அமைச்­சர் சென்­று­விட்­டார் இனி மக்­க­ளின் நிலமை?

தங்­க­ளி­டம் உள்ள குறை­களை அதி­கா­ரிகளிடம் கூறி­ய­போது அவற்­றுக்­குச் சற்றேனும் செவி­சாய்க்­காத அதி­கா­ரி­ கள் அமைச்­சர் ஒரு­வர் வந்­ததை அடுத்­துத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­வ­தற்கு ஆலாய் பறந்­த­தைப் பார்த்து ஆச்­ச­ரி­யப்­பட்­டுள்­ள­னர். இப்­ப­டி­யான சம்­ப­வம் மூளா­யில் அமைக்­கப்­பட்­டுள்ள பொன்­னொ­ளிக் கிரா­மத்­தில் நடந்­துள்­ளது.

யாழ்ப்பாணம் பொன்­னா­லைச் சந்தி மூளா­யில் தேசிய வீட­மைப்பு அதி­கார சபை­யின் நிதி­யில் அமைக்­கப்­பட்ட 65 வீடு­கள் கடந்த வௌ்ளிக்கிழமை அமைச்­சர் சஜித் பிரே­ம­தா­ச­வால் திறந்து வைக்­கப்­பட்­டது. அந்த வீடு­கள் திறந்து வைக்­கப்­ப­டு­வ­தற்கு ஒரு நாள் முன்­பாக அந்­தப் பகு­தி­க­ளில் அதி­கா­ரி­கள் காலில் பம்­ப­ரம் மாட்­டிக் கொண்டு திரிந்­த­னர். “மாடு சொன்­னால் கேக்­காது மணி­கட்­டின மாடு சொன்­னால் தான் கேட்­கும்” போல என்று பேசிக் கொண்­ட­னர் அந்­தப் பகுதி மக்­கள்.

வீடு கைய­ளிக்க முதல் நாள்
வீடு­கள் அனைத்­தும் கைய­ளிக்­கப்­ப­டு­வ­தற்கு அதா­வது அமைச்­சர் வரு­வ­தற்கு முதல் நாள் வீட்­டுத் திட்­டத்­தில் உள்ள 65 வீடு­க­ளுக்­கும் குடி­தண்­ணீர் வழங்­கப்­பட்­டது. அந்­தக் குடி­தண்­ணீர் சங்­கா­னைப் பிர­தேச செய­ல­கத்­தால் வழங்­கப்­ப­டு­கி­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

ஆயி­ரம் லீற்­றர் குடி தண்­ணீர் இரு­நூறு ரூபா­வுக்கு வழங்­கப்­பட்­டது. இந்­தனை நாளும் குடி­தண்­ணீ­ருக்கு எவ்­வ­ளவு நாள் அலைந்­தி­ருப்­போம் என்று பேசிக் கொண்­ட­னர் மக்­கள். உழவு இயந்­தி­ரத்­தில் மாறி மாறி கொண்டு வந்து வீட்­டின் முன்­னால் காத்­தி­ருந்த நீர்த் தாங்­கி­களை நிரப்பினர். வீடு­கள், வீதிகள், அனைத்­தும் துப்­பு­ரவு செய்­யப்­பட்­டன. பிர­தேச சபை­யின் ரோளர் மூலம் அமைச்­சர் நடந்து செல்­லும் இடங்­கள் செம்­மை­யா­கச் சீர­மைக்­கப்­பட்­டது. அதி­கா­ரி­கள் அங்­கும் இங்­கும் உலாவி வேலை­கள் நடை­பெற்­றி­ருக்­கின்­ற­னவா என்று நோட்­ட­மிட்­ட­னர்.

மாலை ஒவ்­வொரு வீடு­க­ளுக்­கும் வந்த அலு­வ­லர்­கள் வீட்­டுக்­கு­ரிய இலக்­கங்­களை வீட்­டா­ருக்கு வழங்­கி­னர். அந்த இலக்­கத்தை குத்­திக் கொண்டு பந்­த­லுக்கு வர­வேண்­டும் என்று கூறிச் சென்­ற­னர். இரவு மூன்று பேர் (பெண் அலு­வ­லர்­கள்) ஒவ்­வொரு வீடு­வீ­டா­க­ வந்­தார்­கள். அவர்­கள் வீடு திறப்­ப­தற்கு ஏற்ற நிலை­யில் உள்­ளதா என்­பதை பரி­சீ­லித்­துச் சென்­ற­னர். பின்­னர் மூன்­று­பேர் வந்தார்கள்.

