பயனற்ற வீட்டுத் திட்டம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான வீடமைப்புத் திட்டம் பயனற்றுப் போகும் நிலை உருவாகியுள்ளது.

ஏ-9 வீதியில், பனிக்கன்குளத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

வீடமைப்புப் பொறியியல் நிர்மாணத்துறை அமைச்சு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அனுசரணையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டத்தின், 50 அரச உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டு, வீடமைப்புக்காக அரை ஏக்கர் காணி வழங்கப்பட்டது.

அத்துடன், ஒரு இலட்சம் ரூபா மானியமாகவும், இரண்டு இலட்சம் ரூபா கடனாகவும் வழங்கப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 8 வருடங்கள் கடந்துள்ள போதும் இதுவரை எவரும் குடியேறாமல் உள்ளனர்.

இந்த நிலையில், பனிக்கன்குளம் கிராமத்தில் 40 வருடங்களுக்கும் அதிகமாக வசித்து வரும் பலர் நிரந்தர வீடுகள் இன்றி அல்லலுறுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like