இந்திய மீனவர்கள் இலங்கையின் வடக்குக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவது இன்னமும் பரிசீலனையிலேயே உள்ளது. வடக்கு மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில்தான் இந்த நடவடிக்கை (இந்திய மீனவர்களுக்கான அனுமதி) முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இந்திய மீனவர்களை வடக்குக் கடற்பரப்பில் அனுமதிப்பது தொடர்பான விவாதங்களும் - எதிர்ப்புக்களும் நாளுக்குநாள் வலுவடைந்து வரும் நிலையில், நாட்டின் உயர் அதிகாரப்பீடத்தால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் இந்தக் கருத்து, வலுவானது என்பது மட்டுமல்லாமல் பலரின் பொருளாதாரத்தையும் நாட்டின் தலைவிதியையும் தீர்மானிக்கவல்லது. ஆதலால், ’பொதுக்குரலின் கீழான’ வலுவான எதிர்ப்பொன்று இதற்குப் பதிவுசெய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
வடக்குக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கைகளை அனுமதிப்பதென்பது வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகச் சிதைக்கும் செயல்தான். நேற்று முன் தினமும் இந்திய இழுவைப்படகுகள் தாயக மீனவர்களின் வலைகளை நாசம் செய்துவிட்டுச் சென்றிருக்கின்றன. இவ்வாறிருக்கையில், ’வடக்கு மீனவர்களுக்குப் பாதிப்பில்லாத வகையிலான மீன்பிடி’ என்ற ’கருத்துத் திணிப்பே’ இங்கு தேவையற்றதுதான். வடக்குக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு தற்போது அனுமதிகள் எதுவும் இல்லை. அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் சிறைப்படுத்தப்படுவதுடன் அவர்களின் படகுகள், மீன்பிடிச் சாதனங்கள் என்பன தற்போது இலங்கை அரசாங்கத்தால் அரசுடமை ஆக்கப்படுகின்றன. இவ்வாறான இறுக்கமான நடைமுறைகளும் பொறிமுறைகளும் நடைமுறையில் இருக்கும்போதே இந்திய மீனவர்களின் அத்துமீறலும் அதனால் கடற்பகுதிகளில் ஏற்படும் வாக்குவாதமும் மோதலும் தாராளமாகத்தான் இருக்கின்றது. இவ்வாறிருக் கையில் ’நிபந்தனைகள்’ என்ற பெயரில் எதையாவது சொல்லி, இந்திய மீனவர்களை அனுமதித்தால் அது எவ்வாறு வடக்கு மீனவர்களைப் பாதிக்காதிருக்கும்?
முற்றான தடைகள் இருக்கும்போதே அந்தத் தடைகளை உடைத்து அத்துமீறும் இந்திய மீனவர்கள், நிபந்தனை களுடனான அனுமதி வழங்கப்பட்டால், இன்னுமின்னும் அத்துமீறவே செய்வார்கள். இது வடபகுதி மீனவர்கள் தங்கள் தொழில்துறைகளை முற்றாக இழக்கவும் அல்லது பெரும் நிதி இழப்புக்களைச் சந்திப்பதற்குமே வாய்ப்புக்களை ஏற்படுத்தும். யதார்த்தம் இவ்வாறிருக்கையில், ’வடக்கு மீனவர்களைப் பாதிக்காத வகையில்’ இந்திய மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கைகளை எவ்வாறு அனுமதிப்பது என்ற தெளிவுபடுத்தலை இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டும்.
இந்திய மீனவர்களை வடக்குக் கடற்பரப்பில் அனுமதிப்பது என்ற பரிசீலனை மிகப்பெரும் இராஜதந்திர நடவடிக்கை என்பது குறைந்தபட்ச அரசியல் அறிவுள்ள எந்தவொரு நபராலும் புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால், பிராந்திய நலன்களுக்காகவும் வல்லரசுகளைப் பகைக்காதிருக்க வேண்டும் என்பதற்காகவும் இதுபோன்ற ’கொளுத்திப்போடும் நரித்தன’ நடவடிக்கைகளையும் நகர்வுகளையும் ரணில் அரசாங்கம் கைவிட வேண்டும். பொருளாதார மீட்சிக்கான ஏது நிலைகளைப் பற்றிச் சிந்திக்காமல் மீண்டும் மீண்டும் இவ்வாறான சகுனியாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதானது இலங்கையை ஒருபோதும் மீள முடியாத பின்னடைவுக்குள் தள்ளுமே அன்றி, இந்தக் குறைமட்டச் சிந்தனைகளால் இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
பேச்சுவாக்கில் ஒரு விடயத்தைக் கூறிவிட்டு, அதன்மூலம் மக்களின் அபிப்பிராயத்தை நாடி பிடித்துப் பார்ப்பதலிலும் ரணில் அரசாங்கம் கைதேர்ந்தது என்பதையும் இங்கு ஏற்றாகத்தான் வேண்டும். ஆதலால், வடக்குக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களை அனுமதிப்பது என்று வெளிப்படுத் தப்பட்டிருக்கும் கருத்துக்கும் அதன் மீதான பரிசீலனைகளுக்கும் ஓரணியில் நின்று மிகக்கடுமையானதும் கனதியானதுமான எதிர்ப்பை மக்கள் பிரதிநிதிகளும் பொது அமைப்புக்களும் வெளிப்படுத்தவேண்டும். அல்லாதுவிடின் வடக்குக் கடற்பரப்பும் வடக்கு மீனவர்களின் பொருளாதாரமும் வாழ்வாதாரமும் இந்திய றோலர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்புக்களால் மொத்தமாக விழுங்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.