புதியவன்
பல நாள் மீன்பிடிப் படகொன்றில் 3,798 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 179 கிலோ 906 கிராம் ஐஸ், 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கையின் தெய்வேந்திர முனையிலிருந்து தெற்கே சுமார் 133 கடல் மைல் தொலைவிலுள்ள ஆழ்கடல் பகுதியில், இலங்கைக் கடற்படையின் மற்றுமொரு வெற்றிகரமான புலனாய்வு நடவடிக்கையில் இப்போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 12 ஆம் திகதி இலங்கைக் கடலோரக் காவல்படையின் சமுத்திரரக்ஷா கப்பலின் மூலம் இந்தத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் குறித்த படகில் இருந்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த கடல் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்த மற்றொரு உள்ளூர் மீன்பிடி படகை சோதனையிட்ட கடற்படையினர், கைப்பற்றப்பட்ட பல நாள் இழுவைமடிப் படகுடன் போதைப்பொருளை கைமாற்ற வந்ததாகச் சந்தேகிக்கப்படும் அதிலிருந்த 4 சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கரைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த படகை, இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நேற்றுமுன்தினம் காலி துறைமுகத்துக்கு வந்து பார்வையிட்டார்.
காலி துறைமுகத்தில் குறித்த இழுவைமடிப் படகை அதிகாரிகள் முழுமையாக சோதனை செய்த போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் அடங்கிய 17 கோணிகளை அதிகாரிகள் மீட்டனர்.
இதில் 129 பொதிகளில், 13 கோணிகளில் அடைக்கப்பட்ட சுமார் 179 கிலோ மற்றும் 906 கிராம் (பொதிகள் உள்ளடங்கலான நிறை) எடையுள்ள ஐஸ் மற்றும் 76 பொதிகளில், 4 கோணிகளில் அடங்கிய சுமார் 83 கிலோ மற்றும் 582 கிராம் எடையுள்ள ஹெரோயின் (பொதிகள் உள்ளடங்கலான நிறை) ஆகியன மீட்கப்பட்டன.
போதைப்பொருட்கள் மற்றும் 2 மீன்பிடி படகுகளுடன் சந்தேகநபர்கள் 10 பேரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சந்தேகநபர்கள் வெலிகம, இமதூவ, காலி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 முதல் 54 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு 3,798 மில்லியன் ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கமைய தற்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் உட்பட 2024 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக் கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது 9,300 மில்லியன் ரூபாய் ( 930 கோடி ரூபாய்) பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.