சஜித்தை வேட்பாளராக்க- ரணில் ஓரளவு இணக்கம்!!

ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் சார்­பாக அமைச்­சர் சஜித் பிரே­ம­தா­சவை அரச தலை­வர் வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றக்­கு­வ­தற்­குத் தலைமை அமைச்­ச­ரும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க கொள்­கை­ய­ள­வில் இணக்­கம் தெரி­வித்­துள்­ளார்.

நேற்று அலரி மாளி­கை­யில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­கள் மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­க­ளு­டன் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நடத்­திய சந்­திப்­பின்­போதே இந்த இணக்­கம் காணப்­பட்­டது என்று அறிய முடி­கின்­றது.

எதிர்­வ­ரும் நவம்­பர் மாதம் அரச தலை­வர் தேர்­தல் நடை­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டும் நிலை­யில் நாட்­டின் பிர­தான கட்­சி­கள் தமது வேட்­பா­ளர்­க­ளைத் தெரிவு செய்­யும் நட­வ­டிக்­கை­க­ளில் இறங்­கி­யுள்­ளன.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி என்­பன தமது வேட்­பா­ளர்­களை இன்­ன­மும் பெய­ரி­டாத நிலை­யில், எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி (பொது­ஜன பெர­முன) முன்­னாள் பாது­காப்­புச் செய­ல­ரும், மகிந்த ராஜ­பக்­ச­வின் சகோ­த­ர­ரு­மான கோத்­த­பாய ராஜ­பக்ச அறி­விக்­கப்­பட்­டுள்­ளார்.

மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் அரச தலை­வர் வேட்­பா­ளர் எதிர்­வ­ரும் 18ஆம் திகதி அறி­விக்­கப்­ப­டு­வார் என்று அந்­தக் கட்சி அறி­வித்­துள்­ளது.

அரச தலை­வர் வேட்­பா­ளர் தொடர்­பில் சுதந்­தி­ரக் கட்சி மௌன­மாக இருக்­கும் நிலை­யில், ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­குள் முரண்­பா­டு­கள் ஏற்­பட்­டுள்­ளன.

அந்­தக் கட்­சிக்­குள் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, கரு ஜய­சூ­ரிய, சஜித் பிரே­ம­தாச என மூவ­ரின் பெயர்­கள் அரச தலை­வர் வேட்­பா­ள­ருக்­கா­கப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டன.

கட்­சி­யால் பெய­ரி­டப்­ப­டாத நிலை­யில் சஜித் பிரே­ம­தாச அரச தலை­வர வேட்­பா­ள­ரா­கத் தானே கள­மி­றங்­கு­வேன் என்று தெரி­வித்­த­து­டன், அதற்­கான முன்­னேற்­பா­டு­க­ளை­யும் மேற்­கொண்­டி­ருந்­தார்.

இந்த முரண்­பா­டு­க­ளால் அரச தலை­வர் தேர்­த­லுக்­கான கூட்­ட­ணியை அறி­விக்­கும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் முயற்­சி­யும் இடை­ந­டு­வில் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பின்­வ­ரிசை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அரச தலை­வர வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவே கள­மி­றக்­கப்­பட வேண்­டும் என்று பிடி­வா­த­மாக உள்­ள­னர்.

நேற்­று­முன்­தி­னம் பது­ளை­யில் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வர­வேற்­ப­ளிக்­கும் மாநாடு ஒன்றை நடத்­தி­யி­ருந்­த­து­டன், பெரும் எண்­ணிக்­கை­யான மக்­க­ளை­யும் மாநாட்­டுக்­குத் திரட்­டி­யி­ருந்­த­னர்.

இந்­த­நி­லை­யில் நேற்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­க­ளும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ளைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னர்.

சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் வேட்­பா­ள­ரா­கக் கோத்­த­பாய ராஜ­பக்ச அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், அவரை எதிர்த்­துக் கள­மி­றங்­கும் வல்­லமை ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யில் சஜித் பிரே­ம­தாச மற்­றும் சரத் பொன்­சேகா ஆகி­யோ­ருக்கே உள்­ளது என்று அவர்­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர்.

சரத் பொன்­சேகா முன்­னர் தேர்­த­லில் போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டைந்­துள்ள நிலை­யில், கோத்­த­பாய ராஜ­பக்ச தரப்பு அதைத் தேர்­தல் பரப்­பு­ரைக்­குப் பயன்­ப­டுத்­தக் கூடும் என்­ப­தால் சஜித் பிரே­ம­தா­ச­வைக் கள­மி­றக்­கு­வதே சிறந்த வழி என்­றும் அவர்­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர். அத்­து­டன் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு மக்­கள் ஆத­ரவு இருப்­பது பது­ளை­யில் நடந்த கூட்­டத்­தின் மூலம் தெரி­கின்­றது என்­றும் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வர் ரணில் விக்­கி­ர­மிங்க இந்த விட­யங்­களை ஏற்­றுக் கொண்­டுள்­ளார். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பிர­தித் தலை­வர் சஜித் பிரே­ம­தா­சவை அரச தலை­வர் வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றக்­கு­வ­தற்கு அவர் கொள்கை அள­வில் இணக்­கம் தெரி­வித்­துள்­ளார்.

ஆனால் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் யாப்­பின்­படி அரச தலை­வர் வேட்­பா­ளரை மத்­திய செயற்­கு­ழுவே தீர்­மா­னிக்க முடி­யும். அத­னால் மத்­திய செயற்­கு­ழு­வில் சஜித் பிரே­ம­தா­ச­வின் பெய­ரைப் பிரே­ரித்து வாக்­கெ­டுப்பு நடத்தி வேட்­பா­ள­ரைத் தெரிவு செய்­ய­லாம் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

அதற்கு ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­க­ளும் இணக்­கம் தெரி­வித்­த­னர் என்று அறிய முடிந்­தது.

You might also like