அணுகுமுறை மாறட்டும்!!

இலங்கையில் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் நீதி அமைச்சர் தலதா அத்து கோரள. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனிடமும் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடமும் தாம் நேரிலேயே இந்த விடயத்தைத் தெரிவித்துவிட்டார் என்று கூறியிருக்கிறார் அமைச்சர்.

அவர் மட்டுமல்லர், தற்போதைய ஆட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் எல்லோருமே இதே கருத்தையே கொண்டிருக் கிறார்கள். தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்குள் வெளிப்படையாக இதனைத் தெரிவிக்கமாட்டார் என்றாலும் வெளிநாடுகளில் செய்தியாளர்களின் கேள்வி களுக்குப் பதிலளிக்கும்போது இதனையே சொல்வார்.

அரசியல் கைதிகள் என்று யாரும் இலங்கையில் இல்லை என்று அடித்துக்கூறுவார். அரச தலைவர் மைத்திரிபாலவோ, பயங்கரவாதத்தை தோற்கடித்த படையினர் என்று ஐக்கிய நாடுகள் சபையிலேயே பயங்கரவாத முத்திரையைக் குத்துபவர் என்பதால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களை அரசியல் கைதிகள் என்று அவரும் சொல்லப்போவதில்லை.

இப்படிக் கைதாகிச் சிறைகளில் இருப்பவர்களும் வழக்கு களை எதிர்கொண்டவர்களும் பயங்கரவாதிகள் என்கிற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் இந்த விடயத்தை அரசியல் தீர்மானம் ஒன்றின் மூலம் அணுகுவார்கள் என்று எண்ணுவது இயலாமையின் வெளிப்பாடே.

அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச் சட்டமுமே தமிழர்களுக்கு எதிரான அரசியல் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டவைதான் என்பதுதான் தமிழர் தரப்பின் நிலைப்பாடு. இந்தச் சட்டங்கள் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்பட்டன.

தமிழர்களைத்தான் இந்தச் சட்டங்களைக் கொண்டு ஒடுக்கினார்கள். எனவே இந்தச் சட்டங்களே அரசியல் நோக்கம் கருதிய, இன ஒடுக்குமுறையை நோக்காகக்கொண்ட சட்டங்கள்தான்.

அதற்கும் மேலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தமது அரசியல் இலக்கை அடைவதற்காக அவர்கள் சார்ந்திருந்த இயக்கத்தின் கட்டளையை ஏற்றுச் செயற்பட்டவர்களே தவிர, தனிப்பட்ட ரீதியில் குற்றமிழைத்தவர்கள் அல்லர் என்பதால் அவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்க முடியாது, அரசியல் கைதிகளாகவே பார்க்கவேண்டும் என்று சம்பந்தன் பல தடவைகளில் தெளிவுபடுத்தியிருந்தார்.

இத்தனைக்குப் பின்னரும் ஆட்சித் தலைவர்கள் மீண்டும் மீண்டும் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று கூறுவது இந்த விடயத்தை அவர்கள் எப்படி அணுகுகிறார்கள் அல்லது அணுகப்போகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. எனவே இந்த விடயத்தில் இனியும் ஆட்சியாளர்களை நம்பிக் கொண்டு இராமல் மக்களை ஒன்று திரட்டி போராட்டக் களத்தில் குதிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வரவேண்டும். போராட்டத்தை மக்கள் மயப்படுத்தி பெருமெடுப்பில் ஆட்சிச் செயல்பாடுகளை முடக்கி கனதியான செய்தியை அரசுக்கு வழங்கினால் தவிர இந்த விடயத்தில் பேச்சு மூலமான தீர்வு ஒன்றுக்கு இனிமேலும் காத்திருப்பதில் பயனில்லை.

அரசுடனான அணுகுமுறையை மாற்றுவதற்கான காலம் வந்து விட்டது என்று மேடைகளில் மட்டும் முழங்கிப் பயனில்லை. மக்களைத் திரட்டி பெரும் போராட்டங்களை அரசுக்கு எதிராக நடத்துவதன் மூலம், ஆட்சியை முடக்கு வதன் மூலம் மட்டுமே உரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆங்காங்கே மக்கள் தன்னெழுச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். அவற்றை ஒருங்கிணைத்து உரிய தலைமைத்துவத்தை வழங்கி ஒன்றுபட்ட பெரும் அறப் போராட்டத்தை நடத்தி இந்த விடயத்தில் காத்திரமான செய்தியை வழங்குவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனியும் தயக்கம் காட்டக்கூடாது.

அரச தலைவரோடு சந்திப்பு நடத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினை தீரப்போவதில்லை. இதனை அரசியல் தீர்மானம் மூலம் அணுகாமல் சட்டத்தைக் காட்டி ஏமாற்றுவதிலேயே அவரும் காலத்தைக் கடத்தப் போகிறார். கடந்த காலங்களிலும் அவர் அதைத்தான் செய்திருக்கிறார். எனவே இந்தத் தருணத்திலா வது தமிழ் மக்களுக்கு உரிய தலைமைத்துவத்தை வழங்குவதற்குக் கூட்டமைப்பு முன்வரவேண்டும்.

You might also like