இன்றைய டிஜிட்டல் உலகத்தில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்கும், நமது சமூக வலைதள கணக்கில் அங்கீகரிக்கப்படாத அணுகலை தடுப்பதற்கும் வலுவான கடவுச்சொற்கள்(password) மிகவும் அவசியம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன் முதல் ஆன்லைன் வங்கிச் சேவை வரை டிஜிட்டல் யுகத்தில் பாஸ்வேர்டுகள் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. எழுத்துக்கள், சின்னங்கள், எண்கள் போன்ற கலவையுடன் உள்ள பாஸ்வேர்டுகளை எளிதில் யூகிக்க முடியாத வகையில் உருவாக்க வேண்டும். ஆனால் நம்மில் பலர் அவ்வாறு செய்வதில்லை என்பது 'NordPass' என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் 70% பாஸ்வேர்டுகளை ஒரு நொடிக்குள் ஹேக் செய்துவிடலாம் என்பது குறித்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டில் பொதுமக்கள் “123456” என்ற பாஸ்வேர்டையே பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. உலகளவில் 31 சதவீதத்தினர் “123456789,” “12345,” “000000” போன்ற பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. இணையப் பயனர்கள் பெரும்பாலும், நாடு அல்லது நகரங்களில் பெயர்களை கொண்டு பாஸ்வோர்டுகளை உருவாக்குகின்றனர். உதாரணத்திற்கு இலங்கையில் “இலங்கை @123”, ஸ்பெயினில் “பார்சிலோனா”, கிரீஸில் “கலமாட்டா” போன்ற பாஸ்வேர்டுகள் பிரபலமாக உள்ளன.
இதேபோல், “admin”, “password”, “pass@123” போன்றவை உலகளவில் பொதுவாக பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகளாக உள்ளன. இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள 70% கடவுச்சொற்களை ஒரு நொடிக்குள் ஹேக் செய்துவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியினால் கடவுச்சொற்களை தகர்ப்பது கடினமான செயல் என்றாலும், சைபர் தாக்குதல் என்பது மிக பெரிய அச்சுறுத்தலாகவே உருவெடுத்து வருவதாக NordPass நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, 20 எழுத்துகள், எண்கள் கொண்ட வலுவான கடவுச்சொற்களை பயனர்கள் உருவாக்க வேண்டும் என அந்நிறுவனத்தினர் பரிந்துரைத்துள்ளனர். பிறந்தநாள் அல்லது பிற எளிதில் யூகிக்கக்கூடிய தகவல்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், வெவ்வேறு தளங்களுக்கு வெவ்வேறு கடவுச்சொற்களை உருவாக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.