எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் சீன ஆராய்ச்சிக் கப்பல் நங்கூரமிடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து இந்தியா கவலை வெளியிட்டுள்ளது.
சீன ஆய்வுக் கப்பல் 'ஷீ யான் சிக்ஸ்' எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், நவம்பர் மாதம் வரை கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் கப்பல் நங்கூரமிடப்படும் எனவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் குறித்த கப்பலை இலங்கைக்கு வருவதற்கு இலங்கை அதிகாரிகள் இன்னும் அனுமதி வழங்கவில்லை எனவும் அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
3,999 தொன் எடையுள்ள 'ஷி யான் சிக்ஸ்' என்ற கப்பல் சீனாவின் குவாங்சோவில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கியுள்ளதாகவும், தற்போது தென்சீனக் கடலில் தெற்கு நோக்கிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய நீர்வள அபிவிருத்தி மற்றும் முகவரகம் அல்லது நாரா நிறுவனத்துடன் இணைந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த சீனக் கப்பலுடன் விஞ்ஞானப் பயணத்தைத் தொடங்கத் தயாராக இருப்பதாகவும், தென்னிந்தியப் பெருங்கடல் பகுதி உட்பட விரிவான ஆய்வை மேற்கொள்ளவிருப்பதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், கடல்சார் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் இந்திய அரசாங்கம், சீன ஆராய்ச்சிக் கப்பலின் வருகை குறித்து கவலை வெளியிட்டுள்ளதுடன், அது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 10ஆம் திகதி சீனப் போர்க்கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்து நேற்று நாட்டை விட்டுச் சென்றுள்ளது. கடந்த ஓகஸ்ட் 2022 இல், சீனக் கப்பல் 'யுவான் வாங் ஃபைவ்' அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டபோது இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தமை குறிப்பிடத்த்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.