தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுப்பு
தியாகி திலீபன் நினைவு நாள் கடைப்பிடிப்பு வன்முறையை தூண்டும் அபாயமுள்ளதால் உடனடியாக நினைவு நிகழ்வுகளை தடைசெய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் கொழும்பிலிருந்து களமிறக்கப்பட்ட அதிகாரிகளுடன் சேர்ந்து பொலிஸார் நேற்று மனுதாக்கல் செய்திருந்தனர். இதன் மீதான கட்டளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் சற்று முன்னர் வழங்கப்பட்டது. அதில், நினைவேந்தலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது. இதேவேளை வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்ய முடியும் என்றும் பொலிஸாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
தியாகி திலீபன் நினைவு நிகழ்வை தடைசெய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்து, நேற்றுமுன்தினம் புதன்கிழமை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், பொலிஸ் திணைக்களத்தின் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர், சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவொன்று, கொழும்பிலிருந்து உலங்கு வானூர்தியில் நேற்று வந்து, யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். இதில், தியாகி திலீபன் நினைவுநாள் கடைப்பிடிப்பு வன்முறை வடிவம் எடுப்பதால், அவசரமாக நினைவுநாளுக்கு தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இந்தக் கோரிக்கை தொடர்பான நீதிமன்றின் கட்டளையே சற்று முன்னர் வழங்கப்பட்டது. அதில் நினைவேந்தலுக்கு தடை விதிக்க மன்று மறுத்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.