மேற்கு சுவிட்சர்லாந்திலுள்ள Yverdon-les-Bains என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்று திடீரென தீப்பிடித்ததில் அந்த வீட்டில் வாழ்ந்த 45 வயது ஆண் ஒருவர், 40 வயது பெண் மற்றும் 13, 9 மற்றும் 5 வயதுடைய குழந்தைகள் மூவர் என மொத்தக் குடும்பமும் தீயில் எரிந்து பலியானதாக தகவல் வெளியானது.
ஆனால், தற்போது அந்த குடும்பத்தின் தலைவர், வீடு தீப்பற்றுவதற்கு முன், தன் மனைவி மற்றும் பிள்ளைகளை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து Vaud மாகாண பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த வீட்டில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதாகவும், பெரிய வெடிச்சத்தம் கேட்டதாகவும் அக்கம் பக்கத்தவர்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன், உடற்கூறு ஆய்விலும் அவர்கள் அனைவருமே துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதால், யாரோ துப்பாக்கியால் சுட்டதில் அவர்கள் பலியாகியிருக்கலாம் என்ற கருத்தும் உருவாகியுள்ளது.
மேலும், எரிந்த உடல்கள் கிடந்த இடத்தில், அந்த தந்தையின் உடல் அருகே துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அவர் தன் மனைவி பிள்ளைகளை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தன்னைத்தான் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் கருதுகிறார்கள்.
ஆனாலும், தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கிடையில், அந்த வீட்டின் பல அறைகளில் பெருமளவில் பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஆகவே, பொலிஸார் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.