சஞ்சீவி - IPaperசிறப்புக் கட்டுரைசெய்திகள்

R2F: உசாரைய்யா… உசாரு!

@உளவாளி

= சத்தமில்லாமல் நடக்கும் கொள்ளை
= பறிபோகும் பணம் பரிதவிக்கும் சனம்
= கண்ணைத் திறந்து கொண்டு ஏமாறும் வடக்கு மக்கள்!!

” ஒருத்தனை ஏமாத்த வேணும் எண்டால் முதல்ல அவனுக்கு ஆசையைத் தூண்டனும்”
சதுரங்க வேட்டை என்ற படத்தில் வரும் மிகப்பிரபலமான வசனம் இது.
ஒவ்வொருவருக்கும் அடிமனதில் ஒளிந்திருக்கும் ஆசைகளைத் தூண்டுவதன் மூலம் அவர்களைச் சிந்திக்கவிடாமல், நிர்ணயிக்கப்பட்ட பொறிகளில் வீழ்த்த முடியும்.இப்படி கண்ணைத் திறந்து கொண்டே படுகுழியில் வீழச் செய்யும் தந்திரங்களில் ஒன்றுதான் பிரமிட் வியாபாரக் கொள்ளை.

முன்னைய கொள்ளை பிரமிட்

பிரமிட் பற்றி உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.எகிப்தில் இறந்த மன்னர்களின் உடல்களை அடக்கம் செய்யப் பயன்படும் கூம்பக வடிவக் கட்டமைப்பே பிரமிட். உச்சியில் இருந்து கீழ் நோக்கி விரிவடையும் இந்தக் கட்டமைப்பை ஒத்ததே பிரமிட் வியாபாரக் கொள்ளையும்.
சில காலங்களுக்கு முன்னர் ‘ லங்கா குளோபல் லைப் ஸ்ரைல்’ என்ற நிறுவனம் இந்த சட்டவிரோத வியாபாரக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தது.

மூளைச்சலவையும் ஆள்பிடிப்பும்

யாரேனும் ஒருவர் இந்த வியாபாரத்தில் முன்னரே இணைந்திருக்கும் ஒருவரால் மூளைச்சலவை செய்யப்பட்டு, இந்தத் திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவார். ஸ்படிகக் கல், எல்.ஈ.டி பல்ப் போன்ற சந்தையில் விற்க முடியாமல் தேங்கிக் கிடக்கும் வீட்டுப்பாவனைக்கு எள்ளளவும் பயனற்ற பொருள்கள் 75000 ரூபாவில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபா வரையில் அவர் தலையில் கட்டப்படும். அவர் அந்தப் பொருட்களை வாங்கிவிட்டு, தன் சார்பில் இருவரை இந்தத் திட்டத்தில் இணைய ‘ ஆள் பிடிக்க’ வேண்டும்.அப்படி இணையும் புதியவர்கள் வாங்கும் பொருட்களின் பெறுமதியில் குறித்த சதவீதம் , அவர்களை இணைத்தவரின் கணக்கில் வந்து சேரும். பின்னர் அந்த இருவரும் தங்கள் சார்பில் இருவரையும், அவர்கள் மேலும் இருவரையும் என இந்தத் திட்டம் ஒரு பிரமிட் வடிவில் கிளை பரப்பும். ‘ நெட் வேர்க் மார்க்கெட்டிங்’, ‘ ஒன்லைன் பிஸ்னஸ்’ என்ற அலங்காரப் பெயர்கள் சூட்டப்பட்டு, ,நுனிநாக்கி ஆங்கிலத்தில் பரப்புரை செய்யப்பட்டு, ( இங்கிலிஷ் கதைக்கிறவன் பொய் சொல்ல மாட்டானாம்) வெற்றிகரமாக பலர் இந்த வலையில் வீழ்த்தப்பட்டனர்.

