வல்லரசுகளின் பகடையான ஜி20
வல்லரசுகளின் பகடையான ஜி20

ரஷ்ய – உக்ரைன் போரை இந்தியா இதுவரை பகிரங்கமாகக் கண்டிக்காத நிலையில், ஜி20 மாநாடு இந்த மாதம் இரண்டாம் திகதி வியாழக்கிழமை மாலை புதுடில்லியில் நடைபெற்றுள்ளது. தலைமைப் பொறுப்பை நரேந்திரமோடி ஏற்றதால் புதுடில்லியில் இடம்பெற்ற மாநாட்டில், உக்ரைன் மீதான போரை நிறுத்த இந்தியா, ரஷ்யாவுக்குப் புத்திசொல்ல வேண்டும் என்ற இறுமாப்புடனேயே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பங்குபற்றியிருந்தன.
வெள்ளிக்கிழமை வெளியான இந்த நாடுகளின் நாளிதழ்களில் போரை நிறுத்துவது பற்றி மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள் கசிந்திருந்தன. ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்பதை ரஷ்யாவுக்குப் புரியவைக்க இந்தியா இந்த மாநாட்டைப் பயன்படுத்தும் என்று நம்பியிருந்தாகக் கூறினார் என்று பாகிஸ்தான் ரூடே ஆங்கில நாளிதழ் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.
ஜி20க்குத் தலைமை தாங்கும் இந்தியா, வொஷிங்டனின் கவனத்தை எப்போதும் ஈர்த்துள்ளது என்றும் குறிப்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏதேனும் பிரச்சனையின் அறிகுறி தென்படும்போது, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் அதனை ஊதிப் பெருப்பித்து இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் மேலும் பிளவுகளை உருவாக்க முற்படுவதாகவும் சீனாவின் குளோபல் ரைம்ஸ் செய்தி இணையம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆக, ஜி20 மாநாடு தொடர்பாக பாகிஸ்தான், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களின் கணிப்பின் பிரகாரம், உக்ரைன் மீதான போரை நிறுத்த இந்தியா, ரஷ்யாவுடன் பேசியிருக்க வேண்டும் என்பது தெரிகின்றது. அதேநேரம் சீன, ரஷ்ய ஊடகங்கள், உக்ரைன் மீதான போருக்கு அமெரிக்க மேற்குலகமும், ஐரோப்பிய நாடுகளும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகப் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளன. இந்த நிலையிலேதான் உக்ரைன் போரை நிறுத்துவது குறித்த ஏற்பாட்டுக்காக ஏப்ரல் மாதம் சீனாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாகப் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அறிவித்துள்ளார். ஆனால் போரை முடிவுக்குக் கொண்டு வரும் சமாதான முயற்சியை சீனா மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென உக்ரைனின் அதிபர் ஷெலன்ஸ்கியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் ஜனாதிபதி சில நாள்களுக்கு முன்னர் சீனாவுக்குப் பயணம் செய்திருந்தபோது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் சீனா ஈடுபட வேண்டும் என்ற தொனியில் கருத்தை வெளியிட்டிருந்தார். சீனாவும் அதற்கு உடன்பட்டிருந்தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அதேநேரம் இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டுமென ஜி20 மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னர் ஷெலன்ஸ்கி கேட்டிருந்தார். ஆனால் இந்திய அரசு அதற்கு பதில் வழங்காத நிலையில்தான் மாநாடு நடைபெற்றிருக்கிறது.  