அவர்­கள் வீட்­டின் முன்­னால் பொருத்­தப்­படும் நாடாவை வெட்­டு­வ­தற்கு என்ன ஆயத்­தங்­கள் செய்ய வேண்­டும் என்­பதை வீட்­டா­ருக்கு தெளிவு படுத்­தி­னர். தட்டு ஒன்­றில் தாங்­கள் கொண்டு வந்த வர்­ணக் கட­தா­சியை ஒட்டி அழ­கான தட்டை வடி­வ­மைத்­த­னர். (நாடா வெட்­டு­வ­தற்கு முன்­னர் அமைச்­ச­ருக்கு வழங்­கு­வ­தற்­காக) ஒரு­வர் புதிய கத்­தி­ரிக்­கோலை வழங்­கி­னார்.

மற்­றொ­ரு­வர் கழிப்­ப­றைக்கு கதவு போட்­டி­ருக்­கின்­றதா என்று பார்த்து தான் கொண்டு வந்த (பைல்) மட்­டை­யில் குறித்­தார். போகும் வழி­யில் கல்­லொன்று முழித்­துக் கொண்டு வெளி­யில் தெரிந்­த­தைக் கண்ட அலு­வ­லர்­க­ளில் ஒரு­வர் “பாதையை சரி­செய்­து­வி­டுங்­கள் அமைச்­சர் வரும்­போது இப்­படி இருந்­தால் அவர் எங்­களை இடம் மாற்றி விடு­வார்” என அறி­வு­றுத்­தி­னார். என்ன நினைத்­தாரோ பின்­னர் தானே அந்­தக் கல்லை அகற்­றி­விட்­டுச் சென்­றார். அதி­கா­ரி­க­ளின் இந்த அக்­க­றை­யான சேவை­யைப் பார்த்­துக் கன்­னத்­தில் கை வைத்­த­னர் அங்­கி­ருந்த மக்­கள்.

வீடு கைய­ளித்த நாள்
வீடு கைய­ளிக்க அமைச்­சர் வரும் நாள் அதா­வது நேற்று முன்­தி­னம் காலை 9.30 மணிக்கு அமைச்­சர் வீடு­க­ளைத் திறப்­பார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இரண்டு அரை மணி­நே­ரத்து முன்­பா­கவே 65 வீடு­க­ளுக்­கும் 65 அலு­வ­லர்­கள் வந்­தார்­கள். வீடு கைய­ளிக்­கும் வரை அந்த வீட்­டுக்கு அவர்­களே பொறுப்­பா­ன­வர்­கள் என்­றார்­கள்.

அவர்­கள் வந்து நிறை­கு­டம் வைக்­கப்­பட்­டுள்­ளதா?, மாலை­கள் ஆயத்­தமா?, வீடு சுத்­த­மாக உள்­ளதா? என்­பதை ஆராய்ந்து அதற்­கு­ரிய ஆயத்­தங்­க­ளைச் செய்­தார்­கள். அதன்­பின்­னர் இரு ஆண் அலு­வ­லர்­கள் வந்­தார்­கள். அவர்­கள் வீட்­டுக்கு முன்­னால் கட்­டும் (ரிபன்) நாடாவை ஒவ்­வாரு வீட்­டா­ருக்­கும் வழங்­கி­னார்­கள். அந்த நாடாவை வீட்­டில் நின்ற அலு­வ­லர் வாங்கி வீட்­டுக்கு முன்­னால் கட்­டி­னார். அமைச்­சர் வீட்­டைத் திறந்து வைத்த அடுத்த நொடியே வீட்­டாரை அழைத்­துச் சென்று பந்­த­லில் அமர்த்­து­வ­தும் அவர்­க­ளு­டைய பணி­யா­கக் கொடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

அமைச்­சர் வரு­வ­த­தற்கு அரை­மணி நேரத்­துக்கு முன்­னரே பதவி நிலை அதி­கா­ரி­கள் கிரா­மத்­துக்­குள் வந்­த­னர். அவர்­கள் அங்கு பொறுப்­பாக நின்ற அதி­கா­ரி­க­ளி­டம் ஆயத்­தங்­கள் தொடர்­பா­கக் கேட்­ட­றிந்து அமைச்­ச­ரின் வரு­கைக்­கா­கக் காத்­தி­ருந்­த­னர். அமைச்­சர் வந்­தார். ஒவ்­வொரு வீடு­க­ளை­யும் அவரே சென்று திறந்­தார்.

