பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது வித்தியா கொலை குற்றவாளிகளின் மனு!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் முன்வைத்த மேன்முறையீட்டை பரிசீலனைக்குட்படுத்த கொழும்பு உயர் நீதிமன்று தீர்மானித்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அதன்போது மனுவை பரிசீலனை செய்வது என்று தீர்மானித்த நீதியரசர்கள் குழாம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

மாணவி கொலை

புங்குடுதீவு மாணவி 2015 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி கூட்டுவன்கொடுமையின் பின்னர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். மாணவி தனது வீட்டில் இருந்து பாடசாலைக்குச் சென்றபோது கடத்தப்பட்டு, கூட்டு வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்டார். இவர் வழக்கமாகப் பாடசாலைக்குச் செல்லும் காட்டுப்பாதையில் உள்ள பாழடைந்த வீட்டின் பின்புறத்தில் கைகால்கள் கட்டப்பட்டு, வாய்க்குள் துணி அடைக்கப்பட்ட அலங்கோலமான நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
வாய்க்குள் துணி அடைக்கப்பட்டமையினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தலையில் அடிபட்டதால் மூளையில் குருதிக் கசிவு ஏற்பட்டு இறப்பு சம்பவித்திருந்தது. வித்தியா கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார் என உடற் கூற்றியல் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கொலைச்சம்பவம் புங்குடுதீவு பகுதியையே உலுக்கியிருந்தது. யாழ்ப்பாணம் குடாநாடு மட்டுமல்லாமல் நாடளாவிய ரீதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு செய்து ஆர்ப்பாட்டத்துடன், பேரணி நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இவர்களில் இருவருக்கு எதிராகச் சாட்சியங்கள் இல்லை என்ற காரணத்தால் அந்த இரண்டு பேரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்ப விசாரணைகளின் பின்னர் கொலை வழக்கு ட்ரையல் எட் பார் முறையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் சமாதான அறையில் மே மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகியது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முதலாவது ட்ரையல் எட் பார் விசாரணை இதுவாகும். ட்ரையல் எட் பார் நீதிமன்ற விசாரணை முறையில் இந்த வழக்கு 4 மாதங்கள் நடைபெற்றன.

தூக்குத் தண்டனை

அந்த வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 7 பேருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று தூக்குத் தண்டனை விதித்தது. மாணவியின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபா இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் தீர்மப்பளித்தது. அத்துடன் நான்காவது குற்றவாளி மகாலிங்கம் சசீந்திரன் மற்றும் 9 ஆவது குற்றவாளி மகாலிங்கம் சசிக்குமார் (சுவிஸ் குமார்) ஆகியோர் 70 ஆயிரம் ரூபாவும், ஏனைய குற்றவாளிகள் 40000 ரூபாவும் இழப்பீடு செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. செலுத்த தவறினால் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 30 வருட கடூழிய சிறைத்தண்டனை மேலும் அதிகரிக்கப்படும் என்றும், அரச தலைவர் தீர்மானிக்கும் தினத்தில் குற்றவாளிகளின் உயிர் பிரியும் வரை தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

மேன்முறையீடு

இந்தத் தீர்ப்புக்கு எதிராக குற்றவாளிகள் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடு செய்திருந்தனர். அது நேற்று விசாரணைக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close