வீதிப் போராட்டங்களால் ஆட்சி மாற்றம் என்பது இனிமேல் சாத்தியமில்லை என்று கூறியிருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. திருகோணமலை கடற்படைத் தளத்தில் நேற்று நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் வீரியம் கொள்ள ஆரம்பித்திருக்கும் நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தக் கூற்றை ஒரு எச்சரிக்கை என்றும் எடுத்துக்கொள்ள முடியும்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சியடைந்து வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாமல் சில மாதங்களுக்கு முன்னர் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கினார்கள். மக்களின் போராட்டம் காரணமாக ராஜபக்சக்களின் அரசாங்கம் வீழ்ச்சியுற, கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பதவிக் கதிரையில் ஏறினார் ரணில் விக்கிரமசிங்க. நாட்டின் மீட்பர் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, தான் பதவியேற்றது முதல் மக்களின் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டே அடக்கி வருகின்றார்.மக்களின் போராட்டம் வீரியம் கொண்டால் அது தனது பதவிக்கு ஆபத்தாக மாறும் என்பதை நன்குணர்ந்த ரணில் விக்கிரமசிங்க அவ்வாறான ஜனநாயகப் போராட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட முனைகின்றார். அண்மைய நாள்களில் நாட்டின் தலைநகரில் நடந்த போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட விதம் அதற்குச் சாட்சியாகின்றது.
புதிய வருமான வரிக் கொள்கை, மின்சாரக் கட்டண உயர்வு என்று மக்கள் மீது பெரும் சுமைகள் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், நாட்டின் வங்குரோத்து நிலைக்குப் பிரதான காரணகர்த்தாக்களான ராஜபக்சக்கள் இப்போதும் சுகபோகத்திலேயே திளைக்கின்றனர். அப்பாவிப் பொதுமக்கள் மீது தன் கடும் முகத்தைக் காண்பிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உண்மையில் பொருளாதாரக் குற்றவாளிகள் மீது அந்த முகத்தைக் காட்டுவதே நியாயம். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவோ அதற்கு மாறாக தற்போதும் ராஜபக்சக்களைக் காப்பாற்றும் கைங்கரியத்தையே தன் முதல்பணியாகச் செய்து கொண்டிருக்கின்றார்.
போராட்டங்களால் நாட்டின் பொருளாதார மீளெழுச்சி தள்ளிப்போகும் என்ற அரசாங்க தரப்பு வாதம் சரியே என்றபோதும், மக்களின் குரலைச் செவிமடுக்க வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்துக்கு இருக்கின்றது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு தற்போது ஆட்சியில் உள்ளவர்களும், அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களுமே முதன்மைக் காரணம் என்பது பரகசியமான நிலையில், அப்பாவி மக்களின் தலையில் நெருக்கடியின் முழுப் பாரத்தையும் சுமத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.ரணில் விக்கிரமசிங்கவின் இந்த அடக்குமுறைப்போக்குக்கு உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளபோதும், அவர் தொடர்ந்தும் சர்வாதிகாரப் போக்கிலேயே செயற்படுகின்றார். அதனையே அவர் திருகோணமலையில் விமானப்படையினர் முன்பாகக் கூறிய கருத்தும் கட்டியம் கூறுகின்றது.ஒருபோதும் சர்வாதிகாரம் நாட்டுக்கு விடிவைத் தராது. அத்தோடு சர்வாதிகாரிகளின் முடிவும் நல்லபடியாக அமைந்ததில்லை. ரணில் இதனைக் கொஞ்சம் உணர்தல் நல ம்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.