யானைகளைக் கொல்லும் ஜிம்பாப்வே!
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆப்பிக்க நாடான ஜிம்பாப்வேயில் 200 யானைகளைக் கொன்று அதன் இறைச்சியை மக்களுக்கு உணவளிக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வறட்சியின் பிடியில் ஆப்பிரிக்க நாடுகள்
தென்னாப்பிரிக்காவில் எல் நினோ பாதிப்பு காரணமாக ஏற்பட்ட வறட்சியினால் பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு 68 லட்சம் மக்கள் வறட்சியின் பிடியில் சிக்கினர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது.
அதிகாரி கருத்து
இதுபற்றி ஜிம்பாப்வே பூங்கா மற்றும் வனவிலங்கு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் டினாஷே ஃபராவோ கூறுகையில், “நாடு முழுவதும் சுமார் 200 யானைகளை கொல்ல திட்டமிட்டுள்ளோம். நாங்கள் அதை எவ்வாறு செய்யப் போகிறோம் என்பதற்கான வழிமுறைகளில் நாங்கள் பின்பற்றி வருகிறோம். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஜிம்பாப்வேயில் உள்ள மக்களுக்கு யானை இறைச்சி விநியோகிக்கப்படும்.
1988 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டிலேயே முதன்முதலாக யானைகள் கொல்லப்படவுள்ளன. மேலும் அண்டை நாடான நமீபியா கடந்த மாதம் 83 யானைகளை கொல்வதற்கும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறைச்சியை வழங்குவதற்கும் எடுத்த முடிவை ஜிம்பாப்வேயும் பின்பற்றுகிறது.
55 ஆயிரம் யானைகள் வசிக்கக்கூடிய பூங்காவில் 84 ஆயிரத்துக்கும் அதிகமான யானைகள் உள்ளன. வறட்சியைக் குறைக்கும் முயற்சியாக முதலில் 200 யானைகள் கொல்லப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக ஒப்பிடும்போது இது மிகவும் குறைவுதான்.
இந்த மாதிரியான கடுமையான வறட்சியான சூழலில் உணவுக்காக மனித-விலங்கு மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 50 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.
ஹவாங்கே, மிபிரி, டிஸோலோட்சோ, ஷிரேட்ஷி ஆகிய மாவட்டங்களில் வாழக்கக்கூடிய யானைகள் முதற்கட்டமாக கொல்லப்படவுள்ளன.
ஜிம்பாப்வே, ஜாம்பியா, போட்ஸ்வானா, அங்கோலா, நமீபியா உள்ளிட்ட தென்னாப்பிரிக்க நாடுகளில் கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான யானைகள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.
உலகில் உள்ள மொத்த யானைகளில் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது அதிகளவிலான யானைகள் தென்னாப்பிரிக்க பகுதிகளில் தான் வாழ்கின்றன.
ஜிம்பாப்வே கோரிக்கை
யானைகளின் பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகப் பாராட்டப்படும் ஜிம்பாப்வே, தந்தம் மற்றும் உயிருள்ள யானைகளின் வர்த்தகத்தை மீண்டும் திறக்க அழிந்து வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கான ஐக்கிய நாடுகள் அவையின் மாநாட்டை நடத்த வலியுறுத்தியுள்ளது.
யானை தந்தங்கள்
ஜிம்பாப்வேயில் சுமார் 6,00,000 டாலர் (450,000 யூரோ) மதிப்புள்ள தந்தங்கள் விற்பனை செய்ய முடியாத வகையில் கையிருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை இந்திய மதிப்பில் ரூ.5 கோடிக்கும் அதிகமானதாகும். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.