நிறையைக் குறைக்க -சத்திர சிகிச்சை மேற்கொண்டவர் உயிரிழப்பு!!

330 கிலோ உடல் நிறையைக் குறைப்பதற்காக சத்திர சிகிச்சை செய்து கொண்ட நபர் உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தான், லாகூர் நகர் சாதிக்கா பாத் பகுதியைச் சேர்ந்தவர் நூருல் ஹஸன். சிறு வயதிலிருந்தே உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் இவரது எடை நாளுக்குநாள் அதிகரித்து வந்து 55ஆவது வயதில் சுமார் 330 கிலோ எடை கொண்ட மனிதராக மாறினார்.

அவருக்கு எடை குறைப்பு அறுவைச் சிகிச்சை செய்ய குடும்பத்தினர் விரும்பிய நிலையில், நூருல் ஹஸன் பற்றிய தகவல் அறிந்து அவருக்கு உதவி செய்வதற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவெத் பாஜ்வா முன்வந்தார்.

வீட்டின் சுவரை இடித்து வெளியே கொண்டு வரப்பட்ட நூருல் ஹஸன் லாகூர் நகரில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு செல்ல வசதியாக இராணுவ ஹெலிகெப்டர் ஒன்றை காமர் ஜாவெத் பாஜ்வா அனுப்பி வைத்திருந்தார்.

லாகூரில் உள்ள ஷலாமார் மருத்துவமனையில் நூருல் ஹஸனுக்கு எடை குறைப்புக்கான சிறப்பு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.

நூருல் ஹஸனின் உடல்நிலை திடீரென்று மோசமடைந்தது. மூச்சுத்திணறலால் அவர் திக்குமுக்காடிக் கொண்டிருந்த நிலையில் அவரைக் கவனிக்க அங்கு மருத்துவர்களோ, தாதியர்களோ அருகில் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், நூருல் ஹஸன் மற்றும் அங்கே சிகிச்சை பெற்று வந்த இன்னொரு பெண் என இருவர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

You might also like