சிந்­திப்­பீர்­க­ளாக!!

குடா­நாட்­டில் ஆல­யங்­கள் சில­வற்­றில் நிகழ்ந்து வந்த வேள்வி தொடர்­பான வழக்­கில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தின் தீர்ப்பு நேற்று வெளி­யா­கி­யது. இந்­தத் தீர்ப்பை அடுத்து வேள்­வியை நடத்­து­வ­தற்கு நீதி­மன்­றம் அனு­ம­தித்­து­விட்­டது என்­கிற கருத்து வேக­மா­கப் பர­வி­வ­ரு­கின்­றது.

குறிப்­பா­கச் சொன்­னால் “வேள்­விக்கு நீதி­மன்­றம் அனு­மதி” என்­ப­தா­கப் பொது வெளி­யில் இந்­தக் கருத்து பர­வு­கின்­றது.

ஆனால், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தி­லும் யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றத்­தி­லும் இடம்­பெற்ற வழக்­கு­கள் வேள்­வியை நடத்­த­லாமா இல்­லையா என்­ப­தைப் பற்­றி­ய­வை­யல்ல. இறைச்­சிக்­காக மிரு­கங்­களை வெட்­டு­வ­தற்­கான சட்­டங்­க­ளின் கீழ் ஆல­யங்­க­ளில் மிரு­கங்­கள் வெட்­டப்­ப­ட­லாமா இல்­லையா என்­கிற சட்­டச் சிக்­கல் தொடர்­பான வழக்­கு­களே அவை.

அதன் மீதே மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தின் தீர்ப்­பும் வந்­தி­ருக்­கின்­றது. இறைச்­சிக் கடைச் சட்­டங்­க­ளின் கீழ் ஆல­யத்­தில் மிரு­க­ப­லி­யி­டு­வ­தற்­குத் தடை விதிக்­கப்­ப­ட­வேண்­டும் என்­பதே யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றத்­தில் தொட­ரப்­பட்ட வழக்கு. அத­ன­டிப்­ப­டை­யில் இறைச்­சிக்­க­டைச் சட்­டங்­க­ளின் கீழ் ஆல­யங்­க­ளில் கொல்­க­ளம் உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்கு அதி­கா­ரி­கள், பிர­தேச சபை­யி­னர் அனு­ம­திக்­கக்­கூ­டாது என்று மேல் நீதி­மன்­றம் தடை விதித்­தது.

இவ்­வாறு விதிக்­கப்­பட்ட தடை 2013ஆம் ஆண்­டில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தில் நடந்த சிறி போதி­ராஜ நிதி­யம் எதிர் பொலிஸ் மா அதி­பர் வழக்­கி­லும் பின்­னர் 2015இல் உயர் நீதி­மன்­றத்­தில் நடந்த கன­க­ரட்­ணம் எதிர் சிறி போதி­ராஜ நிதி­யம் வழக்­கில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட தீர்ப்­புக்குஎதி­ராக இருப்­ப­தைச் சுட்­டிக்­காட்டி, எனவே அதனை இல்­லாது செய்­ய­வேண்­டும் என்று கேட்­கும் மனு கவு­ணா­வத்தை நர­சிம்ம வைர­வர் கோயில் தலை­வர் சின்­னத்­துரை புஸ்­ப­ரா­ஜா­வால் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

மனுவை விசா­ரித்த மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் தனது தீர்ப்பை நேற்று வழங்­கி­யது. யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றம் வழங்­கிய தீர்ப்பு ஏற்­க­னவே 2013ஆம் ஆண்டு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் வழங்­கிய தீர்ப்பு பின்­னர் 2015ஆம் ஆண்­டில் அந்­தத் தீர்ப்பை உறு­திப்­ப­டுத்தி உயர் நீதி­மன்­ற­மும் வழங்­கிய தீர்ப்பு ஆகி­ய­வற்­று­டன் முரண்­ப­டு­வ­தால் அந்­தத் தீர்ப்பை தள்­ளு­படி செய்­வ­தாக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் அறி­வித்­தது.

