இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களும், மீன்பிடி சாதனங்களும் உடனடியாகத் திருப்பி அனுப்பப்பட வேண்டும். அவ்வாறு அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்குத் தண்டனை வழக்கப்படும்போது மனித நேயத்துடன் அவர்கள் அணுகப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர் தமிழக மீனவர்கள். கச்சதீவு அந்தோனியார் திருத்தலத் திருவிழா நேற்றுமுன்தினம் மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, நேற்று நிறைவடைந்தது. நேற்றுமுன்தினம் மாலை இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பிலும் இதர பிணக்குகள் தொடர்பிலும் இரு தரப்பினரும் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். இதன்போதே இந்தக் கோரிக்கை இந்திய மீனவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடாதீர்கள், றோலர் படகுகளால் இலங்கைக் கடல்வளத்தை அழிக்காதீர்கள், இலங்கை மீனவர்களின் பொருளாதாரத்தைச் சிதைக்காதீர்கள், ஏற்கனவே பொருளாதாரத்தில் நொந்து நலிந்துபோயுள்ள இலங்கை மீனவர்களை வாழவிடுங்கள் என்ற கோரிக்கை வடமாகாண மீனவர்களால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அந்தக் கோரிக்கைகளை அப்பால் வைத்துவிட்டு, 'அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை நியாயமாக நடத்துங்கள். அவர்களை உடன் திருப்பியனுப்புங்கள்' என்றவாறாக முன்வைக்கப்படும் இந்தக் கருத்தானது, 'தமிழக மீனவர்கள் அத்துமீறுவதை இனியும் நிறுத்தப்போவதில்லை. அவர்கள் தம் மீன்பிடிக் களமாக வடக்குக் கடற்பரப்பையே கொண்டிருக்கின்றனர்' என்ற செய்தியதைத்தான் வெளிப்படுத்தி நிற்கின்றதே அன்றி வேறொன்றுமில்லை.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பானது பொதுவானதாக இருந்தாலும், இதனால் மிக அதிகமாக பாதிப்புக்களைச் சந்தித்தவர்கள் மீனவர்களே. 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் அதாவது புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்படாத காலத்தில் ஒருவாறாகவும், புலிகளின் ஆயுதங்கள் மௌனித்த பின்னர் இன்னொருவாறாகவும் என அவர்கள் தொடர்ச்சியான இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். வடமாகாண மீனவர்களின் இந்த சபிக்கப்பட்ட வாழ்க்கைக்கு பிரதான காரணகர்த்தாக்களாக தற்போது இருப்பவர்கள் தொப்புள்கொடி உறவுகளான தமிழக மீனவர்கள் என்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம். 'தாயும் பிள்ளையும் ஒன்றாகினும், வாயும் வயிறும் வேறு' என்பார்கள். இந்தப் புரிதலை தமிழக மீனவர்கள் பொதுப்புரிதலுடன் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின்போது சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக தமிழகத்தில் மீனவர்களின் குரல்கள் ஓங்கி ஒலித்தது. எமது நெருக்குவாரங்களை ௭ நாம் சந்தித்த பொருளாதாரப் பேரிடரை நன்கு அறிந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள். இதனால்தான் பல்வேறு காலகட்டங்களிலும் தமிழக மீனவர்கள் எமக்காக நின்றார்கள். அவரின் ஆதரவும் - ஈழத்தமிழர்களுக்காக வெளிப்படுத்திய குரலும் காலக்கண்ணாடியாக தமிழர் தாயகத்தின் நிலையை உள்ளது உள்ளபடியாகப் பறைசாற்றியது. இது இப்படியிருக்கையில் எமது துன்பங்களில் பங்கெடுத்தவர்கள், எமக்காக நின்றவர்கள், எம்மைத் தேற்றியவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக எம்மைப்பற்றி அறிந்தவர்கள் இன்று எமது வாழ்வையே சூறையாடிச் செல்வதென்பது எந்த வகையில் தகும்.
உணவை உண்ணக்கொடுத்துவிட்டு அதில் மண்ணைப்போடும் இந்தச் செயற்பாட்டை தமிழக மீனவர்கள் உடன் கைவிட வேண்டும். ஒரு சிறிய கோட்டுக்கு அருகில் அதைவிடப் பெரிய கோடொன்றை வரையும்போது அந்தச் சிறியகோட்டின் புலப்பாடு எவ்வாறு மங்கிப்போகுமோ, அவ்வாறு தமிழக மீனவர்கள் முன்னொரு காலத்தில் செய்த உதவிகளை, அவர்கள் தற்போது செய்கின்ற உபத்திரவங்கள் மங்கச்செய்து வருகின்றன என்பதே உண்மையும் யதார்த்தமும். இந்த நிலைமை நீடித்துத் தொடர்வதால் ஏற்படும் புகைச்சலும் பகையுணர்வும் தமிழக மீனவர்களுக்கும் நல்லதல்ல. ஈழத் தமிழர்களுக்கும் நல்லதல்ல.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.