R2F :பழைய கள் புதிய மொந்தை

இந்தத் திட்டத்தில் பிரமிட்டின் உச்சியில் இருக்கும் ஒரு சிலர் கொள்ளை லாபமீட்ட, அதன் கீழ் விரிந்து செல்லும் கிளை நிலைகளில் இருக்கும் ஏராளமானோர் போட்ட காசைப் பெற முடியாமல், ஒன்றுக்கும் உதவாத ஸ்படிகக் கல்லோடும், எல்.ஈ.டி பல்போடும் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.இந்தக் கொள்ளை வடக்கில் கொடிகட்டிப் பறந்து, பின்னர் மத்திய வங்கியின் நடவடிக்கைகளால் மெல்ல மெல்ல காணாமல் போயிருந்தது. இப்போது அதே பிரமிட் திட்டம் தான் , R2F என்ற பெயரில் இன்னொரு வேடத்தோடு களமிறக்கப்பட்டுள்ளது.அதே பழைய நிறுவனம்,அதே பணியாளர் தொகுதி ஆனால் திட்டத்தின் பெயரும், ஆசையைத் தூண்டும் வழிமுறைகளும் தான் வித்தியாசம்.இன்னொரு வகையில் சொன்னால் புதிய மொந்தையில் பழைய கள் தான் இந்த R2F.

“முதலீடு செய்யும் தொகையைப் போல ஐந்து மடங்காகத் தருவோம்” இதுதான் R2F திட்டத்தின் முதல் தூண்டில்.அந்தத் தூண்டிலில் சிக்கி, முதலீடு செய்த பலர் இப்போது ஏமாறத் தொடங்கியுள்ளனர்.

அது என்ன R 2 F ?

” R 2 F   என அழைக்கப்படுவது வெளிநாட்டு நிதி நிறுவனம்.  அமெரிக்காவின் பனாமா எனும் பகுதியை தலைமையகமாக கொண்டியங்குகின்றது” என இந்தத் திட்டத்துக்கு ஆள்பிடிப்பவர்களால் சொல்லப்படுகின்றது. “எதிர்காலத்திற்கு சவாரி செய்யுங்கள்”  ( R2F = ride to future) என்பதே இதன் அர்த்தமாம்.

இந்த நிறுவனத்துக்கு இலங்கையில் பதிவுகளோ அலுவலகமோ இல்லை. இலங்கையை சேர்ந்த 5000 பேரளவில் இந்நிறுவனத்தின் நிதிச் செயற்பாடுகளில் இணைந்து செயற்படுகின்றனர்.
இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாமல்  மேற்கொள்ளப்படும் இந்த நிதிச் செயற்பாடுகள் இலங்கை சட்ட முறைகளை மீறும் செயற்பாடாகும் என மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்தும் இந்தத் திட்டம் தொடரவே செய்கின்றது.

ஆரம்பத்தொகை 30 ஆயிரம்


ஒருவர் இந்நிறுவனத்தில் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு ஆகக் குறைந்தது 30 000 ரூபாவைச் செலுத்த வேண்டும். 

ஒரு கணக்குக்கான குறைந்த தொகை 99 அமெரிக்க டொலர். இதனோடு இச் சேவைக்கான பணமாக 8 வீதமும் சேவையை செயற்படுத்திக்கொள்ளும் பணமாக 49 அமெரிக்க டொலருமாக சேர்த்தே இந்த தொகை அறவிடப்படும் . இணைந்து கொள்ளும் நபரின் கணக்கில் 99 அமெரிக்க டொலர் பெறுமதியான பிட்கொயின் முதலீடு செய்யப்படும் . இங்கு முதலீடு செய்யப்படும் பணத்தின் ஐந்து மடங்கு பணத்தில் முதலீட்டுக்குரிய பணம் போக நான்கு மடங்கு பணம் இலாபமாகக் கிடைக்கும் என்றே இந் நிறுவனச் செயற்பாட்டாளர்களால் நம்பவைக்கப்படுகின்றது.

இந் நிறுவனம் பிட்கொயின்களை வாங்கி பிட்கொயினின் விலை உயரும் சந்தர்ப்பத்தில் அதனை விற்பனை செய்யும். 

முதலீடு செய்த நாளில் இருந்து ஒரு கிழமையின் பின்னர் திங்கள் தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 1% இலாபத் தொகை இணைந்து கொள்பவர்களது கணக்கில் வைப்பிலிடப்படும்.

