பருத்தித்தீவில் சீனர்களின் நடமாட்டம் தொடர்பான செய்தி “உதயனில்” வெளியான மறுநாளே பருத்தித்தீவில் இருந்து பொருள்கள் அவசர அவசரமாக இடமாற்றப்பட்டிருக்கின்றன. அந்தப் பொருள்கள் என்ன என்பதும் - யாரின் உத்தரவுக்கு அமைய அவை இடமாற்றப்பட்டன என்பதும் இன்னும் இரகசியமாகவே இருக்கின்றது.பருத்தித்தீவு அன்மைக்காலமாக இலங்கைத்தீவையும் தாண்டி, பெரும் பேசுபொருளாகியிருந்து. ஆள்களற்ற அந்தச் சிறு தீவில் சீனர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றது என்ற குற்றச்சாட்டு பரலாக முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், கடலட்டைப் பண்ணை என்ற போர்வைக்குள் அவர்களின் நடமாட்டங்கள் மறைக்கப்பட்டன. சீனர்களின் முதலீட்டுடன் கடலட்டைப் பண்ணைகள் அமைப்படுகின்றன என்று சப்பைக்கட்டுக்கள் கட்டப்பட்டன. அதன்பின்னர் பருத்தித்தீவில் சீனர்களின் ஆதிக்கம் மறக்கப்பட்டிருந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் அங்கு சீனர்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.
போரின் பின்னர் இலங்கையைத் தனது ஆதிக்கத்துக்குள் கொண்டுவரும் முயற்சிகளை சீனா முழுவீச்சாக ஆரம்பித்திருந்தது. தெற்கில் அழுத்தமாகத் தனது கால்களைப் பதித்த சீனாவுக்கு வடக்கு =கிழக்கில் கால் பதிப்பது சிரமமானதாகவே இருந்தது. இந்தியாவின் எதிர்ப்பும் - தமிழ் மக்களின் ஆதரவின்மையும் சீனாவுக்குப் பெரும் சிக்கலாகவே இருந்தன. அதனால் சீனா உதவிகள் என்ற பெயரிலும், மறைமுகமாகவும் தனது ஆதிக்கத்தைத் தமிழர் பகுதிகளில் நிலைநிறுத்த முயற்சித்தது.
போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் கடலட்டைப் பண்ணைகள் என்ற பெயரில் அதிகளவான சீனத் தலையீடுகள் அறியப்பட்டிருந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் என்ற ரீதியில் அவை ஆரம்பிக்கப்பட்டு, அந்தப் பண்ணைகளால் மிகப் பெரும் இலாபம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை மக்கள் மனங்களில் ஊட்டப்பட்டன. அதனால் இந்தக் கடலட்டைப் பண்ணைகளுக்கு மக்கள் மத்தியிலும் சற்று வரவேற்பு இருந்தது. வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட பெரும்பாலான கடலட்டைப் பண்ணைகளின் பின்னணியில் சீனாவைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றமை பரகசியம். பருத்தித்தித்தீவில் சீனர்களின் நடமாட்டம் பற்றிய சர்ச்சை எழுந்தபோதும், கடலட்டைப் பண்ணைக் கதையே கூறிச் சமாதானப்படுத்தப்பட்டிருந்தது.
பருத்தித்தீவில் இருந்த பொருள்கள் அவசர அவசரமாக படகுகள் மூலம் இடமாற்றப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்த கடலட்டைகளும் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றன. அங்கு 40 ஆயிரம் கலட்டைகள் விடப்பட்ட நிலையில் வெறும் 100 கடலட்டைகளே அறுவடை செய்யப்பட்டுள்ளமை அந்தப்பகுதி கடலட்டைப் பண்ணைக்குப் பொருத்தமேயில்லாத ஒரு இடமென்பது உறுதியாகிவிட்டது. அப்படிப் பொருத்தமற்ற இடத்தில்தான் கடலட்டைப் பண்ணையை அமைக்க வேண்டுமென சீனா ஒற்றைக்காலில் நிற்பது ஏன்? இவ்வாறு பெரும் நட்டத்தில் பருத்தித்தீவில் கடலட்டைப் பண்ணைகளை நடத்த வேண்டிய தேவை என்ன ? என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. இந்தக் கடலட்டைப் பண்ணையை விடவும் வேறு ஏதோ ஒரு விடயத்துக்காகவே-சொல்லப்படமுடியாத ஆதாயத்துக்காகவே= பருத்தித்தீவு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்றே கருத வேண்டியிருக்கின்றது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இலங்கையில் அவர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு - அவர்களுக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் ஆர்வம் காட்டும் நாடுகள் பூகோளரீதியிலான இலங்கையின் முக்கியத்துவத்தைக் கொண்டே தமிழர் பிரச்சினைகளை கையாள்கின்றன. தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் - உதவிகள் என அனைத்தின் பின்பும் இந்த நோக்கே முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த அபிவிருத்திகள் - உதவிகளின் பின்னுள்ள நோக்கங்களை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக அபிவிருத்திகள் - உதவிகள் என்ற மாயைக்குள் சிக்கிவிடக்கூடாது.அதற்கு பருத்தித்தீவு நல்லதொரு உதாரண ம்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.