சிறப்புக் கட்டுரை செய்திகள் மலையகம்

மார்ச்சில் விடிவு கிடைக்குமா?.

2015ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் காலப்பகுதியில் மலையகப் பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று நல்லாட்சி அரசை பிரநிதித்துவப்படுத்தி வாக்குறுதி வழங்கியவர்கள் ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகளாக மலையக மக்களை நம்ப வைத்து கழுத்துறுத்து விட்டு தமது ஆட்சியை முடித்துக் கொண்டனர். இதன்தொடர்ச்சியாக 2019ம் ஆண்டு நவம்பர் 16ம் திகதி அன்று நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 1000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கி புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்கின்றது.

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராகவும் கொண்டமைந்த கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் 1000 ரூபாய் சம்பள உயர்வானது பேச்சளவில் மட்டும் காணப்பட்டு எட்டாக்கனியாகிப் போனது. ராஜபக்சக்களை கொண்டமைந்திருக்கும் இந்தப் புதிய ஆட்சியில் அது அமைச்சரவை தீர்மானம் எடுக்கும் அளவுக்கு ஒரு படி முன்னேறி வந்துள்ளது. 15/01/2020 அன்று பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கும் தீர்மானத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டதுடன், மார்ச் மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளம் 1000 ஆக அமைதல் வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார்.

அரசின் இந்தத் தீர்மானத்தை பலரும் அரசியல் கடந்து வரவேற்று வருகின்றனர். அதிலும் அரசாங்கத்திற்கு சார்பானவர்கள் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு தீர்வு கிடைத்துவிட்டது, அதாவது அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதால் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை இப்போதே தீர்ந்து விட்டது போல் கருத்துக்களை முன் வைக்கின்றனர். கடந்த ஆட்சியாளர்கள் எடுக்கத் தயங்கிய தீர்மானத்தை இந்த அரசு எடுத்திருக்கின்றது. இப்போதைய நிலையில் அது வரவேற்கப்பட வேண்டிய தீர்மானம் மட்டுமேயாகும். நம்பிக்கை கொள்ள வேண்டிய உறுதி நிலையை இத்தீர்மானம் இதுவரை அடையவில்லை.

இது அரசுக்கும் தனியார் துறைக்கும் இடையில் எதிரும் புதிருமாக நடைபெறும் விவகாரமாகும். அரசு புதிரான தீர்மானங்களை எடுத்தால் பெருந்தோட்டத் தனியார் கம்பனிகள் எப்போதும் அதற்கு எதிராகவே செயற்படுவார்கள். மை.சிறிசேன ஆட்சியிலும் அதுவே நடைபெற்றது. அன்றைய அரசு 1000 ரூபாய் வழங்க அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கத் தவறியது. ஆனால் தோட்டத் தொழிலார்களை ஏமாற்றும் நோக்கில் அரசாங்கம் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியால் முன்வைக்கப்பட்ட தனியார் துறை ஒதுக்கீட்டின் கீழான 2500 ரூபாய் (மாதாந்தம்) மற்றும் கடந்த கூட்டு ஒப்பந்தத்தில் நீக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவுக்கு பதிலாக 50 ரூபாய் (நாளாந்தம்) இடைக்கால கொடுப்பனவுகளை கம்பனிகள் கடுமையாக எதிர்த்து நின்றன.

பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இடைக்கால கொடுப்பனவான 2500 ரூபாயை மட்டும் வழங்க கம்பனிகள் சம்மதம் தெரிவித்திருந்தன. அந்த 2500 ரூபாய் கூட முறையாக தொழிலாளர்களை சென்றடைந்திருக்கவில்லை. அதேபோல் 50 ரூபாய் கொடுப்பனவு வழங்க 2019ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டது. ஆனால் இதனை கம்பனிகள் ஏற்றுக் கொள்ள முற்றாக மறுத்துவிட்டன. இந்நிலையில் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டும் அது பயனளிக்கவில்லை. இவ்வாறு நல்லாட்சி அரசாங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தோட்டத் தொழிலாளர்களை நம்பவைத்து ஏமாற்றியிருக்கும் நிலையில் இப்போது ஆட்சிப்பீடம் ஏறியுள்ள புதிய அரசாங்கம், தாம் 1000 ரூபாய் சம்பள உயர்வை பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது. இதன்படியே மார்ச் 1ம் திகதி முதல் 1000 ரூபாய் வழங்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் வாக்குறுதி வழங்கியது போன்று தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. ஆனால் அந்த தீர்மானத்தின் அடிப்படையிலான 1000 ரூபாய் நாள் சம்பளத்தை எவ்வாறு தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கச் செய்வோம் என்பதை அரசாங்கம் இதுவரை தெளிவுபடுத்தாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை காலமும் கூட்டு ஒப்பந்தமே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கிறது. அப்படி ஒரு ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் போது அதற்கு மாறாக எவ்வாறு 1000 ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க முடியும்?. “1000 ரூபாய் நாளாந்த சம்பளம் வழங்க தேயிலை சபை ஊடாக பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படும். கூட்டு ஒப்பந்தத்திற்கும், 1000 ரூபாய் சம்பள உயர்வுக்கும் இடையில் தொடர்பு இல்லை” என்று அரசாங்கம் சார்பில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் அறிவித்திருந்தார்.