பிள்ளையார் சுழி போட்ட புலம்பெயரிகள்

இந்நிறுவனம் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு  காரணமானவர்கள் புலம்பெயர் தமிழர்களே. அங்கிருந்தே உறவினர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள், உயர் பதவிகளில் வசிக்கும் உத்தியோகத்தர்களை இணைத்து இந்த R2f கொள்ளைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.

இப்போது பேஸ்புக் பிரபலங்கள், அதிக லைக்ஸ் வாங்கும் பெண்கள் என்போரைக் குறிவைத்து, அவர்களை இணைக்கிறார்கள். அப்படிச் செய்து அவர்கள் மூலம் இன்னும் பலரை இந்தப் படுகுழிக்குள் இழுக்கும் வேலைகள் கனகச்சிதமாக நடந்து வருகின்றன.

தரகுப்பணமே இலாபம்

இந்தத் திட்டத்தில் ஒருவர் இணைக்கப்படுகின்றார் என வைத்துக்கொள்வோம். அப்படி இணைந்தவர் கட்டும் பணத்தின் 10% அவரை இந்தத் திட்டத்துக்குள் ‘ மண்டையைக் கழுவி ‘ இணைத்த நபருக்கு தரகுப் பணமாகக் கிடைக்கும். வழக்கமான பிரமிட் கொள்ளைக் கொள்கையைப் போலவே இதிலும் இணைந்து கொள்ளும் ஒவ்வொருவரும் தங்கள் சார்பில் மேலும் இரண்டு பேரை இணைக்க வேண்டும்.

இரை தேடும் கூட்டம்


அப்படி இணைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை விரிவடைந்து செல்லச் செல்ல அவர்களூடாகவும் சிறிய தொகை தரகுப் பணம் கிடைக்கும். தரகுப் பணத்தின் மூலம் அதிகமாக இலாபமீட்டுவதற்காகவே இன்னும் பலரை இந்தத் திட்டத்துக்குள் உள்ளீர்க்க வலை வீசுகிறார்கள்.
இந்தக் குழுக்களை ஊக்குவித்து அதிகளவில் ஆட்களை சேர்த்துக்கொள்வதற்காக  ஒவ்வொருவருக்கும் , அவரவர் சேர்க்கும் ஆட்களின் முதலீட்டு பணத்தின் அளவைப் பொறுத்து ‘தர நிலைகளையும்’ வழங்கி அவர்களது இணையப் பக்கங்களில் புகைப்படத்துடன் வெளியிடுகின்றனர். இது அவர்களை மேலும் ஆள்பிடிப்புச் செய்யவும், மற்றையவர்களை இந்தத் திட்டத்தை நோக்கி இழுத்துவரும் இரையாகவும் பயன்படுகின்றது.

மோசடிக்கே வழிகோலும்

பிட் கொயின் வாங்கி விற்பது வெளிநாடுகளில் செயற்பாட்டில் இருந்தாலும், இலங்கையில்  இந்தச் செயற்பாடு தொடர்பாக பூரண அறிவின்மை, செயற்பாடின்மை, அரச அனுமதியில்லாமை போன்ற காரணிகளால் மோசடிக்கே வழிவகுக்கிறது என்கிறார்கள் மத்திய வங்கி அதிகாரிகள்.

ஒருவர் தனக்கு கீழ் ஆட்களை சேர்க்கும் செயற்பாட்டால் இதுவும் ஒரு “பிரமிட் திட்டம்”  என்றும் பிரமிட் திட்டங்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்டவை என்றும் அதே அதிகாரிகள் சொல்கிறார்கள்.

பிட்கொயின் பற்றி தெரியுமா?

பிட்கொயின் (Bitcoin) எண்ணிம நாணயக் குறியீடு அல்லது நுண்காசு எனப்படும். ‘சத்தோசி நகமோட்டோ’ எனும் ஜப்பானியரால் உருவாக்கப்பட்ட ஒரு எண்ணிம நாணயமே இது. இது கணினி முறையால் வலைத்தளங்களில் செயலாக்கப்பட்டு, பரிமாற்றம் செய்யப்படுகின்றது.

