side Add

நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்க வேண்டுமா? மீண்டும் ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி உருவாக வேண்டுமா?

தெற்­கில் ஒரு தரப்­பி­னர் இலங்­கை­யில் ஹ।ிட்­ல­ரின் ஆட்சி போன்ற ஆட்­சி­முறை உரு­வாக வேண்­டும் என்­கி­றார்­கள். வடக்­கிலோ தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் தலை­தூக்க வேண்­டும் என்று இன்­னொரு தரப்­பி­னர் விரும்­பு­கி­றார்­கள்.

இந்த நிலை தொட­ரு­மா­னால் இந்த இரு தரப்­பி­ன­ரும் தாம் விரும்­பும் விதத்­தி­லான தலை­வர்­களை அடைந்­தி­டக் கூடும்.
உண்­மை­யைக் கூறு­வ­தா­னால் நாட்­டின் பெரும்­பா­லான மக்­கள் குறிப்­பிட்ட இந்த இரு நபர்­க­ளது மீள் வரு­கையை விரும்­ப­வில்லை.

உபாலி தேரர் மற்­றும் அமைச்­சர் விஜ­ய­கலா ஆகிய இவ் இரு வருமே இந்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திக­தி­யன்று இந்த நாட்டு மக்­கள் வௌிப்­ப­டுத்­திய நல்­லாட்சி அர­சுக்கு எதி­ரான கருத்­துக்­க­ளையே முன்­வைத்­துள்­ளனர். ஒரு விட­யத்­தைக் கூறும் போது, வேறு ஒரு விட­யத்­தின் உள் அர்த்­தம் வௌித்­தெ­ரி­யா­த­வாறு வௌிக்­கொண்டு வரக் கூடிய பேச்­சுத் திறன் அவர்­க­ளி­டம் இருக்­கி­றது.

‘‘கெட்ட செய்­தி­களை கொண்டு வரும் தூதனை எவ­ரும் விரும்­பு­வ­தில்லை’’ என்­றொரு முது­மொழி வழக்­கில் உள்­ளது.

நீங்­கள் ஹிட்­ல­ரா­கவே இருங்­கள்  என கோத்­தா­பா­ய­வுக்கு உபா­லி­தே­ரர் ஆலோ­சனை

கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் இல்­லத்­தில் இடம்­பெற்ற கோத்­த­பா­ய­வின் பிறந்­தாள் வைப­வத்­தில் நல்­லாசி வழங்­கிய வெத­றுவ உபாலி தேரர்’’ பலர் உங்­களை ஹிட்­லர் என வர்­ணிக்­கி­றார்­கள். நீங்­கள் ஹிட்­ல­ரா­கவே இருங்­கள்.

இரா­ணு­வத்­தின் உத­வி­யு­டன் இந்த நாட்­டின் அரச தலை­வர் பத­வியை பொறுப்­பேற்று நாட்டை வழி­ந­டத்­துங்­கள் ’’எனக் கூறி­யுள்­ளார். இந்­தத் தேர­ரின் செய்தி, பொது மக்­க­ளி­ட­முள்ள நல்ல பண்­பு­களை சீர­ழிப்­ப­ தா­கவே, ஒரு ராஜத் துரோகச் செய­லா­கவே அமைந்­துள்­ளது.

ஸ்திர­மில்­லா­மல் தன் எதிர்­கா­லம் என்­ன­வா­கும் என்று தெரி­யா­மலே செயற்­ப­டும் அரசு, எந்த வேளை­யி­லும் பதவி கவிழ்ந்து விடக் கூடும் என்­பதை மக்­கள் அறி­வார்­கள். இந்­தச் செய்­தியை கூறு­ப­வர்­க­ளும் அறி­வார்­கள்.இப்­படி ஹிட்­லர் அல்­லது பிர­பா­க­ரன் என கருத்­துக் கூறி­ய­வர்­களை குறை­கூ­று­வது அல்­லது பதவி விலக்­கு­வது என்­பது ஒரு அர­சி­யல் தந்­தி­ரம்­தான்.

வடக்­குக்­கும் கிழக்­குக்­கும் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி ­க­ளின் பிர­சன்­னம் கட்­டா­யம் தேவைப்­ப­டு­கி­றது என முன்­னாள் ராஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா பொது நிகழ்­வொன்­றில் வைத்­துக் கூறி­யுள்­ளார். அத்­து­டன் அவர் இரண்டு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­கள் அமர்ந்­தி­ருந்த மேடை­யிலே இப்­ப­டி­யா­ன­தொரு கருத்தை முன் வைத்­தி­ருந்­தார்.

