‘‘கூட்­ட­மைப்பை உடைக்­கா­மல்- மக்­க­ளின் மனம் அறி­ய­வுள்­ளேன்’’

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் போட்­டி­யிட்டு வட­மா­காண சபை­யின் முத­ல­மைச்­ச­ராக அர­சி­ய­லுக்­குள் நுழைந்­த­வர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். ஏனைய மாகாண சபை­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக இருக்­கும் நோக்­கில், ஏரா­ளம் எதிர்­பார்ப்­பு­க்க­ளு­டன், நீண்ட காலங்­க­ளின் பின்பு உரு­வாக்­கப்­பட்ட அந்த மகா­க­ண­சபை ஊழல், மோச­டி­கள் நிறைந்த சபை­யா­க­வும் எவ்­வித பய­னும் அற்ற சபை­யா­க­வும் தனது ஆயுளை முடித்­துக்­கொண்­டது வர­லாற்­றுப் பதிவு. இந்த விட­யத்­தில் பல விமர்­ச­னங்­க­ளுக்­குச் சொந்­தக்­கா­ரர் விக்­னேஸ்­வ­ரன். முத­ல­மைச்­சர் பதவி முடிந்த கையு­டன் தனிக் கட்­சியை ஆரம்­பித்த அவர் மீது மேலும் விமர்­ச­னங்­கள் எழுந்­தன.  முத­ல­மைச்­ச­ராக இருந்த காலத்­தில் கோள்­வி­யை­யும் அதற்­கான பதி­லை­யும் தானே தயா­ரித்து ஊட­கங்­க­ளுக்கு அனுப்­பி­வ­ரு­வது அவ­ரு­டைய வழமை. அதற்­கேற்ப அவ­ரால் தற்­போது ஊட­கங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்பட்ட கேள்வி – பதில் இது. ‘’தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை நான் உடைக்க மாட்­டேன்’’ என்­றும் ‘’கூட்­ட­மைப்பை தன் வழியே செல்­ல­விட்டு மக்­க­ளின் உண்­மை­யான மனம் அறிய பிர­யத்­த­னங்­க­ளில் ஈடு­பட்­டுள்­ளேன் என்­றும் இதில் அவர் விவ­ரிக்­கி­றார். அத்­து­டன் ஒற்­று­மை­யா­கச் செயற்­ப­ட­மு­டி­யா­த­வர் என்று தன் மீது முன்­வைக்­கப்­பட்­டி­ ருக்­கும் விமர்­ச­னங்­க­ளில் ஒன்­றுக்­கும் விடைய­ளிக்­கி­ றார். அவ­ரு­டைய கேள்­வி­யும் பதி­லும் அப்­ப­டியே தரப்­ப­டு­கி­றது. 

கேள்வி:- ஒற்­றுமை பற்­றிப் பேசிக்­கொண்டு புதி­ய­தொரு கட்­சி­யைத் தொடங்­கி­யுள்­ளீர்­கள்? நீங்­கள் தமி­ழர் ஒற்­று­மை­யைக் குலைப்­பதை விட எந்த அடிப்­ப­டை­யில் உங்­கள் கட்சி மற்­ற­வற்­று­டன் வித்­தி­யா­சப்­ப­டும் என்று கூற­லாமா?

பதில்:- ஒற்­றுமை என்­றால் என்ன? கொள்கை எது­வாக இருந்­தா­லும் ஒற்­றுமையைக் காக்க எமது பிர­தி­நி­தி­கள் நாடா­ளு­மன்­றத்­தில் ஒரு­மித்­துக் கையு­யர்த்த வேண்­டும் என்று எண்­ணு­கின்­றீர்­களா? அவ்­வா­றான ஒற்­றுமை இது­வ­ரை­யில் எதைச் சாதித்­தது? அதா­வது தான்­தோன்­றித்­த­ன­மா­கக் கட்­சி­யின் தலை­மைத்­து­வம் நடந்து கொண்­டா­லும் ஒற்­று­மையை முன்­னிட்டு வாய் மூடிக்­கொண்டு இருக்­க­வேண்­டும் என்று எண்­ணு­கின்­றீர்­களா? எமது ஒற்­றுமை என்­பது மற்­ற­வர்­கள் மதிப்­ப­தான ஒற்­று­மை­யாக இருக்க வேண்­டும். பத­வியை நீடித்து வைத்­தி­ருப்­ப­தற்­கா­க­வும், பய­ணங்­கள் பெறு­வ­தற்­கா­க­வும், பல்­சுவை உண்­டி­களை உண்­ப­தற்­கா­க­வும், பல்­வித தனிப்­பட்ட நன்­மை­க­ளைப் பெறு­வ­தற்­கா­க­வும் நாங்­கள் ஒற்­று­மைப்­பட்­டால் எம்மை எவ­ரும் மதிக்­க­மாட்­டார்­கள். எமது எதி­ரி­கள் தங்­க­ளுக்­குள் சிரித்­துக்­கொண்டு எம்மை மதிப்­ப­து­போல் பாசாங்கு செய்­வார்­கள். ஏன் என்­றால் அவர்­க­ளுக்கு எங்­கள் வலு­வின்மை புரிந்­தி­ருக்­கும். எத­னைக் கொடுத்­தால் அல்­லது எத­னைத் தரு­வ­தா­கக் கூறி­னால் தமிழ்த் தலை­வர்­கள் பணிந்து விடு­வார்­கள் என்று அவர்­க­ளுக்­குத் தெரி­யும்.