பிட்கொயினை (பொது வழக்கில் உள்ள டொலர், ரூபா போல) வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம்; பொருள்கள் வாங்கலாம்; சேமித்தும் வைக்கலாம். பொது வழக்கில் உள்ள பணம் மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப் படுகின்றது. ஆனால், பிட்கொயின் என்ற இந்த கணினிக் காசு எந்த வங்கியாலும் மேற்பார்வை இடப் படுவது இல்லை; கட்டுப் படுத்தப்படுவதும் இல்லை.

முதலீடு செய்ய வருபர்களிடம் பணத்தை வாங்கி, அதில் ஒரு பகுதியை இதற்கு முன்னால் முதலீடு செய்தவர்களுக்குக் கொடுக்கும் ஒரு “ஏமாற்று” திட்டமே இது. பிரமிட் திட்டம் (Pyramid scheme) என்பது ஒருவரைத் திட்டத்தில் சேர்த்து, பின் அவரை மற்றவர்களைச் சேர்க்கச் சொல்வது . சேர்ந்த ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சேர்க்க சொல்ல வேண்டும். இதுவும் ஒரு “ஏமாற்று” திட்டமாகும்.

சவர்க்காரக் குமிழியும் பிட்கொயினும்

சிறுவர்கள் சவர்க்காரக் குமிழிகளை ஊதி விளையாடுவதைப் பார்த்திருப்பீர்கள். மிகப்பெரிதாக, அழகாக, பார்ப்போரைச் சுண்டியிழுக்கும் கவர்ச்சியோடு உருவாகும் அந்தக் குமிழிகள் ஒரு சில செக்கன்களில் உடைந்து, இல்லாமலே போய்விடும். அப்படியான குமிழிகளே இந்த பிட்கொயின்கள்.

“பிட்கொயின் என்பது பணப் பரிமாற்றத்தில் ஒரு வெறும் குமிழி மட்டுமே” என்று நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர்களான ரொபேர்ட் சில்லர் , ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் , ரிச்சர்ட் தேலர்  ஆகியோர்,கூறி உள்ளனர். பொருளாதாரப் பேரறிஞரான போல் கிரக்மன் ”  பிட்கொயின் என்பது ஒரு குமிழ் மட்டுமல்ல, இது ஒரு ஏமாற்று வேலை” என்றும் கூறியுள்ளார்.

பிரமிட் திட்டம்: தடையும் தண்டனையும்

” இலங்கையில் பிரமிட் திட்டமானது 1988 ம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழிற் சட்டத்தினூடாக தடை செய்யப்பட்ட திட்டமாகும். எந்தவொரு நபரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊக்குவிக்கவோ ,வழங்கவோ,விளம்பரப்படுத்தவோ ,நிதியிடவோ, முகாமைப்படுத்தவோ கூடாது. மேற்படி செயற்பாட்டில் ஏதாவது ஒன்றில்  ஈடுபட்டாலும் குற்றம் இழைத்தவராகவும் 1,000,000 ரூபாவுக்கு குறையாத தண்டமொன்றுக்கும் அத்துடன் அல்லது மூன்று ஆண்டுகள் குறையாத சிறைத்தண்டனையும் கிடைக்கும். இந்த நடவடிக்கையானது தீங்கு விளைவிக்கும் எனத் தெரிந்துகொண்டே புரியப்பட்டிருப்பின் மூன்று ஆண்டுகளுக்கு குறையாததும்  ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படாமலும் கடூழியச் சிறைத்தண்டனைக்கும் 2,000,000 தண்டப்பணமும் செலுத்தப்பட வேண்டும்”  என்று எச்சரிக்கின்றது இலங்கை மத்திய வங்கி.

சொல்வது அவர்கள், தீர்மானிப்பது நீங்களே!

2011  ஆம் ஆண்டு வடபகுதியில் தாண்டவமாடிய பிரமிட் ஏமாற்று திட்டங்களை முறியடித்து மக்களைக் காப்பாற்றியது இலங்கை மத்திய வங்கியே. இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய முன்னாள் முகாமையாளர் யாழ். நூலகத்தில் பிரமிட் வியாபாரம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் உரையாற்றிய போது “நீங்கள் ஏன் இந்தத் திட்டத்தை தடைசெய்யவில்லை?” என பொதுமகன் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்கு ” இந்த வீட்டில் விபசாரம் நடப்பதாக நான் சொல்லலாம்… ஆனால் அது நல்லதா, கெட்டதா என முடிவெடுத்து அங்கு போவதும் போகாமல் விடுவதும் உங்கள் விருப்பம்” எனப் பதிலளித்திருந்தார். இந்தப் பதிலை நாமும் மீள வாசகர்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம்.