இந்தியாவைக் காய்வெட்ட
இலங்கையால் நகர்வுகள்
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் ஆரம்பித்து கடந்த மாதம் 24ஆம் திகதி ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளது. ஆனால், போரில் யார் வெல்வார்கள், யார் தோற்பார்கள் என்பது இதுவரையும் தெளிவாகக் கூறமுடியாத நிலையில் இப் போரினால் சர்வதேச நாடுகள் பல முரண்பாடுகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்துள்ளன. இந்திய ரஷ்ய உறவு தொடர்ந்து நீடிப்பதால் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்குப் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் முடிந்தவரை இந்தியாவைத் தம் பக்க ஈர்க்க பாகிஸ்தானுடன் உறவைப் பேணி அந்த நாட்டின் முப்படைகளையும் பலப்படுத்தும் திட்டங்களையும் அமெரிக்கா இன்றுவரை செயற்படுத்தி வருகின்றது. இவ்வாறு இந்தியா எதிர்கொள்ளும் புவிசார் அரசியல் - பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்திச் சிறிய நாடான இலங்கையும், இந்தியாவைக் கடந்து அமெரிக்க – சினா அரசுகளுடன் நேரடி உறவைப் பேணும் இராஜதந்திர உத்திகளைக் கையாண்டு வருகின்றது.
ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விடயத்தில் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை எப்படியாவது நடைமுறைப்படுத்திவிட வேண்டும் என்று இந்தியா இலங்கைக்குக் கடும் அழுத்தங்களைக் கொடுத்து வரும் நிலையில், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக ரத்துச் செய்து இந்தியத் தலையீட்டை முற்றாக நீக்கம் செய்ய அமெரிக்க - இந்திய பனிப்போரை இலங்கை நன்கு பயன்படுத்தி வருகின்றமை பட்டவர்த்தனம். குறிப்பாக பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நீக்கம் செய்தால் இந்தியத் தலையீட்டைத் தவிர்க்கலாம் என்று பேராசிரியர் றொகான் குணரட்ன தொடர்சியாக ஆலோசனை வழங்கி வருகின்றார். இதனால், ரஷ்ய – உக்ரைன் போரினால் பல அழுத்தங்களுக்கு உள்ளாகி இராஜதந்திர ரீதியில் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தியாவை, எப்படி வெட்டிக் காய்நகர்த்தலாம் என்ற திவிர பரிசீலனையில் கொழும்பு ஈடுபடுகின்றது. குறிப்பாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானம் மற்றும் பதின்மூன்று பற்றிய இந்தியாவின் அழுத்தங்கள் போன்றவற்றைத் தவிர்த்து, புவிசார் அரசியல் பொருளாதார சூழலுக்கு ஏற்ப அமெரிக்க இந்திய அரசுகளுடன் உறவைப் பேணும் உத்திகளில் புதுடில்லியில் இலங்கைத் தூதுவராகவுள்ள மிலிந்த மொறகொட ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.

சவாலுக்கு உட்பட்டுள்ள
இந்திய வெளிவிவகாரம்!
உக்ரைன் போரின் பின்னரான தனது வெளிவிவகாரக் கொள்கை விவகாரத்தில் பெரும் சிக்கல்களை இந்தியா எதிர்கொண்டு வருகின்றது. பிரதானமாக உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடென்று கூறிக்கொள்ளும் இந்தியா, ஜனநாயக நாடான உக்ரைன் மீது தனது நட்பு நாடான ரஷ்யா நடத்தும் தாக்குதல்களைப் பாத்துக் கொண்டிருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே இந்திய வெளியுறவுக் கொள்கை பெரும் சவாலுக்கு உட்பட்டிருக்கின்றது. ஏனெனில் உக்ரைன் மீதான தாக்குதல்களை மேற்குலகின் ஜனநாயக நாடுகள் வெளிப்படையாகக் கண்டிக்கின்றன. உக்ரைனுக்கு ஆதரவாகவும் செயற்படுகின்றன.
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்வதில் சொல்ல முடியாத அநீதிகளை ரஷ்யா செய்திருக்கிறது. அதேநேரம் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளும் பல தடைகளை விதித்துள்ளன. ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடென்று கருதப்படுகின்ற இந்தியா, உக்ரெயன் போர் விவகாரத்தில் இரட்டைக் கொள்கையைப் பின்பற்றி, ஜனநாயக விழுமியத்தை இரண்டாக்கியுள்ளது என்றே பொருள்கொள்ள முடியும்.
உக்ரைன் மீதான போர் தற்போதைய உலக பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று கூறினாலும், ரஷ்யாவின் பொருளாதாரம் மிகப் பெரிய விழ்ச்சியைக் கண்டுள்ளது. இதன் காரணமாக ரஷ்யா மீதான பழைய பகைமைகளைத் தீர்க்க அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஒத்துழைப்பதால், இப் போர் நீடிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியிருக்கிறார். அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைனுக்குச் சென்றுவந்த பின்னர் போர் மேலும் அதிகரிக்கும் தன்மை கொண்டதாக மாறிவிட்டது என்றும், போரை நிறுத்த மேற்குலக நாடுகளுக்கு விருப்பமில்லை எனவும் புடின் பகிரங்கமாகக் குற்றம் சுமத்துகிறார்.
ஜோ பைடனின் உக்ரைன் பயணம், ரஷ்ய – சீனா உறவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றே சீனாவின் குளோபள் ரைம்ஸ் வர்ணித்துள்ளது. உக்ரைன் போர் முடிவுக்கு வராமல், உக்ரைனுக்கு ஆதரவான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஓரணியிலும் ரஷ்யா உள்ளிட்ட அதன் ஆதரவு நாடுகள் மற்றொரு அணியிலும் நின்று தாக்கத் தொடங்கினால், அது உலகப்போரை நோக்கிதான் செல்லும் என்ற எச்சரிக்கையை சீன ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுளளதாகக் குளோபல் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
அதேநேரம் கோதுமை, சோளம், கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களின் விலைகள் இருமடங்காக உயர்ந்திருக்கின்றன. ஆகவே போரால் உலக அளவில் நூற்று எழுபது கோடி மக்கள் பசி, பட்டினி போன்ற வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் உலகில் உண்மையான ஜனநாயகம் இல்லை என்பதை குர்திஸ்தான் மக்களின் தேச விடுதலைக்கு மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் இழைக்கும் அநீதிகளும், பலஸ்தீன மக்களின் அரசியல் விடுதலையை நிராகரித்து, இஸ்ரேல் அரசின் பக்கம் நின்று சொல்லப்படும் நீதிக்கு மாறான நியாயப்படுத்தல்களும் பகிரங்கப்படுத்துகின்றன.

