இன்னும் ஏன் இந்த ஆட்சிக்கு ஆதரவு?

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எமது அரசு இணை அனுசரணை வழங்கியதால் அந்தத் தீர்மானங்களில் உள்ள அனைத்துப் பரிந்துரைகளையும் நாம் ஏற்பதாக எவரும் பொருள்கொள்ளக்கூடாது. நாட்டின் இறையாண்மையைப் பாதிக்காத பரிந்துரைகளை மட்டுமே நாம் நடை முறைப்படுத்துவோம். எந்தக் காரணம் கொண்டும் நாம் கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை ஏற்கமாட்டோம்.

இவ்வாறு திருவாய் மலர்ந்திருக்கும் திருவாளர் வேறு யாருமல்லர், சாட்சாத் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவே!
தமிழ்த் தலைவர்களின் முதுகில் குத்தி அவர்களை மீண்டும் ஒரு தடவை ஏமாற்றிவிட்ட இந்தச் சிங்களத் தலைவர்களின் குணத்தைக் குறிகாட்ட இதைவிடவும் வேறு உதாரணம் வேண்டுமா என்று தெரியவில்லை.

தலைமை அமைச்சரைப் பொறுத்தவரையில் 2015ஆம் ஆண்டில் ஏற்புடையதாக இருந்த போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கான கலப்பு நீதிமன்றப் பொறிமுறை, அதன் பின் ஓரிரு வருடங்களில் இலங்கைக்குப் பொருத்தமற்றதாக மாறியது. இப்போது அது முற்றிலும் ஏற்க முடியாததாக மாறிவிட்டது.

ரணிலைப் பொறுத்தவரையிலோ சிங்களத் தலைவர்களைப் பொறுத்தவரையிலோ இதுவொன்றும் புதியவிடயமல்ல. ஏனெனில் வரலாறு முழுவதும் இவர்கள் தமிழர்கள் விடயத்தில் இம்மி பிசகாமல் இப்படியேதான் நடந்து வருகிறார்கள். ஆனால், தமிழர்களுக்குத் தீர்வைத் தருவதில் ரணில் விக்கிரமசிங்க உறுதியாக நிற்கிறார், போர்க் குற்றங்கள் உள்ளிட்ட விடயங்களில் அவர் நேர்மையான அணுகுமுறையைக் கைக்கொள்பவராக இருக்கிறார் என்று எண்ணி, அவரோடு ஒத்திசைந்து, அவருக்காகப் போராடி, அவரது ஆட்சியைத் தக்க வைப்பதற்குப் பாடுபட்ட தமிழ்த் தலைவர்களுக்குச் சிலவேளைகளில் இது ஆச்சரியமூட்டுவதாக இருக்கலாம், கவலையளிப்பதாக இருக்கலாம்,சினத்தைக்கூட ஏற்படுத்தலாம். ஆனால், தமிழ் மக்களுக்குப் பழகிப் போய்விட்டதொன்று சிங்களத் தலைவர்களின் இந்தக் குணம்.

அவர்களைப் பொறுத்தவரையில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்கும் அதனைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் மட்டும்தான் தமிழர்களின் ஆதரவு தேவை. அந்தத் தேவை முடிந்ததும் கறிவேப்பிலை மாதிரி தூக்கித் தூரப் போட்டுவிடுவார்கள். இப்போது ரணில் விக்கிரமசிங்கவும் அதைத்தான் செய்திருக்கிறார்.

அவர் மட்டுமல்லர், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும்கூட அதைத்தான் செய்திருக்கிறார். அவரும்கூட கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை ஏற்கமுடியாது என்கிறார் திட்டவட்டமாக.
ஆகக் குறைந்தது கலப்பு நீதிமன்றப் பொறிமுறையாவது வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசமைப்பை மதித்து நடக்கவேண்டும் என்றும் இரு தலைவர்களும் வலியுறுத்துகிறார்கள். அதாவது கலப்பு நீதிமன்றத்தைக் கோருவது இலங்கையை இறைமையையும் அரசமைப்பையும் மீறுகின்ற செயல் என்று பொருள்கொள்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் தமிழர்கள் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி என்றால் என்ன சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்றால் என்ன மைத்திரிபால சிறிசேன என்றால் என்ன, ரணில் விக்கிரமசிங்க என்றால் என்ன எந்தவித வித்தியாசமும் அற்ற ஒரே அரசியல் கொள்கையின் வழித்தோன்றல்களே!

இப்போது கேள்வி என்னவென்றால், இவ்வாறு தமிழ் மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இந்தச் சிங்களத் தலைவர்கள் தூக்கி எறிந்துவிட்ட பின்னரும் தற்போதைய ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான்!

புதிய அரசமைப்பு வராது, கலப்பு நீதிமன்றம் வராது, காணி விடுவிப்பு இனி முன்னேறுவதற்கு வழியில்லை, அரசியல் கைதிகள் விடுதலை இல்லையென்றே ஆகிவிட்டது. இவையெல்லாவற்றுக்குப் பின்னரும் கூட்டமைப்பு ஏன் இந்த ஆட்சிக்கு ஆதரவளிக்கின்றது? எப்போது வேண்டுமானாலும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியும் என்பதுதான் தம்மிடம் உள்ள துருப்புச் சீட்டு என்று முன்னதாக விளக்கம் சொல்லியிருந்தது கூட்டமைப்பு, இப்போது அந்தத் துரும்பு ஒரு செல்லாக்காசு என்பது வெளிப்பட்ட பின்னரும் அதை வைத்திருப்பதில் என்ன பயன்?

You might also like