யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக்கின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் வைத்து இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனப் பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ். உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் இம்மானுவல் ஆனல்ட் தரப்பினரே இந்த தாக்குதலை மேற்கொண்டனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நேற்றுக் காலை 33 கழகங்களின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக்கின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.
இதன்போது தலைவர் பதவிக்காக தற்போதைய தலைவர் இமானுவேல் ஆனல்ட் மற்றும் யாழ். பல்கலைக்கழக உடற்கல்வித்துறை விரிவுரையாளர் மா.இளம்பிறையன் ஆகியோரும், செயலாளர் பதவிக்காக
அஜித்குமார் மற்றும் பகீரதன் ஆகியோரும் போட்டியிட்டனர்.
பொதுக்கூட்டத்தை நடத்துவதற்காக யாழ்ப்பாண உதைபந்தாட்ட கவுன்சில் 03 நபர்களை தீர்மானித்திருந்த நிலையில் நேற்றைய கூட்டத்துக்கு ஒருவரே வருகை தந்திருந்தார்.
நேற்றைய கூட்டத்தில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் 04 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ்.உதைபந்தாட்ட லீக்குக்குக் கடிதம் கிடைத்த நிலையில் அவர்களும் கொழும்பில் இருந்து வருகை தந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன யாப்பின்படி ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் தலைவராகவோ செயலாளராகவோ இருக்க முடியாது என கூட்டத்தில்
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இ.ஆனல்ட் 2016ஆம் ஆண்டிலிருந்து தலைவராகவும் அஜித்குமார் 2013ஆம் ஆண்டிலிருந்து செயலாளராகவும் செயற்பட்டு வரும் நிலையில் அவர்கள் போட்டியில் கலந்துகொள்ள முடியாது என இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினரால் தெரிவிக்கப்பட்டது. இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் இவர்கள் போட்டியிட முடியாது எனக் கடிதம் அனுப்பியதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்காத இமானுவேல் ஆனல்ட் தரப்பு யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக்கின் சட்டப்படி தலைவருக்கு கால வரையறை இருக்கவில்லை என தெரிவித்தால் அங்கு முரண்பாடு தோன்றியது.
இதன்போது இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன பிரதிநிதிகள் ஆனல்ட் மற்றும் அவர் தரப்பை சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து உதைபந்தாட்ட சம்மேளனத்தினரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்மேளனத்தினர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து இடம்பெற்ற கூட்டத்தில் இமானுவேல் ஆனல்ட் மீண்டும் தலைவராகவும் அஜித்குமார் மீண்டும் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
உதைபந்தாட்ட சம்மேளனத்தினர் தாக்கப்பட்டமைக்கு விளையாட்டு ஆர்வலர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில்
யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக் 05 வருடங்களுக்கு தடை செய்யப்படலாம் என இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் தெரிவித்துள்ளார்
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.