72ஆவது சுதந்திர தின உரையும் – இதே சாரப்படத்தான் அமையுமா?
30 வருட காலமாக இடம்பெற்ற போர் முடிவடைந்து சுமார் ஒரு தசாப்தகாலம் தாண்டிய போதிலும், இந்த நாட்டின் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றுக்கு வராதமை மிகவும் கவலைக்குரியதே என்று தெரிவித்துள்ளார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன.
பிரிட்டிஸ்சார் இலங்கையை விடுவித்த 71ஆவது ஆண்டு நிறைவு விழா காலி முகத்திடலில் நேற்றுக் காலை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த ஏற்பின் மூலம் பன்னாட்டுச் சமூகங்களின் முன்னிலையில் தனது இயலாமையையும் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
‘எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சியை நாட்டுக்குப் பெற்றுக் கொடுப்பதில் நாம் அனைவரும் அரசியல் தலைவர்கள் என்ற ரீதியில் தோல்வியடைந்துள்ளோம்’
‘அரசுகளை மாற்றுவதன் மூலம் மக்கள் தமது கடமைகளை ஆற்றுகின்றனர். ஆனால் ஆட்சிக்கு வரும் அனைத்து அரசுகளும் மக்களின் எண்ணங்களைச் சிதைத்துள்ளன’ என்றும் தனது நீண்ட உரையில் குறிப்பிட்டுள்ளார் அரச தலைவர்.
மேற்குறிப்பிட்ட தனது குற்றச்சாட்டுக்களில் முதன்மைப் பங்கு தனக்கே உண்டு என்பதை அரச தலைவர் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவர் தேர்தலில் மகிந்தவைத் தோற்கடித்து தற்போதைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவைத் தமிழர்கள் ஆட்சிப் பீடத்தில் ஏற்றி வைத்தனர். இதற்கு முக்கிய காரணம் தமது பிரச்சினைகளை அவர் மூலமாகவாவது தீர்க்கலாம் என்று அவர்கள் கருதியமைதான்.
‘2015ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் மண் கிடங்குக்குள் சென்றிருப்பேன். தமிழர்கள் எனக்குச் செய்த உதவிக்குப் பதிலுதவி செய்வேன்’ என்று அரச தலைவர் பகிரங்கமாகப் பல மேடைகளில் தெரிவித்திருந்தார். இவ்வாறிருக்கையில், எவரை தமிழர்கள் வெறுத்தார்களோ, மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து எவருக்கு எதிராக வாக்களித்து எவரைத் தமிழர்கள் தோற்கடித்தனரோ இன்று அவருடனேயே அரச தலைவர் கைகோர்த்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவை அரச தலைவராக்கியபோது தமிழர்கள் முன்வைத்த அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை வெளிப்படுத்தல், பௌத்த மயமாக்குதலை வடக்கு –கிழக்கில் தவிர்த்தல், இராணுவ இருப்பைக் குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் இன்றளவும் அவ்வாறே உள்ளன. காணி விடுவிப்பு ஓரிரு இடங்களில் இடம்பெற்ற போதிலும் ஒட்டுமொத்தமாக நோக்கின் தமிழர்களுக்கு நன்றிக் கடனாக மைத்திரிபால சிறிசேன எதையும் செய்யவில்லை என்பதே உண்மை. நிதர்சனமும் கூட.
அரச தலைவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றப் பழகிக்கொள்ளல் வேண்டும். அரசியல் மோதல்களிலும், பலப்பரீட்சைகளிலும் அப்பாவித் தமிழர்களின் வாழ்க்கை சிக்கிச் சின்னாபின்னமாகும் அவலத்தை அவர் முடிவுக்குக் கொண்டு வருதல் வேண்டும். அதை விடுத்துவிட்டு இயலாமையை ஏற்றுக்கொள்வதால் மட்டும் எதுவும் நடக்கப்போவதில்லை.
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தையாவது வடக்கும் – கிழக்கும் இணைந்து கொண்டாடும் வகையில் அவரின் செயற்பாடுகள் அமையட்டும். இந்த வருடமே அவருக்கான இறுதி வருடம். இதுவே அவருக்கான இறுதிச் சந்தர்ப்பமும்கூட.