side Add

ஆழியின் ஊழி நினைவுகள்!!

பதின்­னான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் இதே தினத்­தில் இலங்கை வாழ் மக்­கள் அனை­வ­ரும் அதிர்ச்­சி­யில் உறைந்து போயி­ருந்­த­னர். அது­வ­ரை­யான இலங்­கை­யின் வர­லாறு காணாத பேர­ழிவை ஏற்­ப­டுத்­திச் சென்ற ஆழிப் பேரலை ஏற்­ப­டுத்­திய உயிர், உடமை அழிவுகள் அது­வ­ரை­யில் இலங்­கை­யர்­க­ளால் கண்­ட­றி­யப்­பட்­டி­ரா­தன. சுனாமி, ஆழிப் பேரலை போன்ற பெயர்­க­ளைக்­கூட அதன் பின்­னரே அறிந்து கொள்­ளத் தலைப்­ப­டும் அள­வுக்கு மிகப் பெரும் பாதிப்பை விட்­டுச் சென்ற சம்­ப­வம் அது.

35 ஆயி­ரம் பேரைக் காவு­கொண்டு , 90 ஆயி­ரம் பேரை வீடி­ழக்க வைத்து கடல் ஊழித் தாண்­ட­வத்தை ஆடி­யது அது­வ­ரை­யில் இலங்­கை­யர்­கள் கண்­ட­றிந்­தி­ரா­தது. உயி­ரி­ழந்­த­வர்­க­ளில் 40 வீத­மா­ன­வர்­கள் குழந்­தை­கள்.
இந்­தோ­னே­சி­யா­வின் அரு­கில் இருக்­கும் சுமத்­திரா தீவ­ருகே கட­லில் ஏற்­பட்ட நில­ந­டுக்­கமே இந்த ஆழிப் பேரலை ஏற்­ப­டு­வ­தற்­குக் கார­ண­மா­கி­யது. நில­ந­டுக்­கம் ஏற்­பட்ட இடத்­தி­லி­ருந்து ஆயி­ரத்து 600 கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்­பால் இருந்த இலங்­கை­யின் கரையை காலை­யில் 8.45 மணி­ய­ள­வில் முத­லில் தாக்­கிய கட­ல­லை­கள், கிழக்­கி­லி­ருந்து தெற்கு வரை­யா­கச் சென்று பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு எடுத்­துக்­கொண்ட நேரம் வெறும் 30 நிமி­டங்­கள் மட்­டுமே.

நில­ந­டுக்­கத்­தால் கட­லில் ஏற்­பட்ட நீரலை கட­லில் மணிக்கு 800 கிலோ மீற்­றர் வேகத்­தில் கிட்­டத்­தட்ட 300 கிலோ மீற்­றர்­கள் பரப்­புக்கு பர­விப் பய­ணித்­தி­ருந்­தது. இலங்­கை­யின் கரை­க­ளுக்­குள்ளே கிட்­டத்­தட்ட ஒரு கிலோ மீற்­றர் தூரம் வரை­யில் நுழைந்த அலை­கள் அனைத்­தை­யும் வாரி இழுத்­துச் சென்­றன. தொடர்ந்து முதல் கரை­யோர வீடு­கள் வரை அனைத்­தை­யும் துவம்­சம் செய்த அலை­கள் ஓய்ந்து 14 ஆண்­டு­கள் ஓடி­விட்­ட­ன­வா­யி­னும் அது ஏற்­ப­டுத்­திச் சென்ற அதிர்­வு­கள் இன்­னும் மறை­ய­வில்லை.

மற்­றொரு இயற்கை இடரை வடக்கு மாகா­ணம் சந்­தித்­தி­ருக்­கும் நிலை­யில் ஆழிப் பேர­லை­யின் நினை­வு­கள் இயற்கை இடர் மற்­றும் அது தொடர்­பான முகா­மைத்­து­வம் குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மிகப் பொருத்­த­மான ஒரு நாள்­தான்.

அண்­மை­யில் பெய்த மழை­யைத் தொடர்ந்து வெள்­ளத்­தால் மக்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளமை கவ­லை­த­ரும் விட­யம். வடக்­கில் மட்­டும் சுமார் 70 ஆயி­ரம் பேர் வரை­யி­லா­னோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­கின்­றன புள்­ளி­வி­வ­ரங்­கள். சில இடங்­க­ளில் வெள்ள அபாய முன்­னெச்­ச­ரிக்கை ஒத்­தி­கை­க­ளைக்­கூட அதி­கா­ரி­கள் பார்த்­துத் தயா­ராகி இருந்­தார்­கள் என்­பது வர­வேற்­கத்­தக்க நட­வ­டிக்கை.

இது­போன்ற சம­யங்­க­ளில் அதி­கா­ரி­கள் தயா­ராக இருப்­பது மட்­டு­மல்ல மக்­க­ளும் தேவை­யான ஒத்­து­ழைப்பை வழங்­க­ வேண்­டி­யது அவ­சி­யம். இடர் முகா­மைத்­து­வக் குழுக்­க­ளு­டன் இயைந்து சென்று நில­மை­யைச் சமா­ளிப்­பதே மிக முக்­கி­ய­மா­னது. எந்­த­வொரு தெளி­வான தக­வல்­க­ளை­யும் பெறா­மல், சகட்டு மேனிக்கு அதி­கா­ரி­க­ளை­யும் அவர் தம் நட­வ­டிக்­கை­க­ளை­யும் விமர்­சிப்­ப­தைத் தவிர்த்­துக்­கொள்­வது இது­போன்ற சம­யங்­க­ளில் பேரு­த­வி­யாக இருக்­கும்.

உதா­ர­ண­மாக அண்­மை­யில் வெள்­ளத்­தால் இர­ணை­ம­டுக் குளம் நிரம்­பி­ய­போது, அது பற்­றிய பல்­வேறு அபிப்­பி­ரா­யங்­க­ளும் பொது வெளி­க­ளில் நிரம்பி வழிந்­த­தைக் காண­மு­டிந்­தது. மக்­க­ளைப் பயப்­பீ­திக்­குள் தள்­ளு­கின்ற இத்­த­கைய விமர்­ச­னங்­கள் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­வர்­க­ளை­யும் விச­னத்துக்குள்­ளாக்­கும் என்­ப­தில் மாற்­ற­மில்லை. இது­போன்ற சம­யங்­க­ளில் நில­மையை எதிர்­கொள்­வ­தற்கு மக்­க­ளும் அதி­கா­ரி­க­ளும் கைகோர்த்­துச் செயற்­ப­டும் ஒரு நிலமை ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டுமே தவிர, இரு தரப்­பி­ன­ரும் முரண்­பட்­டுக்­கொள்­ளும் நிலமை ஏற்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது.

ஆழிப்­பே­ர­லை­யி­னால் ஏற்­பட்ட பேர­ழி­வி­லி­ருந்து இந்­தப் பாடத்தை நாம் கற்­றுக்­கொண்­டி­ருக்­க­வேண்­டும். இனி­யும் இது­போன்ற தவ­று­க­ளைத் தவிர்ப்­போ­மாக!

You might also like