இதுவும் பிரமிட்டே!

R 2 F  எனும் இந்தத்திட்டத்திலும் ஆட்களை சேர்த்து வருவதும் இதுவும் ஒரு பிரமிட் திட்டமே என்பதை உறுதிப்படுத்துகின்றது.

ஒரு திட்டத்தைத் தடை செய்தால் வேறு ஒரு பெயரில் நிதிச் சட்டத்தில் இருக்கும் சில ஓட்டைகளைக் கண்டுபிடித்து அதனூடாக மீண்டும்.இன்னொரு பெயரில் காலூன்றி மக்களின் பணத்தை உறிஞ்சுவது இந்த ஏமாற்றுப்பேர்வழிகளுக்கு கைவந்த கலை.

பாதிப்பு அப்பாவிகளுக்கே!

ஆனால் அப்படி எவரேனும் பிரமிட் வியாபாரச் செயற்பாட்டில் ஈடுபடுவது ஆதாரத்தோடு கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றைப் புரிந்தவர்களாவே கருதப்படுவர்.பரிதாபம் என்னவெனில், இந்தத் திட்டத்தின் ஆரம்பப்புள்ளிகளான புலம்பெயர் வாழ்  வழிகாட்டிகள் கொள்ளை இலாபத்துடன் தப்பிவிட, பாதிக்கப்படப் போவது இங்கே செயற்படும் அப்பாவிகள் தான்.

சமூக வலைத்தளங்களில் தூண்டில்

இன்று  சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனும் அளவுக்கு எல்லோரும் பேஸ்புக், ருவிட்டர், இங்ஸ்ட்ரகிராம் என்று அல்லும் பகலும் அனவரதமும் அனைவரும் அங்கேயே பாய் போட்டுப் படுத்திருக்கிறோம்.
இதனைப் பயன்படுத்தி , R2F என்ற இந்தப் பிரமிட் திட்டத்துக்கான பலியாடுகளை சமூகவலைத்தளங்களில் தேடத்தொடங்கியுள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் வாழ்பவர்களையும், பேராசை கொண்டவர்களையும் முதலில் கண்டுபிடிப்பார்கள். அதன் பின்னர் அவர்களது ஆசையைத் தூண்டி “குறைந்த செலவில்  நிறைய வருமானம்”
” நீங்கள் முதலிடும் பணத்துக்கு ஐந்து மடங்கு பணம்”

” சிறு முதலீட்டுடன் எந்த உழைப்பும் இல்லாமல் அதிக வருமானத்தை அடையலாம் “என்ற ஆசைகளை சமூகவலைத்தளங்களில் விதைத்து, ஆள்களைப் பிடித்து நல்ல அறுவடை செய்யத் தொடங்கியுள்ளார்கள்.

‘ சூம்’ பரப்புரைகள்


கொரோனாவுக்கு பின்னர் உலகமே வீட்டுக்குள் முடங்கியபோது ‘ சூம்’ என்ற செயலி பிரபலமடைந்தது. வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலை, கூட்டங்கள்,கல்வியூட்டல்கள் என ‘ சூம்’ செயலி பல்வகைப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்தது

‘ சூம்’ செயலின் பலத்தை இனம்கண்டுகொண்ட R2F காரர்களும், தங்களுடைய ஆள்பிடிப்புக்கும், மூளைச்சலவைக்கும் ‘ சூம்’ செயலியை துணையாக வைத்திருக்கிறார்கள்.

