யாழ்ப்பாணத்திலுள்ள தென்னைமரங்களில் வெள்ளை ஈக்களின் தாக்கம் அதிகமாக அவதானிக்கப்பட்டுள்ளது. வெள்ளை ஈக்கள் தேங்காய்களின் உற்பத்திக்கு மிகையான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியவை. இதன் தாக்கம் இலங்கையில் நீண்டகாலமாக இல்லாதிருந்த நிலையில், தற்போது யாழ்ப்பாணம், களுத்துறை, கம்பஹா, திருகோணமலை, கொழும்பு, குருநாகல், கண்டி, காலி, மாத்தறை, இரத்தினபுரி, புத்தளம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகள் இடர்பாட்டுக்குரிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதை ‘பேராபத்தான நோய்நிலை’ என்று அடையாளப்படுத்தி யிருக்கின்றது தெங்கு ஆராய்ச்சி நிலையம். தெங்கு ஆராய்ச்சி நிலையம் பட்டியலிட்டுள்ள இடங்களில் பெரும்பாலானவை தெங்கு முக்கோண வலயத்துக்குள் உள்ளடங்குகின்றன.
ஆதலால், இந்த நோய்நிலையை விரைந்து கட்டுப்படுத்தப்படாவிடின் அது நாட்டின் தேசிய தெங்குற்பத்தியில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது கசப்பானதும் மறுக்கப்பட முடியாததுமான உண்மையாகும்.
நான்கு பக்கமும் கடன்கள் சூழ்ந்து தத்தளித்துக் கொண்டிருக்கும் இலங்கைத்தீவு, கடன் மறுசீரமைப்புக்களையும் தற்காலிகக் கடனுதவிகளையும் மட்டுமே நம்பிக்கொண்டு காலத்தைக் கடத்திவிடமுடியாது. மாறாக ‘பொருளாதார உறுதிப்பாடு’ என்ற நிலையை எவ்வளவுக்கெவ்வளவு விரைந்து இலங்கை ஏற்படுத்துகின்றதோ அவ்வளவுக்கவ் வளவு இந்த நாடு கடன் சுமையில் இருந்து மீட்சிபெறும். இந்தப் பொருளாதார உறுதிப்பாட்டை அடைய வேண்டுமாயின் முதலில் தன்னிறைவு காணவேண்டிய துறைகளை இனங்கண்டு அவற்றைப் பலப்படுத்தவேண்டும். இலங்கை தன்னிறைவு காணக்கூடிய ஏதுநிலைகள் உள்ள துறையாக ‘தெங்கு’ காணப்படுகின்றநிலையில் இந்த விடயத்தில் விரைந்து செயற்படவேண்டிய தவிர்க்கமுடியாத்தனம் அரசாங்கத்துக்கு அதிகமாகவே இருக்கின்றது.
இதேவேளை வெள்ளை ஈக்கள் மட்டும்தான் தெங்குத்துறை எதிர்கொள்ளும் ஒரேயொரு அச்சுறுத்தலா? என்ற கேள்வியும் இங்கு எழுவது தவிர்க்கமுடியாததாகின்றது. ஏனெனில்,
நீண்டகாலமாக இடம்பெற்ற போரால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏராளம் தென்னைகள் அழிவடைந்தன. குறிப்பாக வடக்கில் தென்னை அதிகமாகப் பயிரிடப்பட்ட தென்மராட்சிப் பிரதேசத்தில் இருந்த 90 வீதமான தென்னை மரங்கள் ‘தீச்சுவாலை’ இராணுவ நடவடிக்கையின்போது படையினரால் மேற்கொள்ளப்பட்ட ‘மல்ரிபரல் எறிகணை’ தாக்குதல்களால் தலையிழந்துபோயின. போரின் பின்னரும் கூட எஞ்சிய தென்னைகளைப் பாதுகாக்கவும், அழிவடைந்த தென்னைகளுக்கு மாற்றாக தேசிய ரீதியிலான திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் அரசு தவறியிருந்தது. மண்ணுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்காகவும், போரில் கொல்லப்பட்ட உறவுகளின் நினைவாகவும் நடுகை செய்யப்பட்ட தென்னைகளைத் தவிர வேறெந்தப் பெருந்திட்டமும் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவில்லை.
இலங்கையைவிடவும் மிகச் சிறிய மாலைதீவு உலகின் பல நாடுகளுக்கும் தெங்குப் பொருள்களை ஏற்றுமதி செய்யுமளவுக்கு தன் உற்பத்திகளைப் பெருக்கியிருக்கின்றது. ஆனால், மாலைதீவை விடவும் மிகநீண்ட கடலோரங்களையும் நிலப்பரப்பையும் மனித வளத்தையும் கொண்டிருக்கும் இலங்கையால் இந்தத் துறையில் தனக்கென என்ன முத்திரையைப் பதிக்கமுடிந்தது. கோத்தாபய அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு மாகாணம் இலங்கையின் மூன்றாவது தெங்கு முக்கோண வலயமாக அறிவிக்கப்பட்டது. கோத்தாபய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய நல்ல திட்டங்களில் இதுவுமொன்று. ஆனால், இந்த அறிவிப்பின் பின்னரான செயற்பாட்டு நடவடிக்கை என்ன?
வெள்ளை ஈக்கள் பேராபத்தானவை. அவை உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட, அரசாங்கம் போர்க்கால அடிப் படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். ஆனால், அந்த ஈக்களின் தாக்கத்தைவிடவும் ஆகப்பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் தன் இயலாத்தன்மை தொடர் பிலும் சுயபரிசீலனையை மேற்கொள்ளவேண்டும். டொலர் வருவதற்கான கதவுகளை அடைத்துவிட்டு கடன்கள் தொடர்பில் சிந்திப்பதால் யாருக்கு என்ன பயன்?
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.