இது ஒரு கதை
அர­சவை (ஸ்டேட் கவுன்­சில்) காலத்­தில் (1948ஆம் ஆண்­டுக்கு முன்­னர்) ‘சிங்­க­ள­வர் மட்­டும்’ அமைச்­ச­ரவை ஒன்றை அர­ச­வை­யில் ஏற்­ப­டுத்த என்ன செய்ய வேண்­டும் என்று அறி­வ­தற்­காக அறி­ஞர்­க­ளைத் தேடி­னார். எல்­லோ­ரும் கணி­தப் பேரா­சி­ரி­யர் சி.சுந்­த­ர­லிங்­கமே அதற்கு உகந்­த­வர் என்று கூறி­னார்­கள். அடங்­காத் தமி­ழர் முன்­ன­ணி­யைத் தாபித்த அதே ‘சுந்­தர்’ தான் அவர். ‘’நீ தான் கணக்­கில் புலி. எங்கே ‘சிங்­க­ள­வர் மட்­டும்’ அமைச்­ச­ர­வையை அமைக்க என்ன செய்ய வேண்­டும் என்று சொல்லு பார்ப்­போம்?’’ என்று கேட்­டார் டி.ஸ்! சொல்­லிக் கொடுத்­தார் சுந்­தர்! டி.பி.ஜெய­தி­ல­க­வின் கீழ் ‘சிங்­க­ள­வர் மட்­டும்’ அமைச்­ச­ரவை உத­ய­மா­கி­யது. தமி­ழர்­களோ, மற்­ற­வர்­களோ அதில் இடம் பெற­வில்லை. பின்­னர் எவரோ டி.எஸ். சேன­நா­ய­க்கா­வி­டம் ‘’என்ன நடந்­தது?’’ என்று கேட்­டி­ருக்­கின்­றார்­கள். ‘நீ அழ­காய் இருக்­கின்­றாய் என்று மயி­லி­டம் கூறி­னேன். உடனே அது தனது சிற­கொன்­றைத் தந்து விட்­டது’ என்­றார் டி.எஸ். இவ்­வாறு தான் எங்­க­ளுக்­குப் பின்­பு­ற­மாக நின்று சிரித்­துக் கொண்டு எங்­க­ளைக் கொண்டு சிங்­கள அர­சி­யல்வாதி­கள் தமது காரி­யத்­தைச் சாதித்­துக் கொள்­கின்­றார்­கள். அதே நேரம் எமது ஒற்­று­மை­யை­யும் அவர்­கள் குலைத்து வரு­கின்­றார்­கள். எமது தமிழ்த் தலை­மை­கள் எவ்­வ­ளவு புத்­திக் கூர்மை இருப்­பி­னும் மாய்யா­லத்­துக்கு அடி­மைப்­ப­டக் கூடி­ய­வர்­கள் என்று தெரி­கின்­றது. கணி­தத்­தில் மேம்­பட்ட, கல்­வி­யில் மேம்­பட்ட, வழி­கா­ணும் திறம் படைத்த எம்­ம­வர்­கள் பசப்பு வார்த்­தை­க­ளுக்­கும் மாய்­மா­லங்­க­ளுக்­கும் எடு­பட்­டுப்­போ­கின்­றார்­கள். அதற்­குக் கார­ணம் அவர்­க­ளி­டம் குடி கொண்­டி­ருக்­கும் ஆண­வ­மும் செருக்­கும். இவ்­வா­றா­ன­வர்­களை நாம் நாடா­ளு­மன்­றத்­துக்கு அனுப்­பி­னால் அவர்­க­ளுக்கு எமது ஒற்­றுமை என்­பது ஒரு பொருட்­டா­காது. அவர்­கள் எமது ஒற்­று­மையை வைத்­துக்­கொண்டு ஒரு­வ­ருக்­குப் பத்து இலட்­சமா? நூறு இலட்­சமா? என்று பேரம் பேசவே விரும்­பு­வார்­கள். தமி­ழர்­க­ளின் வருங்­கா­லம் பற்­றிச் சிந்­திக்க மாட்­டார்­கள்.