1000 ரூபாய் வழங்குவது தொடர்பில் இதுவரை அரசுக்கும் கம்பனிகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எவையும் எட்டப்படவில்லை. அப்படியிருக்கும் போது “கம்பனிகள் கொள்கை அளவில் இணங்கியுள்ளன நிச்சயம் மார்ச் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்” என்று பெப்ரவரி 5ம் திகதி நாடாளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் பெப்ரவரி 15ம் திகதி 1000 ரூபாய் சம்பள உயர்வு வழங்குவது தொடர்பில் “கம்பனிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுக்கு இடையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருந்தது என்றும் அது பின்னர் ஒத்திவைக்கப்பட்டது” எனவும் அரசாங்க அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்திருந்தார். இது கடந்த ஆட்சியில் நடந்தது போன்ற அரசியல் நாடகத்தை இந்த அரசும் தொடரப் போகின்றதா என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கின்றது. கூட்டு ஒப்பந்தத்திற்கும் அரசு வழங்கும் 1000 ரூபாய்க்கும் தொடர்பில்லை என்று கூறியவர்கள் இப்போது இருதரப்பு இணக்கப்பாடு எட்டப்படாத சந்தர்ப்பத்தில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடவிருந்தோம், அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது தொழிலாளர்களை நம்ப வைத்து அவர்களது தலையில் சம்பல் அரைக்கும் கைங்கரியமேயாகும்.

கம்பனிகள் அரசின் முடிவுக்கு ஒத்துக் கொண்டால் ஏனைய விடையங்கள் அரசுக்கு தடையாகாது. ஆனால் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் சம்பளம் கொடுப்பதாயின் அங்கே பல சந்தேகங்கள் எழும். அப்படி ஒப்பந்தம் கைச்சாத்தாகாமல் சம்பளம் வழங்க கம்பனிகள் சம்மதித்து விட்டால் அரசாங்கம் தேயிலை சபை ஊடாக சம்பளத்தை வழங்குமா? அல்லது கம்பனிகளுக்கு நிதியளித்து வழங்குமா?. அது 1000 ரூபாய் அடிப்படை சம்பளமாக அமையுமா? போன்றன பெரும் கேள்விக்குறிகளாகவே காணப்படுகின்றன. கூட்டு ஒப்பந்தம் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுமானால் அது தொடர்ந்து நீடிக்குமா என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது.

இவற்றுக்குரிய ஒரே தீர்வு 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை நீண்டகாலம் வழங்கும் வகையில் புதிய சம்பள முறைமையை உருவாக்குவதேயாகும். அதுவும் உடனடியாக சாத்தியமற்றது. எனவே அதுவரை கடந்த ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பித்து அதனூடாக 1000 ரூபாயை அடிப்படை சம்பளமாக நிர்ணயித்து மீளக்கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட அரசு நடவடிக்கை எடுக்குமானால் அது ஒப்பந்தக்காலம் நிறைவு பெறும் வரையில் நம்பத்தகுந்ததாக அமையும். அதற்குரிய நடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாகவே அரசும் காட்டிக்கொள்கிறது. ஆனால் இவற்றில் எது நடக்கும் என்பதையும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமா? வழங்கப்படாதா? என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஞா.பிரகாஸ்

Related posts

நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Tharani

துப்பாக்கிப் பறிப்பு சந்தேக நபர் இடை நீக்கம்

கதிர்

தடம்மாறிய ரயிலினால் பயணம் தாமதம்

reka sivalingam