அமைச்­சர் வீடு­க­ளுக்கு வர முன்­னர் விழுந்­த­டித்து ஓடி வந்­தார் ஒரு­வர். அவர் அமைச்­சரை எப்­படி வர­வேற்­பது?, அவ­ருக்கு எப்­படி வெற்­றிலை கொடுப்­பது?, மாலை போடு­வது யார்?, அவர் எப்­ப­டிப் போட­வேண்­டும்?, பொட்டு வைப்­பது யார்? போன்ற கேள்வி ­க­ளைக் கேட்டு அனை­வ­ரை­யும் ஆயத்­தப்­ப­டுத்­து­வது அவ­ரது வேலை. வீட்­டைத் திறந்து வைத்து அமைச்­சர் சென்­ற­வு­டன் வீட்­டில் நின்ற அலு­வ­லர் வீட்­டாரை அழைத்­துக் கொண்­டு­சென்று பந்­த­லில் அமர்த்தி­னார். காலில் சக்­க­ரம் கட்­டி­ய­து­போன்று சுற்­றிச் சுழன்ற அதி­கா­ரி­க­ளை­யும், அலுவலர்களையும் பார்த்து அங்­கி­ருந்த மக்­கள் வாய­டைத்­துப் போயி­னர்.

திரும்­பிப் பார்க்­காத அதி­கா­ரி­கள்
வீடு கட்­டு­தற்கு ஆரம்­பித்­த­தில் இருந்து அந்த வீடு­க­ளைக் கட்டி முடிப்­ப­தற்கு மக்­கள் எவ்­வ­ளவோ சிர­மங்­களை எதிர்­கொண்­டுள்­ள­னர். வீடு கட்­டு­தற்­குத் தேவை­யான நீரில் இருந்து கூரை, வேலை­கள் செய்­வ­தற்கு தேவை­யான மின்­சா­ரம் வரை ஒவ்­வொன்­றை­யும் பெற்­றுக் கொள்­வ­தற்கு அவர்­கள் பட்ட துன்­பம் சொல்­லில் அடங்காமல் இருந்தாலும் வீடுகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப அலுவலர்களின் சேவை பாராட்டத்தக்கது.

காரணம் வறுமை அடிப்படைத் தேவைகளின் அழுத்தத்தால் பின்னின்றவர்களுக்கு புத்துயிர்கொடுத்து வீட்டுக்கட்டிமுடிக்கவைத்த பெருமை அவர்களையே சாரும். வழங்­கப்­பட்ட நிதி­யில் முழு­மை­யாக வீடு கட்­டி­ மு­டிக்க முடி­யாது மேல­திக நிதியை திரட்­டு­வ­ தற்கு ஏறி இறங்­காத வங்­கி­கள் இல்லை. கட்டி முடித்த வீடு­க­ளுக்கு குடி­பு­குந்த பின்­னர் நித்­த­மும் குடி­தண்­ணீ­ருக்கு பட்ட சிர­மங்­கள் ஏரா­ளம்.

குடி தண்­ணீ­ரைப் பெற்­றுக் கொள்­ள­வ­தற்­காக அவர்­கள் செல்­லாத அலு­வ­ல­கங்­களே இல்லை. மக்­கள் துய­ரங்­க­ளைச் சந்­திக்­கும் போதெல்­லாம் கதி­ரை­க­ளில் இருந்து கதை­கூ­றும் அதி­கா­ரி­கள் அமைச்­சர் வரு­கி­றார் என்­ற­தும் பத­றி­ய­டித்து பணி­யாற்­றி­யதை அந்த மக்­கள் வாய­டைத்­துப் போய் பார்த்­துக் கொண்­டி­ருந்­த­தில் வியப்­பில்லை. ஏனெ­னில் அவர்­க­ளுக்கு இது புதிது. அமைச்­சர் வீடு­க­ளைக் கைய­ளித்­துச் சென்­று­விட்­டார். நிரப்பி விட்ட தண்­ணீ­ரும் ஓரி­ரு ­நா­ளில் முடிந்­து­வி­டும். அதன்­பின்­னர்?.

 

You might also like