மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையில் 5 வயது சிறுமி ஒருவரின் தாயாரின் காதலன் சிறுமிக்கு உடல் முழுக்க சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்ததில் சிறுமி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்த 23 வயதான தாய் தனது 5 வயது சிறுமியுடன் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாயார் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பகுதியைச் சேர்ந்த திருமணம் முடித்த ஆண் ஒருவருடன் அறிமுகமாகி தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் குறித்த பெண்ணுக்கு கொழும்பில் வேலை பெற்றுத்தருவதாக தெரிவித்து அவருடன் அவரது 5 வயது குழந்தையையும் கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து கொழும்பில் தங்கியிருந்த விடுதி பகுதியில் வைத்து குறித்த சிறுமிக்கு சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளதையடுத்து, சிறுமியின் வாய் மற்றும் கை, கால், முதுகு உட்பட உடல் முழுக்க காயம் ஏற்பட்டு படுகாயமடைந்துள்ளது. இதனையடுத்து சிறுமியுடன் தாயார் கொழும்பில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்த பின்னர் ஞாயிற்றுக்கிழமை சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
அத்துடன், கொழும்பில் வைத்து தனக்கு அடித்துள்ளதாக சிறுமி தெரிவித்துள்ளார் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் சிறுமியை சூடு வைத்து அடித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.