’இராமாயணத்தில் வரும் எல்லாப் பாத்திரங்களும் முஸ்லிம்களே. ராவுன் என்பதே இராவணனாகவும், ரஹ்மான் என்பதே இராமனாகவும், சைய்யிதா என்பதே சீதை என்பதாகவும் பின்னர் திரிபடைந்து விட்டன. அதனால் தான் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கட்டப்பட்ட பாலத்தைக் கூட இஸ்லாமியரின் முதல் மனிதரான ஆதம் கட்டியதாகப் பொருள்படும் வகையில் ஆதம் பாலம் என்று கூறுகிறார்கள். எனவே இலங்கை சிங்களவர்களினதோ தமிழர்களினதோ தாயகம் அல்ல, அது முஸ்லிம்கள்ன் பூர்விக நிலம்’ -
இப்படியான ‘அதிமேதாவித்தனமான’ கண்டுபிடிப்புகளால் இலங்கை மக்களிடையே அதிகம் பிரபலமானவர் உலாமாக் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் . அவர் கட்சியில் தலைவர் , செயலாளர், பேச்சாளர், தொண்டர் எல்லாம் அப்துல் மஜீத் என்ற ஒற்றை மனிதர் மட்டுமே. இப்படி ஒரேயோரு ஆளை மட்டும் கொண்டியங்கும் கட்சியை வைத்திருந்தாலும், எல்லாப் பெயருக்கும் ஏதேனும் சம்பந்தமில்லாத முஸ்லிம் சாயத்தைப் பூசி, அதை தன்னுடைய கண்டுபிடிப்பாக பேசி, முஸ்லிம் மக்களே கிண்டலடிக்கும் அளவுக்கு ஒரு உளறிகொட்டியதாலேயே அவர் பிரபலமானார். இப்படி சம்பந்தமேயில்லாமல் வாயில் வந்ததையெல்லாம் அடித்துவிடுவதில் ஒப்பாரும் மிக்காருமில்லாதவராக விளங்கிய அப்துல் மஜீத்துக்கு இப்போது ஒரு போட்டியாளர் முளைத்திருக்கிறார். அவர் வேறு யாருமல்லர்,பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலையே அந்தப் போட்டியாளர்.
யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதியுதவியோடு அமைக்கப்பட்ட கலாசார மத்திய நிலையத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வுக்காக பலாலி சர்வதேச விமானநிலையத்தினூடாக வந்திறங்கிய இந்தியக்குழுவில் பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் அண்ணாமலையும் ஒருவர். வந்தவர் அப்படியே பயணக்களைப்புக் கூட மாறாமல் கம்பன் கழக விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது ‘ இலங்கைக்கு வந்த இராமருக்கு பாலாலயம் செய்யப்பட்ட இடமே இப்போது பலாலி என்றழைக்கப்படுகின்றது’ என்று போட்டாரே ஒரு போடு! சுற்றி நின்ற பேரறிஞர் கூட்டமெல்லாம் உச்சி குளிர்ந்து ‘அட இந்த உண்மை எங்களுக்குத் தெரியாமல் போயிற்றே’ என்று கம்பனைக் கரைத்துக் குடித்த அந்தப் பேரறிஞர் கூட்டத்தினர் வெட்கித் தலைகுனிந்ததோடு, பின்னர் கரவொலியெழுப்பி அண்ணாமலையின் இந்த அரிய கண்டுபிடிப்பை பாராட்டவும் செய்தனர். அண்ணாமலையின் இந்தக் கண்டுபிடிப்பைக் கேட்டறிந்தால் ,உளறலுக்குப் பேர்போன மௌலவி அப்துல் மஜீத் நாட்டை விட்டே தப்பியோடியிருப்பார்.
இப்போது சமூகவலைத்தளங்களில் அண்ணாமலையின் பலாலி உருவான கதைதான் வைரல். பொருளாதார நெருக்கடியால் துவண்டு போயிருந்த பலரும் விழுந்துவிழுந்து சிரிக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியமைக்காக அண்ணாமலையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அண்ணாமலை இப்படி சகட்டுமேனிக்கு வாய்க்கு வந்ததை அவிழ்த்துவிடுவது இதுவொன்றும் முதல்முறையல்ல. அவரை இந்தியப் பொலிஸ் துறையில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்துவிட்டு திடீரென அந்தப் பதவியை உதறினார். ‘ஆடு வளர்க்கிறேன். ஐ.பி.எஸ் வருமானத்தை விட அதிகம் உழைக்கிறேன்’ என பேட்டிகளும் கொடுத்தார். ஆனால் சில நாள்களில் பா.ஜ.கவில் இணைந்தார். இப்போது ஆடுகளையும் காணோம், அந்த இலட்ச ரூபா வருமானத்தையும் காணோம். இப்படி பலவித உருட்டல்களை வாய்கூசாமல் அடித்துவிடுகின்ற அண்ணாமலை வழக்கம் போல அண்மையில் ‘ரபேல் விமானத்தை தயாரிக்கும் பாகங்களால் உருவான பல லட்சம் ரூபா பெறுமதியான கைக்கடிகாரத்தைக் கட்டியிருக்கிறேன்’ என்று சொல்லி, பெரும் சர்ச்சையில் சிக்கினார். கடைசியில் தான் சொன்னது பொய் என்பதை ஒத்துக்கொள்ளாமல் ஏதேதோ கம்பிகட்டும் கதையெல்லாம் சொல்லி மழுப்பியிருந்தார். தமிழ்நாட்டில் வேகமறுத்த அவரது பருப்பை இங்கே பலாலியின் பேரால் வேகவைக்கப் பார்த்திருக்கிறார் அண்ணாமலை. ஆனால் அவரது துரதிர்ஷ்டமோ, என்னவோ இங்கும் அவரது பருப்பு வேகவில்லை. மாறாக இராமரின் பெயரைச் சொல்லி இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு வரலாற்றை வளைப்பவர்களா எமக்கு விடிவைத் தரப்போகிறார்கள் என்ற மனவேதனையில் தமிழ் மக்களை அண்ணாமலை வேகவைத்ததுதான் மிச்சம். மகாவம்சக் கதைகளின் புனைவுகளுக்கும், அண்ணாமலையின் புனைவுகளுக்கும் என்ன வித்தியாசம்? மகாவம்சப் புனைவுகளின் மாயையில் இருந்து மீளாததால் தான் இந்த நாடே இப்படி எரிந்துகொண்டிருக்கிறது. அந்த எரிவு போதாதென்று அண்ணாமலை வகையறாக்கள் கொண்டுவந்து கொட்டும் புதிய புனைவுகள் இந்த நாட்டை இன்னும் நாசமாக்குமே தவிர , விமோசனத்தை தராது. இனிமேல் யாழ்ப்பாணத்துக்கு வரும் எண்ணம் அண்ணாமலைக்கு இருந்தால், பின்வரும் குறளை ஒருமுறை அவர் படித்துவிட்டு வருவது நல்லது.
’எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”
a1mzqc
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.