எந்த ஒற்­று­மை­யைக்
குறிப்­பி­டு­கின்­றீர்­கள்?
எதற்­காக வடக்­குக் கிழக்கு இணைப்­புக் கேட்­டோம்? எதற்­காக எமக்­கி­ருக்­கும் உள்­நாட்டு சுயாட்சி உரித்தை வலி­யு­றுத்­தி­னோம்? எதற்­காக ‘கூட்­டாட்சி’ கேட்­டோம் என்­பதை மறந்து விடு­வார்­கள். ஆனால், ஒற்­று­மை­யாய் இருப்­பார்­கள். இந்த ஒற்­று­மை­யையா நீங்­கள் ஒற்­றுமை என்று குறிப்­பி­டு­ கின்­றீர்­கள்? கொள்­கை­யற்ற, சுய­ந­லம் கரு­திய, மக்­கள் மேல் கரி­ச­னை­யில்லா ஒற்­றுமை இது. இவ்­வா­றான ஒற்­று­மை­யையே நாம் இது­கா­றும் பார்த்து வந்­துள்­ளோம். நாம் நினைத்­ததே தமி­ழர்­க­ளின் ஆசை­யும் வேணவாக்க ளும். எமது தீர்­மா­னங்­க­ளுக்கு அப்­பால் தமி­ழர்­க­ளுக்கு எது­வும் தேவை­யில்லை. கொள்­கை­கள் என்­பன தேர்­தல் அறிக்கைகளை அலங்­க­ரிப்­ப­தற்கே. நடை­மு­றைக்கு அவை சாத்­தி­ய­மில்லை என்ற எண்­ணத்­தில்; தான்­தோன்­றித்­த­ன­மாக எம்மை வழி­ந­டத்­து­வோரை நாம் வாய் பொத்தி, கைகட்டி நின்று வர­வேற்க வேண்­டும். எது நடந்­தா­லும் அதைத்­தான் நாம் செய்ய வேண்­டும். அதைத்­தானா ஒற்­றுமை என்று கூறு­கின்­றீர்­கள்?
இந்த ஒற்­றுமை எங்­களை எங்கு கொண்டு செல்­லும் என்று சிந்­தித்­தீ ர்­களா? சில­ரின் சொகு­சுக்­கும், மவு­சுக்­கும் பல­ரின் அவ­லத்­துக்­கும், அஸ்­த­ம­னத்­துக்­குமே அந்த ஒற்­றுமை வழி­வ­குக்­கும்.

