காலம் கடத்­தும் அர­சின் போக்கு!!

0 16

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் கீழ் இயங்­கும் தேசிய நல்­லி­ணக்­கப் பொறி­மு­றை­களை ஒருங்­கி­ணைப்­ப­தற்­கான செய­ல­கத்­தின் கீழ், காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கம், உண்­மை­யைத் தேடும் ஆணைக்­குழு, பொறுப்­புக்­கூ­றல் பொறி­மு­றை­கள், இழப்­பீட்­டிற்­கான பணி­ய­கம் என்­பன உள்­ளன. நிலை­மாறு கால நீதிச் செயற்­பாட்­டின் முக்­கிய அங்­கங்­கள் இவை.

நிலை­மாறு கால நீதிச் செயற்­பாடு தொடர்­பில் ஊட­கங்­க­ளின் பொறுப்­புத் தொடர்­பில், தேசிய நல்­லி­ணக்­கப் பொறி­மு­றை­களை ஒருங்­கி­ணைப்­ப­தற்­கான செய­ல­கத்­தி­னால் செய­ல­மர்வு நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்­தச் செய­ல­ணி­யின் செய­லர் மனோ தித்­வெல்ல தலை­மை­யில் செய­ல­மர்வு இடம்­பெற்­றி­ருந்­தது.

ஊட­கங்­கள் தேசிய நல்­லி­ணக்­கத்­துக்கு குந்­த­கம் விளை­விக்­கும் வகை­யில் செய்­தி­கள் வெளி­யி­டு­கின்­றன. நிலை­மாறு கால நீதிச் செயற்­பாட்­டுப் பொறி­மு­றை­கள் அள­வுக்கு அதி­க­மாக அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்­தப் பொறி­ மு­றை­கள் தொடர்­பில் அர­சி­யல்­வா­தி­க­ளால் மக்­க­ளுக்கு தவ­றான – பொய்­யான தக­வல்­கள் பரப்­பட்டு வரு­கின்­றன. ஊட­கங்­கள் அவற்­றுக்கு துணை­போ­கின்­றன. என்பது வளவாளர்களின் முக்கிய குற்றச்சாட்டு.

இந்­தச் செயல்­முறை அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­தக் கூடாது என்­பது செய­ல­மர்வை நடத்­திய வள­வா­ளர்­க­ளின் முதன்மை நோக்­க­மாக இருந்­தது. நிலை­மாறு கால நீதிப் பொறி­முறை தொடர்­பில் அர­சி­யல்­வா­தி­க­ளின் கருத்­துக்கு ஊட­கங்­கள் முக்­கி­யத்­து­வம் கொடுக்­கக் கூடாது. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் கருத்­துக்­க­ளுக்கே முக்­கி­யத்­து­வம் கொடுக்­க­வேண்­டும் என்­றும் வள­வா­ளர்­கள் அழுத்தி உரைத்­த­னர்.

நல்­லி­ணக்­கம் என்­பது உதட்­ட­ள­வில் பேசும் வார்த்­தை­யா­கவே இப்­போ­தும் இருக்­கின்­றது. அது உள்­ளத்­தி­லி­ருந்து உதிக்­கும் வார்த்­தை­யாக இற்றைவரை மாற்­றம் பெற­வில்லை. அந்த மாற்­றத்தை ஊட­கங்­க­ளுக்கு பாடம் எடுப்­ப­தால் ஏற்படுத்தி விட முடியுமா?

இந்­தச் செயல்­முறை தொடர்­பில் ஊட­கங்­கள் எவ்­வ­ளவு உரைத்­தா­லும், இறு­தி­யில் தீர்­மா­னம் எடுத்­துச் செயற்­ப­டுத்த வேண்­டி­ய­வர்­க­ளாக இருப்­பது நாட்­டின் அர­சி­யல்­வா­தி­களே. அதி­லும் குறிப்­பாக அரசை இயக்­கும் தலை­வர்­கள். அவர்­க­ளுக்கு இந்­தச் செயன்­மு­றை­களை முன்­னெ­டுக்­கும் ‘அர­சி­யல் விருப்பு’ இருக்­கின்­றதா என்­பதே இங்கு பிர­தா­ன­மான கேள்வி. ஊட­கங்­க­ளுக்­குச் செய­ல­மர்வு நடத்­து­வ­தால், அர­சின் தலை­வர்­க­ளுக்கு ‘அர­சி­யல் விருப்பு’ வந்­து­வி­டுமா?

இந்­தச் செய­ல­மர்வு தலைமை அமைச்­ச­ரின் பணி­ய­கத்­தி­னால் நடத்­தப்­பட்­டுக் கொண்­டி­ருந்த அதே­நா­ளில், நிவித்­தி­க­ல­வில் உரை­யாற்­றிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, எதிர்­வ­ரும் 24ஆம் திகதி தாம் ஐக்­கிய நாடு­கள் பொதுச் சபை­யில் உரை­யாற்­ற­வுள்­ள­தா­க­வும் பாது­காப்பு படை­யி­ன­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து அவர்­களை விடு­விப்­பது தொடர்­பாக ஐக்­கிய நாடு­கள் சபை­யில் புதிய அறி­விப்­பைச் செய்ய எதிர்­பார்த்­தி­ருப்­ப­தா­க­வும், நாட்­டில் உள்ள பல்­வேறு சவால்­கள் அதன்­மூ­லம் தீர்க்­கப்­ப­டு­மென்று தான் நம்­பு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

நிலை­மாறு கால நீதிச் செயன்­மு­றை­யின் முக்­கிய அங்­க­மான பொறுப்­புக் கூறல் செயன்­முறை தொடர்­பில் நாட்­டின் தலை­வர் இவ்­வாறு தெரி­விக்­கை­யில், ஊட­கங்­க­ளுக்கு பாடம் எடுப்­ப­தால் தேசிய நல்­லி­ணக்­கப் பொறி­மு­றை­களை ஒருங்­கி­ணைப்­ப­தற்­கான செய­ல­கம் அடை­யும் லாபம்­தான் என்ன?

நிலை­மாறு கால நீதிச் செயன்­மு­றையை நிறை­வேற்­ற­வும் இந்­தக் கூட்டு அர­சுக்கு மக்­கள் ஆணை கிடைத்­தது. அதன் பின்­ன­ரும், நாட்­டின் தலை­வர்­கள் அர­சி­யல் விருப்பு இல்­லா­மல் காலம் கடத்­தும் செயற்­பா­டு­க­ளில் ஈடு­பட்­டி­ருக்­கும்­போது, ஊட­கங்­க­ளுக்கு பாடம் எடுப்­பதை விட­வும், அர­சி­யல் தலை­வர்­க­ளுக்கு நிலை­மாறு கால நீதிச் செயன்­மு­றை­யின் முக்­கி­யத்­து­வத்தை இடித்­து­ரைத்­தால் பொருத்­த­மாக இருக்­கும்.

You might also like