ஆல­யத்­தில் கொல்­க­ளம் ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்கு இறைச்­சிக் கடைச் சட்­டங்­க­ளின் கீழ் அனு­மதி கோரப்­பட்­டால் உரிய அதி­கா­ரி­கள் அதனை மீளாய்வு செய்து அனு­ம­திக்­க­லாம் அல்­லது நிரா­க­ரிக்­க­லாம். அப்­ப­டி­யல்­லா­மல் அதற்­குத் தடை விதித்­தால் அது இறைச்­சிக் கடைச் சட்­டங்­களை உரிய அதி­கா­ரி­கள் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு தமது கட­மை­யைச் செய்­ய­வி­டாது தடுத்­த­தா­கி­வி­டும். அத­னால் அத்­த­கைய தடையை விதிப்­பது சரி­யா­ன­தல்ல என்று கரு­து­வ­தாக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் 2013ஆம் ஆண்டு தனது தீர்ப்­பில் தெரி­வித்­தி­ருந்­தது.

அதா­வது ஆல­யங்­க­ளின் மிரு­கப் பலி­யி­ட­லா­னா­லும் அவை சட்­டத்தை மீறி நடக்­க­லா­காது என்­ப­தைத்­தான் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் தனது தீர்ப்­பில் குறிப்­பிட்­டி­ருப்­ப­தாக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றின் நேற்­றைய தீர்ப்­பில் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.
இத­ன­டிப்­ப­டை­யில் ஆல­யத்­தில் கொல்­க­ளம் உரு­வாக்­க­லாமா இல்­லையா என்­கிற பிரச்­சி­னையை பிர­தேச சபையே தீர்­வுக்­குக் கொண்டு வர­லாம் என்­பதே உண்மை.

ஆக, இப்­போது வேள்­வியை நடத்­து­வதா இல்­லையா என்­கிற முடிவை வலி. வடக்கு பிர­தேச சபையே எடுக்க முடி­யும். தனது எல்­லைக்­குட்­பட்ட பகுதி மக்­க­ளில் ஒரு பகு­தி­யி­னர் பலி­யி­டலை விரும்­பு­கின்­ற­னர், அல்­லது அது அவர்­க­ளின் சமய நம்­பிக்­கை­யாக விளங்­கு­கின்­றது என்று சபை நம்­பு­கின்­ற­மை­யால் பலி­யி­ட­லுக்கு இது­வரை அனு­மதி வழங்கி வந்­தது.

இனி­யும் வழங்­கக்­கூ­டும். அதே­நே­ரம் அந்த மக்­க­ளி­லும் பார்க்­கக் கூடு­த­லான எண்­ணிக்­கை­யான மக்­க­ளும் இந்து மத அமைப்­புக்­க­ளும் ஆல­யத்­தில் மிருக பலி­யி­டலை விரும்­ப­வில்லை என்­ப­தை­யும் பிர­தேச சபை­யி­னர் கவ­னத்­தில்­கொள்ள வேண்­டும். ஒரு தொகுதி மக்­க­ளின் விருப்­ப­மாக இருக்­கின்ற அதே­வேளை மற்­றொரு தொகுதி மக்­க­ளின் வெறுப்­புக்­கு­ரி­ய­தா­கப் பலி­யி­டல் இருக்­கின்­றது என்­ப­தை­யும் சபை கவ­னத்­தில் எடுக்­க­வேண்­டும்.

இத­ன­டிப்­ப­டை­யில் சம­யப் பெரி­யார்­கள், அமைப்­புக்­கள், பிர­தேச சபை­யி­னர் ஒன்­று­கூடி ஆலய நிர்­வா­கி­கள் பக்­தர்­க­ளு­டன் பேசி பலி­யி­டலை நிறுத்த வேண்­டும் அல்­லது அதனை ஆலய வளா­கத்­தில் இருந்து அப்­பு­றப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும். பலி­யி­ட­லுக்கு நீதி­மன்­றம் அனு­ம­தித்­து­விட்­டது என்­கிற தவ­றான கருத்­து­ரு­வாக்­கத்­து­டன் அத­னைத் தொடர்­வ­தற்கு கண்­மூ­டித்­த­ன­மாக அனு­மதி வழங்­கப்­ப­டக்­கூ­டாது.

You might also like