‘‘வடக்­கில் உள்ள பல பெண்­கள் பெரிய சிர­மங்­க­ளுக்கு மத்­தி­யில்­தான் வாழ்ந்து வரு­கின்­ற­னர். அண்­மை­யில் யாழ்ப்­பா­ணத்­தில் 6 வயதுடைய சிறுமி கொலை செய்­யப்­பட்­டுள்­ளார். தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் இப்­போது இருந்­தி­ருந்­தால், இப்­ப­டி­யா­ன­தொரு சம்­ப­வம் இடம்­பெற்­றி­ருக்­காது என­வும் அவர் கருத்­து­வௌி­யிட்­டி­ருந்­தார். கூட்­டத்தை கவ­ரும் வகை­யில் பொடி வைத்­துப்­பே­சு­வ­தில் கைதேர்ந்­த­வர் இந்த விஜ­ய­கலா.

மறைந்த முன்­னாள் இந்து சமய விவ­கார அமைச்­சர் தியா­க­ராஜா மகேஸ்­வ­ர­னின் மனை­வி­தான் இந்த விஜ­ய­கலா. வடக்­கில் தமிழ் மக்­கள் சுதந்­தி­ர­மாக நட­மா­ட­வும், பிள்­ளை­கள் அச்­சம் எது­வு­மின்றி பாட­சா­லை­க­ளுக்­குச் சென்­று­வ­ர­வும், மீண்­டும் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் உரு­வாக வேண்­டு­மென்ற கருத்தை விஜ­ய­கலா முன்­வைத்­தி­ருந்­தார்.

‘‘அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வடக்­கி­லுள்ள தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்த்து வைக்­கா­மல் இங்கு அவ­ரு­டைய கட்­சியை பலப்­ப­டுத்­து­வ­தில் தான் ஆர்­வம் காட்­டு­கி­றார். மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ் மக்­க­ளைக் காப்­பாற்­றத் தவ­றி­விட்­டார்’’ என­வும் அமைச்­சர் விஜ­ய­கலா குறிப்­பிட்­டுள்­ளார்.

மகிந்­த­வின் ஊழல் விவ­கா­ரத்தை  திசை­தி­ருப்­பும் முயற்­சியா?  என்ற சந்­தே­கம்

ஆயி­னும் அர­சி­யல் நில­வ­ரங்­கள் சூடு­பி­டித்­தி­ருக்கும் ஒரு பின்­ன­ணி­யில், சீன நிறு­வ­னம் ஒன்­றி­டம் இருந்து 7.6 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்ளை மகிந்த ராஜ­பக்ச முறை­கே­டாக தமது தேர்­தல் பரப்­பு­ரைச் செல­வு­க­ளுக்­கா­கப் பெற்­றுக்­கொண்­ட­தாக நியூ­யோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கை­யி­னால் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டு விவ­கா­ரம், இந்த அமைச்­சர் விஜ­க­லா­வின் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் பற்­றிய கருத்­துக் கார­ண­மாக திசை­தி­ரும்பி இப்­போது எல்­லோ­ரு­டைய பார்­வை­யும் அமைச்­சர் விஜ­ய­கலா மேல்­தான் விழுந்­துள்­ளது.

அதே­போ­லவே அர்­ஜுன் அலோ­சி­ய­சின் மெண்­டிஸ் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து 118பேர் இலஞ்­ச­மாக பணம்­பெற்­றுக்­கொண்­டமை தொடர்­பான விவ­கா­ர­மும் மெல்ல அடங்­கிப் போய்­விட்­டது.

சமீப காலங்­க­ளில் வௌியி­டப்­பட்ட அறிக்­கை­க­ளின் ஊடாக தௌிவா­கும் ஒரு­வி­ட­யம், வடக்­குக் கிழக்கு தமிழ் மக்­க­ளின் இத­யங்­க­ளில் இருந்து இன்­ன­மும் கூட தமிழ் ஈழ விடு­த­லைப் புலி­க­ளது நினை­வு­கள் மறை­ய­வில்லை என்­ப­து­தான்.

நாட்­டில் சமா­தா­னம் உரு­வாகி சகல இன மக்­க­ளும் ஒற்­று­மை­யாக வாழ வேண்­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டும் சந்­தர்ப்­பத்­தில், இப்­படி தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் மீண்­டும் உரு­வாக வேண்­டும் எனக் கூறப்­ப­டும் போது அது நாட்­டின் சமா­தா­னத்­தை­யும் ஒற்­று­மை­யை­யும் சீர்­கு­லைப்­ப­தாக அமைந்­து­வி­டும்.