R2F நபர்களின் சூம்’ கூட்டங்கள் அடிக்கடி நடக்கும். R2F திட்டத்தில் ஏற்கனவே இணைந்த ஒருவர், இன்னும் சிலரை புதுமுகங்கள் போல( அவர்களும் முன்னரே இணைந்து ஏமாற்றுபவர்களே) வேலிக்குச் சாட்சி சொல்வதற்காக இந்த ஓணான்களை செட்’ பண்ணிவிட்டே கூட்டங்கள் தொடங்கும். அதன் போது புதிதாக இணைய வருவோருக்கு ஆசை ஊட்டப்படும். அதற்கு ஏற்கனவே ‘ செட்’ பண்ணப்பட்ட நபர்கள் பக்கப்பாட்டு பாட,புதிய நபரும் கனவில் மிதக்கத் தொடங்கிவிடுவார். அடுத்த சில நாள்களிலேயே பணத்தைக் கட்டிவிட்டு,அது 5 மடங்காகத் திரும்பி வரும் என்று காத்திருப்பார். ஆனால் போட்ட முதல் கூட திரும்பாது என்ற உண்மை காலங்கடந்த பின்னரே அவருக்கு உறைக்கும்

எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆகிட்டேன்”

“உங்களால் கட்டக் கூடியதும் ,இழக்க கூடியதும், இழந்தால் உங்களை பாதிக்காத பணத்தை இதில் முதலீடு செய்யுங்கள் ” என்ற நவீன கீதா உபதேசத்தோடு தான் இந்த ‘சூம்’ மூளைச்சலவைக் கூட்டங்கள் ஆரம்பிக்கும்.அதன் பின்னர் ஏற்கனவே ‘ செட்’ பண்ணப்பட்ட வேலிக்கு சாட்சி சொல்லும் ஓணான் நபர்கள் ‘ நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்றரீதியில் தங்கள் அனுபவம் என்ற போர்வையில் ஆசையைத் தூண்டும் கதைகளைச் சொல்லத் தொடங்குவார்கள்.பொதுவாக ‘ எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆகிட்டேன்’ என்ற தொனிப்பொருளே அந்த ஆசையூட்டல்களின் அடிநாதமாக இருக்கும்.
உதாரணத்துக்கு சில ஆசைக்கதைகள்.

ஆசைக்கதை = 1

” நான் இந்தியா தமிழ் நாட்டில் இருந்து 15 வருடங்களுக்கு முன் பிரான்ஸ் வந்தேன்.என்னிடம் நல்ல போன் இல்லை . இந்தத் திட்டத்தில் இணைந்த பின்னர் நல்ல போன் கிடைத்தது.ஆண்டவருடைய கிருபையால் தான் இந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆண்டவருக்கு நன்றி” 

ஆசைக்கதை= 2

” நான் பொருளாதார நிலையில் மிகவும் கஷ்டப்பட்டேன். நண்பர்களூடாக இந்த திட்டம் பற்றி கேள்விப்பட்டு இந்தச் செயலமர்வில் கலந்துகொண்டேன். முதலில் நானும் நம்பவில்லை.நீண்ட நாள்கள் அவதானித்து இலாபம் கிடைப்பதை உறுதிப்படுத்திய பின்னரே இதில் இணைந்தேன்.இப்போது என்னுடைய வாழ்க்கையே மாறியிருக்கிறது. இப்போது நான் ஒரு BMW  கார் வாங்கி விட்டேன்”

அதோகதிதான்

இப்படித்தான் முன்னரும் ‘ குளோபல் லங்கா லைப் ஸ்ரைல் ‘ என்ற பேரில் பிரமிட் திட்டத்தோடு , கோட் சூட்டுடன் வந்தவர்கள் நகரங்களில் உள்ள பிரபல மண்டபங்களில் கூட்டங்களை நடத்தி “வீதியில் என்னுடைய கார் நிற்கிறது பார்த்தீர்களா… நான் ஒரு மாடி வீடு கட்டியிருக்கிறேன் “என்று கதையளந்தார்கள்.அந்தக் கதையை நம்பி சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்தும், நகைகளை விற்றும் பணத்தை பலரும் கட்டினார்கள். ஆனால் கடைசியில் என்ன நடந்தது? அந்தத் திட்டத்துக்கு என்ன நடந்தது என்று எவருக்குமே தெரியாமல் காணாமலே போயிற்று.ஆசைக்கதைகளை நம்பி கையில் இருந்ததையெல்லாம் விற்று, சுட்டு பணம் போட்டவர்களின் நிலை அதோகதிதான்!

