மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம்- பகுப்பாய்வு அறிக்கை தாமதம்!!

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பி கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பின்னரே வெளிவரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு, 6 பொதிகள் செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டன.

மறுநாள் 24 ஆம் திகதி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு 25 ஆம் திகதி புளோரிடாவில் உள்ள கூடத்துக்குக் கார்பன் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டது.

குறித்த மாதிரிகள் ஆய்வு கூடத்தில் கையளிக்கப்பட்ட போது, ஆய்வு அறிக்கை 14 கடமை நாள்களின் பின்னரே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும் எதிர்வரும் 14 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னரே ஆய்வு அறிக்கை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அறிக்கை 14 ஆம் திகதிக்கு பின்னர் மன்னார் நீதிமன்றத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். தபால் மூலமாக நீதி மன்றுக்கு அனுப்பி வைத்தால் 14 ஆம் திகதிக்கு பின் ஒரு சில தினங்களில் அறிக்கை கிடைக்கும்.

ஆய்வு அறிக்கையின் பின்னரே மன்னார் மனித புதை குழியில் இருந்து மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள் தொடர்பான உண்மை விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like