கடந்த 70வரு­டங்­க­ளா­கவே எங்­களை ஆண்ட அர­சி­யல்­வா­தி­கள் இப்­படி இன­வா­தத்­தைத்­தூண்டி விட்­டுத்­தான் அர­சி­யல் செய்­துள்­ள­னர்.

எங்­கள் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு. தற்­போது இந்த விஜயகலாவின் விடயம் ­போதும் அர­சி­யல் செய்­வ­தற்கு இந்த விட­யத்­துக்­குச் சார்­பா­க­வும் சிலர் குரல் எழுப்ப, பல அர­சி­யல்­வா­தி­கள், பேரி­ன­வா­தி­கள், மத­கு­ரு­மார் எனப் பல­ரும் இதற்கு எதி­ராக கோஷம் எழுப்­பும்­போது, பொது மக்­க­ளின் மன­தில் இது ஒரு பீதியை உரு­வாக்­கி­வி­டும்.

ஒரு­வ­ரு­டன் ஒரு­வர் ஒத்­துப்­போ­காத இரண்டு தலை­வர்­க­ளும், எல்லா விட­யங்­க­ளி ­லும் சர்ச்­சைக்­கு­ரி­ய­வர்­க­ளா­கவே இருந்து கொண்டு, ஏதா­வது ஒரு­வி­ட­யத்­தில் ஒரு­வர் மேல் ஒரு­வர் பழி போடு­கின்­ற­னர். இதில் ஒரு­வர் நேர­டி­யாக வௌிப்­ப­டை­யா­கவே தாக்­கு­கி­றார்.

மற்­ற­வர் தனது உத­வி­யா­ளர் ஊடாக அத­னைச் செய்­கி­றார். இப்­ப­டி­யாக இரண்டு தலை­வர்­க­ளும் தங்­க­ளுக்­குள்­ளேயே பிரச்­சி­னை­களை உரு­வாக்­கிக்­கொண்­ட­தன் பய­னாக அதி­கா­ரப் பர­வ­லாக்­கம் என்ற விட­யம் கிடப்­பில்­போ­டப்­பட்­டு­விட, அதுவே வடக்­கில் அமை­தி­யின்­மையை உரு­வாக்கி இறு­தி­யில் அமைச்­சர் விஜ­ய­கலா மீண்­டும் விடு­த­லைப்­பு­லி­கள் உரு­வாக வேண்­டும் என்­று கூறும் அள­வுக்கு கடு­மை­யான சூழ்­நி­லையை உரு­வாக்­கி­யுள்­ளது.

இது ஒரு பக்­கம் இருக்க, மறு­பக்­க­த்தில் சர்­வா­தி­கா­ரம், அரா­ஜ­கம், இலஞ்­சம், ஊழல்,அதி­கார துஷ்­பி­ர­யோ­கம் என எல்­லா­வற்­றை­யுமே நடத்­திய முன்­னைய அர­சின் ராஜ­பக்ச குடும்­பம், இப்­போது மௌ்ள மௌ்ள தலைத்­தூக்கி தங்­கள் அர­சி­யல் வாழ்க்­கையை மீண்­டும் புதுப்­பிக்க முயல்­கின்­றது.

கோத்­த­பா­ய­வுக்கு தமி­ழர் எவ­ரும்  வாக்­க­ளிக்க மாட்­டார்­கள் என  தர்­ம­லிங்­கம் சித்­தார்த்­தன் விமர்­சிப்பு

தமி­ழீழ மக்­கள் விடு­த­லைக் கழக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தர்­ம­லிங்­கம் சித்­தார்த்­தன் ‘‘தமிழ் மக்­கள் பொது­வாக கோத்­த ­பா­ய­வுக்கு வாக்­க­ளிக்க மாட்­டார்­கள். ஆயி­னும் ஒரு சிலர் அவரை ஒரு செயல் வீர­ராக நினைக்­கின்­ற­னர். வடக்­கிற்கோ தெற்­கிற்கோ சொல்­வீ­ரர்­கள் தேவை­யில்லை.செயல் வீரர்­கள்­தான் தேவைப்­ப­டு­கி­றார்­கள்’’ எனத் தெரி­வித்­தி­ருந்­தார்.