பட்டாலும் திருந்தாதோர்

“அந்தத் திட்டத்தால் ஏமாந்து, பணத்தை இழந்த சிலர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு கொடுத்தபோதும், உரிய ஆதாரங்கள் இல்லாமையால் ஏமாற்றியவர்கள் தப்பித்துவிட்டார்கள். இன்னும் பலர் தாம் ஏமாந்ததை வெட்கத்துக்கு அஞ்சி வெளியே சொல்லவேயில்லை.அப்படி ஏமாந்த பலரும் இப்போது இந்த R2F திட்டத்திலும் காசைப் போடுகிறார்கள். எத்தனைதரம் பட்டாலும் இவர்கள் திருந்தப்போவதில்லை” என்று ஆதங்கப்படுகின்றார் சமூகசேவைச் செயற்பாட்டாளர் ஒருவர்.

ஒரேயொரு முறைப்பாடு

” R2F  சட்டவிரோத வர்த்தக நடவடிக்கை தொடர்பில் இதுவரை ஏராளமானோர் பாதிக்கப்பட்ட போதும், ஒரேயொருவரே இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்தியக் கிளையில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். இந்த முறைப்பாடு தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் மத்திய வங்கியின் அனுமதியில்லாமல் மேற்கொள்ளப்படும் நிதிச் செயற்பாடுகள் எல்லாமேசட்ட மீறல் தான் . உதாரணமாக கிராமங்களில் நடக்கும் “சீட்டு” எனும் திட்டம் கூட சட்ட மீறல். மத்திய வங்கியின் சட்டங்களை மீறி திட்டங்களில் இணையும் நபரும், இணைக்கும் நபரும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தக் கூடியவர்கள்” என்று  தெரிவிக்கின்றனர் மத்திய வங்கி அதிகாரிகள்.

எனினும் வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் R2F தொடர்பான முறைப்பாடுகள் எதுவும் இதுவரை  பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னுமா நம்புகிறார்கள்?

R2F திட்டத்தில் இணைந்தவர்களோ இதனை நம்பிக்கையான ஒன்றாகவே கருதுகின்றனர். அதனை அவர்களோடு உரையாடியதன் மூலம் உணரமுடிந்தது.இந்தத்திட்டத்தில் இணைந்து குறுகிய காலத்தில் இரண்டு லட்சம் ரூபா பெற்றதாகச் சொல்லப்படும் , வன்னியைச் சேர்ந்த யுவதி ஒருவர் சொல்வது அவர் இந்தத் திட்டத்தை எப்படிக் கண்மூடித்தனமாக நம்புகிறார் என்பதைக் காட்டுகின்றது.

நம்புபவர்= 1

“நான் இந்தத் திட்டம் தொடர்பில் புலம்பெயர்ந்து வசிக்கும் உறவினர் ஒருவரூடாகவே அறிந்துகொண்டேன். திட்டத்தில் நம்பிக்கை வந்ததால் இணைந்தேன். நான் இலங்கையில் யாரையும் இணைக்கவில்லை.புலம்பெயர் உறவினர்களையே இதில் இணைத்துள்ளேன்.திட்டம் பற்றி கூறி ‘லீடராக’ உள்ளவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி நம்பிக்கை ஏற்பட்ட பின்னரே அவர்களும் இணைந்தனர். நான் ஒரு லட்சம் ரூபா தான் முதலீடு செய்தேன். ஆனால் இரண்டு லட்சம் ரூபா பணம் இதுவரை எடுத்துள்ளேன். 

பிட் கொயினை இலங்கையில் மாற்ற வரி செலுத்த வேண்டும் என்பதால் புலம்பெயர் உறவு ஒருவரின் கணக்கில் மாற்றி  அவரூடாக என்னுடைய கணக்குக்கு பணம் வந்துள்ளது . நான் இலங்கையில் யாரையும் இணைக்கவில்லை”
என்கிறார் அவர்.

