தற்போதைய கால கட்டத்தில், மன அழுத்தம் இல்லாத மனிதர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதில் இருந்து எவ்வாறு விடுபடலாம் என்பது தொடர்பாக தற்போது பார்க்கலாம்.
* மனஅழுத்தம் என்பது, ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போது, அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும். இந்த அதிகபடியான சக்தியும் வலிமையும் அவருக்கு மிக உதவியாக இருக்கும். ஆனால், இந்த சூழ்நிலை அடிக்கடி அல்லது தொடர்ந்து நீடிக்குமானால், அது மன அழுத்தமாக மாறும்.
மன அழுத்தத்துக்கான பொதுவான காரணங்கள்
-------------------------------------------------------------------------------
- உடல் அல்லது உயிருக்கு ஆபத்தை உணரும்போது இந்த வகையான மன அழுத்தம் ஏற்படுகிறது.
- நம் கட்டுப்பாட்டுக்குள் வராத விஷயங்கள் குறித்துக் கவலைப்படுவது.
- சுற்றுப்புறச் சூழ்நிலை
- அதிக வேலைப்பளு(இந்த வகையான மன அழுத்தம் உடலை மிகவும் பாதிக்கும். கூடுதல் பணிச்சுமை ஏற்படும்போது இது நிகழ்கிறது. பணிகளை எப்படிச் சீரமைத்துக்கொள்வது, எப்படி ஓய்வுக்கு நேரம் ஒதுக்குவது என்று தெரியாதபோது இந்த வகை மன அழுத்தம் நேரும்)
மன அழுத்தத்தின் அறிகுறிகள்
-------------------------------------------------
(உடல், மற்றும் மனதளவில் வெளிப்படுகிறது. மன அழுத்தத்தின் வீரியம் நபருக்கு நபர் வேறுபடும்)
*மனதளவில் வெளிப்படும் அறிகுறிகள்:
பதட்டம், எரிச்சல், மனம் ஒருமுகப்படுத்த முடியாதது, அதிகக் களைப்படைவது, தூக்கமின்மை.
*உடலளவில் வெளிப்படும் அறிகுறிகள்:
வாய் உலர்ந்துவிடுவது, மூச்சுவிடுவதில் சிரமம், அஜீரணக் கோளாறு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உள்ளங்கை வேர்ப்பது, இருதயம் வேகமாகத் துடிப்பது, உடல் தசைகள் இறுகுவது.
மன அழுத்தம் எப்படி நம்மைப் பாதிக்கும்?
---------------------------------------------------------------------
மன அழுத்தத்துக்கான பதில் வினைகளை நம் உடலின் தானியங்கி நரம்பு மண்டலம் ஒருங்கிணைக்கிறது. இதனுடன் சேர்ந்து நாளமில்லாச் சுரப்பிகளும் அழுத்தத்தின்போது சுரக்கின்றன. இவை நம் உடலில் பல்வேறு இரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதனால், அதிக இதயத்துடிப்பு, அதிக ரத்த அழுத்தம், வயிற்றில் அதிக அமிலம் சுரப்பது, அதிகமாகத் தசைநார்கள் விரைப்படைவது, ரத்தத்தில் சர்க்கரையும் கொழுப்பும் அதிகரிப்பது, ரத்தத்தின் தடிமன் அதிகரிப்பது மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது போன்ற பல விளைவுகள் உடலில் ஏற்படுகின்றன.
மன அழுத்தத்தின் சில விளைவுகள்
---------------------------------------------------------
- கடுமையான சோர்வு, ஜீரணக் கோளாறுகள், தலைவலி மற்றும் முதுகுவலி.
- தொற்றுநோயை எதிர்க்கக் கூடிய ரத்த அணுக்கள் பாதிக்கப்படுவதால் கபம் மற்றும் இதர நோய்கள் அதிகம் ஏற்படும்.
- தொடர் மன அழுத்தமானது ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வாய்ப்பை அதிகப்படுத்தி, வாதம் ஏற்படுவதற்கும் காரணமாகிறது.
- மாரடைப்பு வரக்கூடிய ஆபத்தை அதிகப்படுத்தும், ஆஸ்த்துமா பாதிப்பைத் தீவிரமாக்கும், புகை பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், அளவுக்கதிகமாக உண்ணுதல் போன்ற நடத்தைகளைத் தூண்டிவிடுவதிலும் முக்கியக் காரணமாக இருக்கிறது.
மன அழுத்தத்துக்காக யோகப் பயிற்சி செய்யும்போது ஏற்படும் நன்மைகள்
--------------------------------------------------------------------------------------------------------------------------
- யோகப் பயிற்சிகள் நமது தானியங்கி நரம்பு மண்டலத்தைச் சமன் செய்வதால் அழுத்தம் ஏற்படும்போது, நமது உடலும் மனமும் அதை நன்றாக எதிர்கொள்கின்றன.
- யோகப் பயிற்சிகள் தளர்வு நிலையை அளிப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமான வழியில் அழுத்தத்தை எதிர்கொள்ளவும் நம் உடலைத் தயார்செய்கிறது.
- யோகப் பயிற்சிகள் தூக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. ஓய்வு நிலையை ஏற்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தைச் சீர்செய்கிறது.
- பதட்டத்தைக் குறைத்து ஓய்வு நிலையை ஏற்படுத்துகிறது. சுவாசத்தைச் சீர் செய்கிறது. அது தவிர, உடலுக்கும் மனதுக்கும் விழிப்பு நிலையை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்பு நிலையில் இருக்கும்போது, எதிர்ப்படும் எவ்விதச் சூழ்நிலையையும் அமைதியாகவும் பதட்டமில்லாமலும் எதிர்கொள்ள முடியும். இதனால் உடலுக்கும் மனதுக்கும் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவில் குறையும்.
உடல் நலம், மன நலம் இரண்டும் மலரும்!
எந்தப் போராட்டமும் இல்லாமல், உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் உணர்ச்சி நிலை ஆகியவை இந்த வாழ்க்கையின் சவால்களை மேற்கொள்ள வேண்டுமானால், முதலில் நீங்கள் உங்கள் உளதன்மையை ஒரு குறிப்பிட்ட வழியில், ஒரு குறிப்பிட்ட உறுதியுடன் நிலைநிறுத்த வேண்டும். உள்நிலையில் போராட்டம் இல்லாதபோதுதான், உள்நிலையில் பிரச்னைகள் இல்லாதபோதுதான், வெளிப்புறப் பிரச்னைகளையும் நீங்கள் நன்கு கையாள முடியும்.
- வாழ்க வளமுடன் -
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.