வடக்­கில் இளை­ஞர்­க­ளி­டையே மீண்­டும் பயங்­க­ர­வா­தம் தலைத்­தூக்­கக் கூடிய அடை­யா­ளங்­கள் காணப்­ப­டு­கின்­றன. அத்­து­டன் இந்த இளை­ஞர்­களை தங்­கள் பக்­கம் இழுக்­கும் முயற்சி­யில் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரும் வேறு சில உறுப்­பி­னர்­க­ளும் ஈடு­பட்­டுள்­ள­னர். இந்­தக்­கு­ழு­வில் கடை­சி­யாக இணைந்­துக்­கொண்­ட­வர்­தான் விஜ­ய­கலா. நிலமை கட்­டுக்­க­டங்­கா­மல் போகு­முன்­னர் அரசு தக்க நட­வ­டிக்­கை­கள் எடுக்­க­வேண்­டும்.

30வருட போர் இந்த நாட்டை கிழிந்த கந்­தல் துணி­போல் ஆக்­கி­விட்­டது. வடக்­கி­லுள்ள மக்­க­ளுக்­குக் குறை­கள் இருக்­கின்­றன என்­பது உண்­மை­தான். அரசு வடக்­கில் சட்­டம் ஒழுங்கை நிலை­நாட்­ட­ வும், குற்­ற­வா­ளி ­க­ளைக் கைது­செய்து குற்­றங்­களை கட்­டுப்­ப­டுத்­த­வும் தவ­றி­விட்­டது.

பொரு­ளா­தா­ர­ரீ­தி­யாக பாதிக்­கப்­பட்­டி­ருந்த மக்­கள், அரசு செய்த நல்ல விட­யங்­க­ளைக் கண்டு கொள்­ள­வில்லை. ஆனால் விடு­த­லைப் புலி­கள் இழைந்த பேர­ழி­வு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், மீண்­டும் அவர்­க­ளுக்கு அழைப்பு விடுப்­பது மக்­க­ளுக்கு கேடு விளை­விப்­ப­தா­கவே அமை­யும்.

விஜயகலா­வின் மேடைப்­பேச்­சின் உண்­மைத் தன்மை என்­ன­வென்­றால் வடக்­கில் சட்­ட­மும் ஒழுங்­கும் நிலை நாட்­டப்­ப­ட­வேண்­டும் என்­ப­து­தான். தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் நிர்­வா­கத்­தில் கற்­ப­ழிப்பு,கொலை, கொள்ளை போன்­றவை கேள்­விப்­ப­டாத விட­யம் என்று அவர்­க­ளின் நிர்­வா­கத்­தி­ற­ மையை பாராட்­டி­னாரே தவிர, விஜ­ய­கலா தனி­நாடு கேட்­கவோ, தனி­நாட்­டுக்­காக போராட ஒரு இயக்­கத்­தையோ கேட்­க­வில்லை என்­பது வௌிப்­படை.

இலங்­கை­யில் வாழும் சில தீவி­ர­வாத கொள்கை உடை­ய­வர்­க­ளும், புலம்­பெ­யர்ந்து வௌிநா­டு­க­ளில் வாழும் பெரும்­பா­லான தமி­ழர்­க­ளும், இலங்­கை­யின் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ரா­க­வும், தெற்­கில் வாழும் சில குழு­வி­ன­ருக்கு எதி­ரா­க­வும், மன­தில் பெரும் வெறுப்­பு­ட­னேயே உள்­ள­னர். அவர்­கள் மீண்­டும் இலங்­கை­யில் தமி­ழீ­ழப் புலி­கள் இயக்­கம் உரு­வா­வ­தைத்­தான் விரும்­பு­கி­றார்­கள்.

சட்­ட­மும் ஒழுங்­கும் சீர்­கு­லைந்­துள்­ளமை குறித்த பொது­மக்­கள் கவலை

வடக்­கில் இன்று மக்­கள் சமா­தா­ன­மா­க­வும் அமை­தி­யா­க­வும் வாழ்­கின்­ற­னர். விஜ­ய­க­லா­வின் பேச்­சை­யும் உபாலி தேரரது கருத்­துக்­க­ளை­யும் அவர்­கள் சரி­யா­கப் புரிந்­து கொள்ள வேண்­டி­யது மிக அவ­சி­யம். இன்று இலங்கை வாழ் சகல மக்­க­ளுமே நாட்­டின் சட்­ட­மும் ஒழுங்­கும் சீர்­கு­லைந்து கொண்டு போவ­தை­யிட்டு கவ­லை­கொண்­டுள்­ள­னர்.

நாட்­டில் கொலை,கொள்ளை,கற்­ப­ழிப்பு, ஆள்­க­டத்­தல்­போன்ற குற்­றங்­கள் பெரு­கி­விட்­டன. இவற்­றைச் சீர்ப்­ப­டுத்த வேண்­டிய அர­சி­யல்­வா­தி­கள் நித்­தி­ரை­கொள்­வ­து­போல் தெரி­கி­றது.