நம்புபவர்= 2

” யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே இயங்கிய பிரமிட் திட்டத்தில் செயற்பாட்டாளராக இருந்து, இப்போது R2F  இல் முதலீடு செய்துள்ளேன். நெட்வேர்க் மார்கற்றிங் தொடர்பில் படித்துள்ளேன். முன்னர் இயங்கிய நிறுவனம் தடைசெய்யப்பட்டதாகச் சொல்ல முடியாது. இப்போதும் யாழ். பலாலி வீதியில் அலுவலகம் உள்ளது. நான் அதிலிருந்து விலகி இப்போது R2F இல் முதலீடு செய்துள்ளேன். இலங்கையில் யாரையுமே நான் இணைக்கவில்லை.எனக்கு கீழ் 200 பேரளவில் உள்ளார்கள். அனைவரும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள்.
இலங்கையில் பிட்கொயின்களை மாற்ற முடியாது என்பது பிழை. மாற்ற முடியும். கொழும்பில் அதற்கான இடம் உள்ளது. அதற்கென உள்ள இணையத்தளம் ஊடாக மாற்றி யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கிகளில் இரண்டு தடவை பணம் எடுத்துள்ளேன்” என்று குறிப்பிடுகின்றார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இன்னொருவர்.


இணைந்தால் விலக முடியாது

இத் திட்டத்தில் இணைந்து கொள்ளும் நபர் ஒருவர்,இடையில் விலகிக்கொள்ள நினைத்தாலும் கட்டிய பணத்தை மீள பெற்றுக்கொள்ள முடியாது. வேண்டுமானால் அவருடைய கணக்கை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்க முடியும். இவ்வாறான நிலையில் புலம்பெயர்ந்து வாழும் ஒருவரைத் தொடர்புகொண்ட யாழ். வாசி ஒருவர் ” நான் இந்த திட்டத்தில் காசு போட்டுவிட்டேன் .. லீடர்கள் எல்லாம் வெளிநாட்டில தான் இருக்கினம். எனக்கு லாபமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் அவையோட கதைத்து காச வேண்டித் தருவியா”  என்று வேண்டுகோளை முன்வைத்துள்ளார் . அதற்கு அந்த உறவினர் “கதம்… கதம்..”  (முடிந்தது முடிந்ததுவே..)என்று  மட்டும் கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்துள்ளார்.

தனது ஒரேயொரு வாழ்வாதாரமாக இருந்த ஓட்டோவை இந்தத் திட்டத்தால் ஏற்பட்ட ஆசையால் விற்ற ஒருவர், ஐந்து மடங்கு காசு வராவிட்டாலும் பரவாயில்லை, போட்ட காசு வந்தாலே போதும் என்ற நிலையில் இருக்கிறாம்.

போட்டது வருமா?

இன்னொரு பெண், வெளிநாடொன்றில் இருக்கும் தனது கணவர் அனுப்பிய பணத்தில் சில லட்சங்களை இதில் முதலீடு செய்துள்ளார்.

“கணவருக்கு  இது தெரியாது .. அவருக்கு இப்படியான திட்டங்களில் அவருக்கு நம்பிக்கை இல்லை. லாபம் கிடைத்த பின்னர் சொல்லலாம் என்று பார்த்தேன்.  இப்போது பயமாக இருக்கிறது. அவையோட கதைத்து பணத்தை எடுக்கலாமா?” என இப்போது அங்கலாய்க்கிறார் அவர்.

யாழ்.வர்த்தகர்களும் தப்பவில்லை

தீர விசாரிக்காமலும், திட்டங்கள் தொடர்பில் பூரண அறிவு இல்லாமலும் ,நாட்டின் சட்ட திட்டங்களை அறிந்துகொள்ளாமலும் செயற்பட்டால் இவ்வாறான நிலை எற்படுவது தவிர்க்க முடியாததே.

இப்போது இந்தத் திட்டங்கள் தொடர்பில் யாழ். நகர வர்த்தகர்களிடையே ஆசையூட்டப்பட்டு வருவதாகவும் பலர் முதலீடு செய்துவிட்டு “அணில் ஏறவிட்ட நாய் போல ” ஏக்கத்துடன் காத்திருப்பதாகவும் தகவல்கள் காற்று வாக்கில் வந்து போகின்றன.

“பேராசை பெரு நட்டம்”  என்று  சிறு வயதிலேயே  கற்பித்தாலும் இன்னும் ஏமாந்துகொண்டே இருக்கின்றோம். ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் புதிய புதிய பெயரில் புதிய புதிய வடிவில் வந்துகொண்டே தான் இருப்பார்கள்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266