ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு மேலும் இரு உறுப்பினர்கள் கடந்த 19 ஆம் திகதி உள்வாங்கப்பட்டனர். அதிகாரங்கள் இருந்தும் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியிலேயே இந்த இருவருக்கும் அமைச்சுப் பதவிகளை ரணிலால் வழங்க முடிந்ததாம்.
இதன்படி வனஜீவராசிகள் மற்றும் வன வளப் பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சியும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஜீவன் தொண்டமானும் பதவியேற்றுள்ளனர்.
மொட்டுக் கட்சியின் சார்பில் 8 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் பஸில் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், இந்தக்க் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்கமறுத்தார். அதேபோல சுதந்திர தினத்துக்கு பின்னரே அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு இ.தொ.கா. முன்வந்ததால் அதன் பொதுச்செயலாளருக்கு அமைச்சுப் பதவி வழங்க நேரிட்டது. அத்துடன், ஆளுநர் நியமனத்தின்போதும் இ.தொ.கா. உறுப்பினர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் இல்லை என்பதால் பவித்ராவை உள்வாங்குவதற்கும் திட்டமிடப்பட்டது. ஆனால் இவர்களுக்கு என்ன அமைச்சுப் பதவிகளை வழங்குவது என்பது குறித்து சிக்கல் ஏற்பட்டது.
ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சுப் பதவிகளை வைத்திருந்த அமைச்சர்களிடம், ஒரு அமைச்சுப் பதவியை விட்டுக்கொடுக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார். இதற்கு அமைச்சர்கள் உடன்படவில்லையாம். பின்வாங்கியுள்ளனர்.
இறுதியில் நெருக்கடி நிலைமையைத் தவிர்ப்பதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீரவும், கெஹலிய ரம்புக்வெலவும் தம்வசம் உள்ள அமைச்சுகளில் ஒன்றைத் தியாகம் செய்தனர். அவையே முறையே பவித்ரா, ஜீவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தோட்ட உட்கட்டமைப்பு என்ற விடயமும் ஜீவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தான் கோரியும் அமைச்சு விடயதானங்களை விட்டுக்கொடுக்கப் பின்வாங்கிய சில அமைச்சர்கள் தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தியில் உள்ளாராம். விரைவில் அவர்களுக்கு ரணில்பாணியில் ஆப்பு நிச்சயம்.
அதிருப்தி
..
உள்ளாட்சிமன்றத் தேர்தலில் பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிட கடைசி நேரத்தில் அனுமதி கிட்டாததால், முக்கியமான அரசியல்வாதிகளின் தீவிர செயற்பாட்டாளர்கள் சிலர் கடும் அதிருப்தியில் உள்ளனராம்.
தேர்தல் காலங்களில் ‘போஸ்டர்’ ஒட்டுதல், கூட்டங்களுக்கு ஆட்களைக் கூட்டிவருதல், பாதுகாப்பு என அரசியல்வாதிகளுக்கு எல்லா விதத்திலும் தீயாகச் செயற்படும் செயற்பாட்டாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் முன்னுரிமை, உள்ளாட்சிமன்றத் தேர்தல்போன்ற விடயங்களில் முக்கியத்துவம் வழங்கப்படுவதுதான் இலங்கையின் அரசியல் ‘ஸ்ரைல்’.
எனினும், பிரதான கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதால் எல்லாருக்கும் வாய்ப்பு வழங்குவதில் சிக்கல். இதனால் பலருக்கும் ஏமாற்றம். கடந்த முறை சுழற்சி முறையில் அங்கத்துவம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தாலும், பலருக்கு அந்த வாய்ப்புக் கிட்டவில்லை.
இந்த நிலையில் நியமனச் சீட்டு கட்டாயம் வழங்கப்படும் என்ற உறுதிமொழி தற்போது செயற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றதாம். இதை நம்புவதற்கு அவர்கள் தயாரில்லையாம்.
இதனால் அதிருப்தியில் உள்ள செயற்பாட்டாளர்களில் சிலர் சுயாதீனக் குழுக்களை ஆதரிக்கவும், மேலும் பலர் கட்சி மாறவும் முடிவெடுத்துவிட்டனராம். அவ்வாறானவர்களைப் பணம் வழங்கி குஷிப்படுத்துவதற்கான முயற்சிகளும் இடம்பெற்றுவருகின்றனவாம்.
ஸஸஸ
விடை கொடு
...
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன விரைவில் ஓய்வுபெறவுள்ளாராம்.
ஜனாதிபதி தரப்பில் இருந்து தமக்குப் பதவி நீடிப்புக் கிடைக்காது என்பதை அறிந்து வைத்துள்ள அவர், பெப்ரவரி இறுதிக்குள் ஓய்வில் செல்லவுள்ளாராம்.
மே 9 ஆம் திகதி ஏற்பட்ட மக்கள் புரட்சியின்போது அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அரசியல்வாதிகள் பலரினதும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இதனால் கடுப்பான அரசியல்வாதிகள், பொலிஸ்மா அதிபர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.’ தாக்குதல்களைத் தடுக்கத் தவறிவிட்டார், அவரை உடன் பதவி நீக்க வேண்டும்’ எனவும் வலியுறுத்தினர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே முன்கூட்டியே ஓய்வுபெற்றுச் செல்ல பொலிஸ்மா அதிபர் திட்டமிட்டுள்ளாராம். சிலவேளை உள்ளாட்சிமன்றத் தேர்தல் நடக்கும் பட்சத்தில் ,தேர்தல் முடிந்த பின்னரே அவர் ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸஸஸ
பல்டிக்கு ரெடி!
..
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விரைவில் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்கவுள்ளாராம்.
ஜனாதிபதியின் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே, அவர் ஆளுங்கட்சிப் பக்கம் தாவவுள்ளாராம்.
இதற்கான பேச்சு ஏற்கனவே வெற்றிகரமாக முடிந்துவிட்டதால்- தேர்தலுக்கு முன்னர் தாவுவதா அல்லது தேர்தல் முடிந்த பின்னர் பல்டி அடிப்பதா என்பது பற்றி தற்போது பரீசிலிக்கப்பட்டுவருகின்றதாம்.
ஸஸஸ.
முஜிபுர் எதிர் பைஸர்
..
உள்ளாட்சிமன்றத் தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கான மேயர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மானை களமிறக்குவதற்கு சஜித் எடுத்த முடிவுக்கு அந்தக்கட்சியின் எம்.பி.க்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனராம்.
எனினும், இது விடயத்தில் தனது முடிவை மாற்ற முடியாது என்பதில் சஜித் உறுதியாக உள்ளாராம்.
அதேவேளை, கொழும்பு மாநகரசபைக்கான மேயர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவை களமிறக்க ஐக்கிய தேசியக்கட்சி= மொட்டு கட்சி கூட்டணி ஆராய்ந்துவருகின்றதாம்.
இதன்காரணமாகவே சுதந்திரக்கட்சி யில் இருந்து பைஸர் முஸ்தபா விலகியுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.