ஒடிசா மாநிலத்தை புரட்டிய புயல்- 8 பேர் உயிரிழப்பு!!

இந்தியா ஒடிசா மாநிலத்தை கலங்கடித்த ஃபானி புயலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். நேற்று முழுவதும் ஒடிசாவை சின்னாப்பின்னமாக்கிய ஃபானி புயல், இன்று மேற்கு வங்க மாநிலத்துக்குள் நுழைந்தது.

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான ஃபானி புயல், நேற்று காலை ஒடிசாவில் கரையை கடந்தது. காலை 8 மணி முதல் சுமார் 4 மணி நேரம் மணிக்கு 245 கிலோ மீற்றர் வேகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய ஃபானி புயல், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை சின்னாபின்னமாக்கியது.

இதில், வீடு இடிந்து விழுந்தது, மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன உள்ளிட்ட சம்பவங்களில், பூரி மற்றும் புவனேஸ்வர் மாவட்டங்களைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர், நயாகர் மற்றும் கேந்திரபாரா மாவட்டங்களில் 2 பேர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.

செஞ்சிலுவைச் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளும், பல்வேறு தொண்டு நிறுவனங்களும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணிகளில் களமிறங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக விநியோகிப்பதற்காக கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருள்களும், உணவுப் பொருள்களும் கடலோர காவல்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

புயல் காரணமாக, திரிபுரா, மிஷோரம், மணிப்பூர் மற்றும் நாகலாந்து மாநிலங்களிலும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, அந்த மாநிலங்களிலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

You might also like