இன்றும் அன்றும்
அதேநேரம் இலங்கை ஒற்றையாட்சிக்குள் தமிழ்த்தேசியக் கோட்பாட்டைக் கரைப்பதற்கு 2009இல் சிங்கள ஆட்சியாளர்கள் கையாண்ட சர்வதேச நியமங்களுக்கு மாறான போர் உத்திக்கு ஒத்துழைத்த மேற்குலகமும் ஐரோப்பாவும், இன்று உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை நிறுத்த இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கொடுக்கும் அழுத்தம் எந்த மனித நேயத்தை மையமாகக் கொண்டது என்ற கேள்விகள் எழாமல் இல்லை.  
அதேநேரம் இந்தியாவின் மௌனம் ஜனநாயகத்தில் எந்தப் பக்கமாக இருக்கிறது என்ற கேள்விகளும் இல்லாமலில்லை. மேற்குலகம் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீதான சீனாவின் குற்றச்சாட்டு நேர்மையான அரசியல் நோக்கம் கொண்டதா என்ற வினாக்களும் நியாயமானது.
தமிழர்களின் அரசியல் போராட்டத்தை முற்றாக இல்லாமல் செய்யும் போரின்போது, இந்தியா - சீனா மற்றும் மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் வெளியிட்ட ஒப்பாசாரக் கண்ட அறிக்கைகளுக்கும், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரைக் கண்டித்து வெளியிடும் கருத்துக்களும் இடையே வேறுபாடுகள் இருப்பதையும் ஆய்வாளர்களினால் அவதானிக்க முடிகின்றது.
அரசுக்கு அரசு அணுகுமுறை என்ற வாதம் ஒன்று உண்டு. ஆனால் மனிதாபிமானம், அதற்கான சர்வதேசச் சட்டங்கள், தேசிய இனங்களின் அரசியல் விடுதலை பற்றிய நியமங்கள் - கோட்பாடுகள் என்பது அனைத்துச் சமூகத்துக்குமான சமநிலைத் தன்மை கொண்டது என்பதே அரசறிவியல் விளக்கம்.
ஆனால் ஒரு அரசு இழைக்கின்ற அநீதிகளை வேறுபல அரசுகள் கூட்டுச் சேர்ந்து நியாயப்படுத்தும் அரசியல் உத்திகளும், தமக்குத் தேவையற்ற புவிசார் விவகாரங்களை தவிர்த்து, அதனைப் பயங்கரவாதமாகச் சித்தரித்து விடுதலை கோரிப் போராடுகின்ற தேசிய இனங்களை ஓரங்கட்டும் வியூகங்களுமே உலகில் இன்று விஞ்சிக் காணப்படுகின்றன.
அரசியல் அறத்துக்கு மாறாக இவ்வாறு விஞ்சிக் காணப்படும் வியூகங்களால் ஏற்பட்ட வலிகள், தோல்விகள் போன்ற உணர்வுகளைப் புரிந்துகொண்ட மனநிலை, ஜ-20 மாநாட்டில் பங்குபற்றிய பிரதிநிதிகளின் பேச்சில் இருந்து வெளிப்பட்டிருக்கிறது. அவ்வாறு புரிந்து கொண்டாலும் ஒவ்வொரு அரசுகளும் தத்தமது புவிசார் அரசியல் பொருளாதார நோக்கில் இருந்து சிறு துளியேனும் விட்டுக் கொடுத்தாத பிடிவாதம் மேலோங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
நெருக்கடிக்கான உரிய தீர்வுகள் இன்றியே மாநாடு முடிவடைந்துமுள்ளது. ஆனால் ஈழத்தமிழர்களையும் பலஸ்தீனியர்களையும் குர்திஸ்தானிகளையும் 'விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்', 'இணக்க அரசியல் அவசியமானது' என்று மாத்திரம் இந்த வல்லரசுகள் போதனை செய்வதுதான் வேடிக்கை.

-அ.நிக்ஸன்.

ஜீ20,புதுடில்லி

458 1

1 Comments

Hello World! https://prize-sense.life/?u=2vtpd0d&o=ywzbvvy&m=1?hs=d7748e935cb8703c5b405979db80c30a& 06-Apr-2023

idpi3b

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.