ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருக்கின்றார். வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு பல நிதி ஒதுக்கீடுகள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், அவை தேவையறிந்து மேற்கொள்ளப்பட்டனவாக இல்லையென்பதே பரவலான கருத்து.
வரவு- செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டக் குடிதண்ணீர் பற்றாக்குறைக்குத் தீர்வாக பாலியாற்றுத் திட்டத்தை செயற்படுத்த 250 மில்லியன் ரூபா செலவிடப்படும் என்று அறிவித்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. பாலியாற்றுத் திட்டம் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குடிதண்ணீர் தேவைக்கு ஏற்ற திட்டம் என்று கருதப்படும் நிலையில், அந்தத் திட்டத்தைச் செயற்படுத்த 250 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியிருக்கின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான குடிதண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியது ஆறுமுகம் திட்டம்தான் என்பது நிபுணத்துவம் மிக்கவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பலகட்ட ஆய்வுகளின்பின்னர் நல்லாட்சி அரசின் காலத்தில் கப்பூதுவில் ஆறுமுகம் திட்டத்தை அடியொற்றிய குடிதண்ணீர் திட்டத்துக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அடிக்கல்லும் நடப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குடிதண்ணீர் தேவைக்காக பாலியாற்றுத் திட்டமும் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், குடிதண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வல்லமை அந்தத் திட்டத்தில் இருக்கவில்லை. இதனாலேயே அந்த விடயம் தொடர்பில் எவரும் பெரிதாக அக்கறைகாட்ட வில்லை.
வடமராட்சி, கப்பூது பகுதியில் மழைநீரைத் தேக்கி அதனைக் குடிதண்ணீருக்காகப் பயன்படுத்தும் திட்டத்துக்கான அடிக்கல்லும் நடப்பட்டிருக்கும் நிலையில், ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க பாலியாற்றுத் திட்டத்துக்காக நிதி ஒதுக்கியுள்ளார். பொருத்தமற்ற திட்டம் ஒன்றுக்காக பல மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது. நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக அனைவரை விடவும் மிகவும் அக்கறை கொண்டவராகக் காட்டிக்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயனற்றது என்று கூறப்படும் திட்டத்துக்கான பல மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியிருக்கின்றார். வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக பெருந்தொகை நிதி ஒதுக்கப்படுகின்றது என்று காலங்காலமாக பாசாங்கு செய்யும் அரசாங்கங்கள், அந்த நிதி ஒதுக்கீடுகள் மூலம் எந்தவொரு ஆணியையும் பிடுங்கவில்லை. காலங்காலமாக ஒவ்வொரு ஆண்டும் ஒரே முன்மொழிவுகளே வெவ்வேறான வார்த்தைப் பிரயோகங்களால் முன்வைக்கப்படுகின்றன. இவற்றால் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் எந்தவொரு பயனையும் அடையவில்லை என்பதே யதார்த்தம். சர்வதேச நாடுகளையும், சர்வதேச அமைப்புகளையும் ஏமாற்றும் செயன்முறையின் ஒரு படிநிலையே இந்த நிதி ஒதுக்கீடுகளும், முன்மொழிவுகளும் என்றால் மிகையாகாது.
கடந்த கால அரசாங்கங்கள் போன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இந்தத் தந்திரத்தையே கைக்கொள்கின்றார். வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கென பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நடைமுறைக்கு வருமா என்பதும் சந்தேகமே. இதற்கு நல்லதொரு உதாரணம் அரசாங்கம் அறிவித்துள்ள பாலியாற்றுத் திட்டம். இரணைமடுத்திட்டத்தைப் போலவே பாலியாற்றுத் திட்டமும் கிடப்பில் நிரந்தரமாகப் போடப்படுவதற்கான வாய்ப்புகளே இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையில் பிரகாசமாக இருக்கின்றன. குண்டும் குழியுமாக இருக்கும் சிலமீற்றர் நீளமான வீதிகளையே 'காசில்லை' என்று சொல்லி தட்டிக்கழிக்கும் நிலையில், இப்போது பாலியாற்றை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வந்துவிட்டுத்தான் ரணில் மறு வேலை பார்ப்பார் என்று எவரேனும் நினைத்தால் அதை விட முட்டாள்தனம் வேறில்லை.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.