திட்­டத்தை செயற்­ப­டுத்த ஒத்­து­ழை­யுங்­கள்

யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிதண்ணீர் தேவையை நிறைவு செய்வதற்கான சிறப்பான அதேநேரம் நீடித்துப் பயன்தரக்கூடிய திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பதாக அறிவிக் கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பான குடிதண்ணீர் ஒவ்வொரு குடிமக்களதும் அடிப்படை உரிமை என்ற வகையில், இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயற்படுத்தி குடாநாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான குடிதண்ணீர் கிடைப்பது உறுதிப்படுத்தப்படவேண்டும்.

அதற்காக அனைத்துத் தரப்பினரும் தமது அரசியல், மத வேறுபாடுகளைக் களைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக யாழ். குடாநாட்டைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கட்சி பேதங்களுக்கு அப்பால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, செயற்படுத்தி முடிப்பதற்கு தமது முழு உழைப்பையும் வழங்கவேண்டும்.

போருக்குப் பின்னரான காலத்தில் வடக்கில் விரைவாக வளர்ந்து வரும் பகுதி யாழ்ப்பாணம். வடக்கின் 5 மாவட்டங்களிலும் பொதுசன அடர்த்தி அதிகமுள்ள மாவட்டமும் யாழ்ப்பாணமே. இயற்கையான நீர்ப்பிடிப்பு வசதி ஏதுமற்ற இந்த வறண்ட பூமியில் குடிதண்ணீருக்கு நிலத்தடி நீரையே நம்பியிருக்க வேண்டியி ருக்கிறது.

ஆனால், அதிகரித்துவரும் சனத்தொகை மற்றும் தேவைகள் காரணமாக நிலத்தடி நீரை மட்டுமே குடிதண்ணீருக்கும் விவசாயத்துக்கும் நம்பியிருப்பது முடியாத காரியம். மாற்று வழிகளைத் தேடுவதன் மூலமே குடாநாட்டின் விரைவான வளர்ச்சியை உறுதிப்படுத்த முடிவதுடன் எதிர்காலச் சந்ததிக்கு வளமான வாழ்க்கையையும் விட்டுச் செல்ல முடியும்.

குடாநாட்டின் குடிதண்ணீர்த் தேவைக்கு கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் இருந்து தண்ணீரைப் பெறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் அரசியலாக்கப்பட்டமை வரலாறு. தமது விவசாயத் தேவை பூர்த்தி செய்யப்படாத வரையில் யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் கொடுக்க முடியாது என்று அந்தப் பகுதி விவசாயிகள் நின்றுகொண்டனர். அந்த அரசியலுக்கு மேலாக மகாவலியில் இருந்து தண்ணீரைக் கொண்டு வருவதற்கும் எதிர்ப்புக்காட்டிய ஓர் அரசியல் நகர்வால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் எதிர்கால இருப்பே கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

இரணைமடுவில் இருந்து குடாநாட்டுக்குக் குடிதண்ணீரைத் தரும் திட்டத்தை மறித்து அதற்குப் பதிலாக மருதங்கேணியில் இருந்து கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை வடக்கு மாகாண சபை முன்மொழிந்தது. ஆனால், சபையின் ஆட்சிக் காலத்துக்குள் அதனைச் செயற்படுத்தும் எந்த வழிவகையையும் மேற்கொள்ளும் திறமையை அது கொண்டிருக்கவில்லை. குடிதண்ணீரிலும் அரசியல் நடத்தத் தெரிந்திருந்த அந்தச் சபைக்கு அதற்கான தீர்வைக் கண்டறியும் அறிவோ திறனோ இருக்கவில்லை. விளைவு குடாநாட்டு மக்கள் தொடர்ந்தும் மாசுபட்ட தண்ணீரையே தமது குடிதண்ணீர்த் தேவைக்குப் பயன்படுத்தும் நிலையை ஏற்படுத் தியது.

இந்த அரசியல்களை எல்லாம் கடந்து யாழ். குடாநாட்டுக்குக் கிடைக்கும் மழை வீழ்ச்சியைப் பயன்படுத்தியே குடிதண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வழியை அதிகாரிகள் கண்டடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு சிறப்பான பாராட்டு. வீணாகும் மழை நீரையே சேமித்துக் குடிதண்ணீர் ஆக்கிக்கொள்ளும் இந்தத் திட்டம் பல நடைமுறைச் சாத்தியங்களைக் கொண்டதாகவே தெரிகிறது. சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத அதேநேரம் குடிதண்ணீ ருக்காகக் குடாநாடு வேறு இடங்களில் தங்கியிருக்கத் தேவையில்லாத நிலையையும் இதன் மூலம் ஏற்படுத்தியிருக்கும் அதிகாரிகளின் முயற்சி உண்மையிலேயே சிறப்பானதுதான்.

இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த அனைத்தும் தயாராக இருக்கின்ற போதும் வன உயிரிகள் திணைக்களத்தின் அனுமதி இன்னும் இந்தத் திட்டத்துக்குக் கிடைக்கவில்லை. திட்டப் பகுதிக்குள் அடங்கும் சில இடங்களில் மங்குரோவ் எனப்படும் சதுப்புநில மரங்கள் காணப்படுவதால் வனஉயிரிகள் திணைக்களம் அதனைத் தனது பகுதி என்று உரிமை கொண்டாடுகின்றது.

இந்தப் பகுதி ஏற்கனவே நன்னீர் பிடிப்புப் பகுதியாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில் அதிலுள்ள மங்குரோவ மரங்கள் வனஉயிரிகள் திணைக்களத்திடமிருந்து விலகிவிட்டபோதும் ஏற்கனவே அட்டவணைப்படுத்தப்பட்ட இடங்கள் என்பதால் அதன் அனுமதி தேவையாக இருக்கின்றது.

இந்த அனுமதியை விரைந்து பெறுவதற்கு யாழ். குடாநாட்டின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பேதங்களை மறந்து ஒன்றுபடுவதன் மூலமே குடாநாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்.

You might also like