அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு எதிராகவும் அந்தத் திருத்தம் அரசமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் பௌத்த மகா சங்கத்தினர் பெரும் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். '13 ஆவது திருத்தத்தின் நகலைத் தீயிட்டு எரித்தமையில் ஒரேயொரு வேட்டுத்தான் தீர்க்கப்பட்டது. அதன் தொடர்ச்சியான வேட்டுக்கள் இனித்தான் தீர்க்கப்படும். இதை முன்னிட்டு, மிகிந்தலையில் பிரமாண்டமான போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது' என்று 13ஆவது திருத்தத்தை கடுமையாக எதிர்க்கின்ற = நாட்டின் முதன்மைப் பௌத்த பீடங்களுக்கு நெருக்கமான =வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
13 ஆவது திருத்தம் என்பது தமிழர்களின் 70 ஆண்டுகாலப் போராட்டங்களுக்கும், நீறுபூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்குமான இறுதித் தீர்வு அல்ல. 13 ஆவது திருத்தத்தை தமிழர்கள் தமது தீர்வாக இதுநாள் வரையில் ஏற்றுக்கொள்ளவில்லை. தமது பிரச்சினைகளுக்கான தீர்வாக மட்டுமல்ல =தீர்வின் ஆரம்பப்புள்ளியாகக்கூட 13இனை ஏற்றுக்கொள்வதற்குத் தமிழர்கள் தயாரில்லை. ஆகவே 13 ஐ நிராகரித்து, சமஷ்டித் தீர்வு கோரிப் போராட வேண்டியது தமிழர்கள் தான். ஆனாலும் சுயநலமான தமிழ் அரசியல்வாதிகள் தமது வாக்குவங்கியை நிரப்புவதில் மட்டுமே குறியாக இருப்பதால், மக்களை ஒன்றுதிரட்டி அரசியல்தீர்வு கோரிப் போராடும் நிலை இப்போதில்லை. தமிழ் மக்களை அரசியல்வாதிகள் கைவிட்டபோதும், பிக்குகள் கைவிடுவதாக இல்லை. அதனால் தான் தமது 'ஆன்மிக' வேலைகளையெல்லா மூடைகட்டி வைத்துவிட்டு, 13 ஐ எதிர்த்து போராடக் கிளம்பியிருக்கிறார்கள். எனவே அந்தத் தேரர்களுக்கு தமிழர்கள் கோடிமுறை நன்றி சொன்னாலும் தகும். ஆனாலும் , தேரர்கள் ‘13’ என்றாலே பேயைக் கண்டது போல அலறியடித்து, வீதிக்கு போராட வருவது ஏன் என்று தெளிதலும் இங்கு அவசியம்.
13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழர்களுக்குக் காணி, பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்படும். அவ்வாறு பகிரப்படும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் நாடு துண்டாடப்படுவதற்கு எதுவான அனைத்து வாய்ப்புக்களையும் ஏற்படுத்தும் என்பதுதான் இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் சொல்லப்படும் காரணம். தமிழர்களின் கோரிக்கை சமஷ்டி என்பதாக இருக்கையில், காணி, பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கிய ஒரு தீர்வுப்பொதியைத் தருவதுகூட பிக்குகளுக்கு குடைச்சலாக இருக்கின்றது. இப்பிடிக் ஏதோ போகிற போக்கில் கிள்ளித் தெளிக்கும் அதிகாரங்களைப் பகிரும் 13 ஆம் திருத்தத்தையே ஜீரணிக்க முடியாத பிக்குகள், சமஷ்டியையோ அல்லது மத்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தவும் திரும்பப்பெற முடியாததுமான அதிகாரங்களையோ தமிழர்களுக்கு வழங்க அரசாங்கம் முடிவெடுத்தால் நாட்டைச் சுடுகாடாக்கி விட்டுத்தான் ஓய்வார்கள் போலும்.தமிழர்களுக்கு எந்தவொரு நன்மை கிடைத்தாலும் அதற்கு எதிராகப் போராடுவதென்பது பிக்குகளின் பிறவிக்குணம்.
13ஆவது திருத்தத்தை இப்போது வீதிக்கு இறங்கி எரிக்கும் இந்தக் காவிகள் , அந்தத் திருத்தம் கொண்டுவரப்படமாலேயே தடுத்திருக்கலாமே. இப்போது கூட அவர்கள் தமக்கு இசைவான அரசியல்வாதிகள் மூலம் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து அரசமைப்பிலிருந்து 13 ஐ முற்றாக நீக்கலாம்தானே. ஆனால் அப்படி அவர்கள் செய்யமாட்டார்கள். தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படப்போகின்றன என்று போராட்டத்தை மேற்கொள்ளும் தேரர்கள், ’13 ஆவது திருத்தத்தை அரசமைப்பிலிருந்து முற்றாக நீக்குங்கள். அதை அரசமைப்பில் இருந்து இல்லாமல் செய்வதற்குத் தேவையான முன்மொழிவைக் கொண்டுவாருங்கள் ’என்று ஏன் இதுநாள் வரையில் போராடவில்லை? இந்தியாவைப் பகைக்காத வகையிலான - இராஜதந்திர நடவடிக்கைகளையும் உறவுகளையும் குலைக்காத வகையிலான எதிர்ப்பொன்றுதான் இதுவிடயத்தில் தேவை என்ற புரிதலுடன்தான் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன . இதன்பின்னால் கண்ணுக்குத் தெரியாத பல நுண்ணரசியல்களும் உள்ளடங்கியிருக்கின்றன.
13 ஆவது திருத்தத்தை எதிர்க்கும் முதுகெலும்புத்தனம் உங்களுக்கு(தேரர்களுக்கு) இருக்கின்றது எனில் அதை முற்றாக எதிர்த்து நில்லுங்கள். முடிந்தால் அதை அரசமைப்பிலிருந்து தூக்கிக்கடாசுங்கள். அப்போதுதான் தமிழர்களுக்கு 13 ஐக் கூட சிங்களப் பேரினவாதமும், பௌத்தமும் வழங்கப் போவதில்லை என்பது இன்னொருமுறை உலகுக்கு முன்னால் அம்பலமாகும்
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.