6வயது பெண்­கு­ழந்தை பாலியல் துஷ் பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை­செய்­யப்­பட்­டது ஒரு பக்­க­மும் 59வய­தான பெண் நோய்­வாய்ப்­பட்டு படுக்­கை­யில் இருந்த தனது கண­வன் கண் எதி­ரி­லேயே கற்­ப­ழிக்­கப்­பட்டு கொலை­செய்­யப்­பட்­டமை, யாழ்ப்­பா­ணத்­தில் மட்­டு­மல்ல இலங்­கை­யின் வேறு எந்­தப் பகு­தி­யில் நடந்­தி­ருந்­தா­லும் கூட இதே போன்­ற­தொரு தாக்­கத்­தையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கும்.

விஜ­ய­கலா குறிப்­பிட்ட இன்­னொரு விட­யம் ‘‘வடக்­கில் இந்த அரசு எந்­த­வி­த­மான அபி­வி­ருத்தி வேலை­களை முன்­னெ­டுத்­தது என்­பது குறித்து எது­வும் தெரி­ய­வில்லை. ஆனால் இந்த அரசு அப­க­ரிக்­கப்­பட்ட எங்­கள் மக்­க­ளின் காணி­களில் பலவற்றை அவர்­க­ளி­டம் மீள்­அ­ளித்­துள்­ளது. அதற்கு அர­சுக்கு நன்றி கூற­க் கட­மைப்­பட்­டுள்­ளேன். இதைத் தவிர, இந்த அரசு வடக்­குக்கு எது­வுமே செய்­ய­வில்லை’’ என்­றார் விஜ­ய­கலா.

சிலர் விஜ­ய­க­லாவை பதவி வில­கச்­செய்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த வேண்­டும் என­வும் கூறு­கின்­ற­னர். விஜ­ய­கலா நில­மையை உணர்ந்து புத்­தி­சா­லித்­த­ன­மாக பேசி­யி­ருக்­க­வேண்­டும். உணர்்ச்சி வசப்­பட்டு, மன அழுத்­தம் கார­ண­மா­க­வே­தான் அப்­ப­டி­யான வார்த்­தை­களை வௌியிட்­ட­தாக கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள இய­லாது. எரி­கின்ற நெருப்­பில் எண்­ணெய் வார்த்­தது போல் அவ­ரு­டைய இந்த மேடைப்­பேச்சு அமைந்­து­விட்­டது.

தமிழீழ வி­டு­த­லைப்­பு­லி­கள் இயக்­கம் சிறு­வர்­க­ளை­யும் படை­யில் சேர்த்து போரின்­போது ஆயு­தங்­க­ளைக் கையில் ஏந்­தச் செய்­த­கொ­டூ­ரம் அவ­ருக்கு மறந்­து­விட்­டதா?

விஜ­ய­கலா பதவி இறக்­கப்­ப­டக்­கூ­டாது. அவர் மன்­னிக்­கப்­பட்டு அவர் செய்த பிழையை அவர் உண­ர­வேண்­டும். அவர் பேசி­யவை தெற்­கி­லும் கூட­ந­டக்­கக் கூடும். வடக்­கி­லும் கிழக்­கி­லும் வாழும் ஒரு சில தொகுதி இளை­ஞர்­க­ளின் மன­தில் இருந்து தமி­மீழ விடு­த­லைப்­பு­லி­கள் இயக்­கம் இன்­னும் கூட மறை­ய­வில்லை. நாங்­கள் விரும்­பி­னா­லும், விரும்­பா­விட்­டா­லும் இது­தான் யதார்த்த பூர்­வ­மான உண்மை.

வெத­ருவ உபாலி தேரர் கோத்­த­பா­வுக்கு கூறிய ஹிட்­லர் கதை­யைத்­தான், விஜ­ய­க­லா­வும் யாழ்ப்­பா­ணத்­தில் மேடை­யில் பகி­ரங்­க­மாக தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் பற்­றிக் கூறி­யுள்­ளார். அப்­ப­டி­யா­னால் தவறு செய்­ப­வர்­களை ஹிட்­ல­ரைப்­போல அல்­லது தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளைப் போல அவர்­க­ளுக்­கென அவர்­க­ளா­லேயே உரு­வாக்­கப்­பட்ட நஞ்­சு­வாயு அறை­யிலோ அல்­லது மின்­கம்­பங்­க­ளிலோ தண்­டனை கொடுக்­கப்­ப­டு­வதை இவர்­கள் எதிர்­பார்க்­கி­றார்­கள் போ­லும்.

You might also like
X