 வாரிசுகள் இருக்கிறார்கள். மேலும் 144 பேரன் பேத்திகளும் துள்ளி விளையாடுகிறார்கள். அவரது ஒரு குடும்பமே தனி கிராமம்போல மிகப்பெரியது. கபிங்கா அதன் ராஜாவாக கம்பீரமாக வலம் வருகிறார்.
கபிங்காவின் நற்பெயர் காரணமாக அவரை மணம் முடிக்க சம்மதித்ததாக அவர்களது மனைவிமார்கள் கூறுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி வீடு உள்ளது. தனித்தனியாக சமைத்தாலும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். ஒன்றாக சாப்பிடுகிறார்கள். சகோதரிகள் போல சண்டை சச்சரவின்றி வாழ்கிறார்கள். விவசாயம் அவர்களது தொழிலாக உள்ளது. உலகின் பெரிய குடும்பங்களில் ஒன்றாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது கபிங்காவின் குடும்பம்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.