யாழ்ப்பாணத்தில்- தமிழரசுக் கட்சியின் மாநாடு!!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமையும், மறுநாள் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

முதல் நாள் மாதர் முன்னணி, வாலிப முன்னணி மாநாடுகளும், இரண்டாவது நாள் பேராளர் மாநாடும் நடைபெறவுள்ளன.

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாதர் முன்னணித் தலைவர் திருமதி மதினி நெல்சன் தலைமையில் மாதர் முன்னணி மாநாடு நடைபெறவுள்ளது.

அன்று அதே மன்றத்தில் மாலை 5 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் வாலிப முன்னணி மாநாடு நடைபெறவுள்ளது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் பேராளர் மாநாடு ஆரம்பமாகும்.

இந்த நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னதாக யாழ்.நகரில் அமைந்துள்ள செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வா சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்வு இடம்பெறும்.

இந்த இரு நாள் நிகழ்வுகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் முன்னள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

You might also like