கர்ணன் மகாபாரத காப்பியத்தில் இடம் பெறும் மைய கதாப்பாத்திரங்களுள் ஒருவர்.இவர் "வசுசேனன்" "அங்க-அரசன்", "இராதேயன்" என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டார். அவர் அங்க நாட்டின் (தற்போதைய பாகல்பூர் மற்றும் முங்கர்) அரசராக இருந்தார்.கர்ணனைப் போரில் வீழ்த்தக்கூடிய வல்லமை பெற்ற ஒரு வீரர் அகிலத்தில் எவரும் இல்லை என்று கிருஷ்ணன் உரைத்தார். ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் பீஷ்மரினால் மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கர்ணன் கருதப்பட்டார்.
கர்ணன் (வலது) எதிர்கொள்பவன் அருச்சுனன்.
இவர் சூரியன் மற்றும் இளவரசி குந்தியின் (பாண்டவர்களின் தாய்) மகனாவார். குந்தி, அவள் விரும்பும் கடவுளிடமிருந்து அவரது அம்சமாக ஒரு குழங்தைக் கிடைக்கக்கூரிய வரத்தைப் பெற்றிருந்தாள். அவ்வரத்தைச் சோதித்துப் பார்க்கும் ஆர்வத்தில் திருமணத்திற்கு முன்னரே சூரியனை வேண்டியதால் அவளுக்குப் பிறந்த குழந்தைதான் கர்ணன். திருமணத்திற்கு முன் குழந்தை பெற்றதால் பிறரது ஏச்சுக்கு அஞ்சிய குந்தி குழந்தையை ஒரு கூடையில் வைத்து கங்கை ஆற்றில் விட்டுவிடுகிறாள். அதிரத நந்தனன் மற்றும் இராதை இணையரால் கங்கையிலிருந்து குழந்தை கர்ணன் மீட்கப்பட்டு வளர்க்கப்பட்டான்.அதிரத நந்தனன் திருதராட்டிரன் அரசில் தேரோட்டியாகவும் கவிஞராகவும் இருந்தான்.
கர்ணன் திறமையான போர் வீரனாகவும் பேச்சாளனாகவும் வளர்ந்தான். துரியோதனனின் சிறந்த நண்பனாக விளங்கினான். துரியோதனனால் அங்க நாட்டின் (பீகார்-வங்காளம்) அரசனாக ஆக்கப்பட்டான்.குருச்சேத்திரப் போரில் கர்ணன் துரியோதனன் பக்கமிருந்து போரிட்டான். பாண்டவர்களில் மூன்றாவதான அருச்சுனனைக் கொல்லும் திறமையுடையவனாக இருந்தும் அவனுடன் நடந்த சண்டையில் கர்ணன் கொல்லப்பட்டான்.
அரிசுட்டாட்டிலின் "வழுவுள்ள நல்ல மனிதன்" ("flawed good man") போலக் கர்ணன் மகாபாரத்தின் சோகக் கதாநாயகன் ஆவான்.மகாபாரதக் கதையின்படி வெகுநாட்களுக்குப் பின்னரே கர்ணன், குந்திதான் அவனைப் பெற்றடுத்த தாய் என்பதையும் அவன் எதிர்த்துப் போரிடும் பாண்டவர்கள் அவனுக்கு ஒருவழிச் சகோதரர்கள் என்பதையும் அறிந்துகொள்கிறான். சூழ்நிலையின் காரணமாக உற்ற உறவினர்களால் புறக்கப்பட்டவனாகவும் உண்மையான நண்பனுக்காகத் தனது அன்பையும் உயிரையும் கொடுக்கச் சித்தமாக உள்ளவனாகவும் மகாபாரத்தில் கர்ணனின் பாத்திரம் அமைந்துள்ளது. கடமை, தருமம், நன்னெறி ஆகியவற்றில் எழும் முரண்பாடுகளை எடுத்துக்காட்டும்விதமாக கர்ணனின் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் இந்து கலைமரபில் பலவகையான கவிதைகள், நாடகங்கள், படைப்புகள் தோன்றக் கர்ணனின் கதை தூண்டுதலாக அமைந் தது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.