கூட்­ட­மைப்பை உடைக்­கமாட்­டேன்
முல்­லைத்­தீவு மாவட்­டம் பௌத்த, சிங்­கள ஆக்­கி­ர­மிப்­புக்கு ஆளாகி வரு­கி­றது. எதற்­காக மகா­வலி அதி­கா­ர­ச­பை­யின் ஆதிக்­கத்தை முல்­லைத்­தீவு நக­ரம் வரை­யில் விரிவாக்கினீர்கள் என்று கேட்க எமது பிர­தி­நி­தி­கள் எவ­ரும் இல்லை. சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் பற்றி வலு­வான நட­வ­டிக்­கை­கள் எடுக்க, வழக்­கு­க­ளைப் பதிய எவ­ரும் இல்லை. ஏன் என்­றால் அவற்றை எவ­ரா­வது செய்ய முன்­வந்­தால் எமது ஒற்­றுமை குலைந்து விடும் என்­கி­றார்­கள். எமக்­குப் படி­ய­ளக்­கும் கொழும்பு நக­ரக் கன­வான்­க­ளின் மனதை நாம் புண்­ப­டுத்­தி­வி­டு­வோம் என்­கி­றார்­கள். அத­னால் தான் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை நான் உடைக்க மாட்­டேன் என்று கூறி அதற்­கான நட­வ­டிக்­கை­க­ளை­யும் எடுத்து வரு­கின்­றேன். அதா­வது தேசி­யக் கட்­சி­கள் போல் இப்­போது பேசத் தலைப்­பட்­டி­ருக்­கும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பைத் தன் வழியே செல்­ல­விட்டு மக்­க­ளின் உண்­மை­யான மனம் அறி­யும் பிர­யத்­த­னங்­க­ ளில் ஈடு­பட்­டுள்­ளேன். நான் தமி­ழர் ஒற்­று­மை­யைக் குலைக்க வர­வில்லை. ஆனால் மக்­கள் மன­தில் குடி­கொண்­டி­ருக்­கும் அறி­யா­மை­யைக் குலைத்து வரு­கின்­றேன். கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் மக்­கள் நல­னுக்­காக ஒன்­றி­ணைந்து போரா­டு­வ­தா­கவே உண்­மை­யான ஒற்­றுமை அமைய வேண்­டும் என்ற பாடத்­தைப் புகட்டி வரு­கின்­றேன். தற்­போ­தைய ஒற்­று­மை­யா­னது அதி­கா­ரத்தை ஓர் இடத்­தில் குவித்து விட்­டி­ருக்­கி­றது. அந்த அதி­கார மையம் இட்­டதே சட்­டம். எவ­ரும் கேள்­வி­கள் கேட்க முடி­யாது. இவ்­வாறு அதி­கா­ரம் ஓர் இடத்­தில் தேங்­கி­ய­தால் ஏற்­பட்ட எதிர்­மா­றான விளைவை ஜே.ஆரின் காலத்­தில் கண்­டுள்­ளோம். எம்.ஆரின் (மகிந்த ராஜ­பக்ச) காலத்­தில் கண்­டுள்­ளோம். இப்­போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் காலத்­தி­லும் கண்டு வரு­கின்­றோம். அதி­கா­ரம் மையப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தால் பாதிப்பு மக்­க­ளுக்கே. ஜன­நா­ய­கம் ஒதுக்கி வைக்­கப்­ப­டு­கி­றது.

மற்­றைய கட்­சி­க­ளில் இருந்து
மாறு­ப­டும் விதம் இது!
நாம் எவ்­வாறு மற்­றக் கட்­சி­க­ளி­லி­ருந்து மாறு­ப­டு­கின்­றோம் என்று கேட்­டுள்­ளீர்­கள். முத­லா­வது, நாம் எமது யாப்பின் பின்படி கீழி­ருந்து மேல் நோக்­கிச் செல்­லும் ஒரு கட்­ட­மைப்பை உண்­டாக்­கி­யுள்­ளோம். முதல் வரு­டத்­தில் மட்­டும் பிர­தி­நி­தி­களை நான் தேர்ந்­தெ­டுப்­பேன். அதன் பின்­னர் வட்­டா­ரம், தொகுதி, மாவட்­டம் என்­ற­வாறு கீழி­ருந்து மேல் வரக்­கூ­டி­ய­தாக அடி­மட்­டத் தமிழ் மக்­கள் நிர்­வாக மட்­டத்­துக்கு உயர வழி செய்­துள்­ளோம். எங்­கள் காலத்­தில் எமக்கு உரி­மை­கள் கிடைக்­குமோ தெரி­யாது. ஆனால் எம்­மு­டைய காலத்­தின் பின்­ன­ரும் எமது கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் எமது போராட்­டத்­தைக் கொண்டு நடத்­தக் கூடி­ய­தாக எமது யாப்புத் தயா­ராக்­கப்­பட்­டுள்­ளது. எமது இளை­ஞர்­கள் நாம் விட்ட இடத்­தி­லி­ருந்து முன்­னோக்கி எமது விடு­த­லைப் பய­ணத்­தில் பய­ணிக்க நாம் வழி வகுத்­துள்­ளோம்.

இரண்­டா­வது…
மரபு ரீதி­யான கட்­சி­க­ளில் நாம் காணும் ஜன­நா­யக மறுப்­புப் போன்ற குறை­பா­டு­களை நாம் நீக்­கி­யுள்­ளோம். இத­னால் காலத்­தின் தேவை­யைப் பூர்த்தி செய்­துள்­ளோம். நேர்­மை­யான, பொருத்­த­மான தகை­மை­யு­டைய உறுப்­பி­னர்­க­ளைத் தெரி­வு­செய்ய வழி செய்­துள்­ளோம். ஊழல்­க­ளைத் தவிர்க்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளோம். கட்­சிக்கு அப்­பால் இருந்து எமக்கு அறி­வுரை வழங்­கு­வ­தற்­குப் பொதுச் சமூக முக்­கி­யஸ்­தர்­களை நிய­மித்­துள்­ளோம். அவர்­கள் தேர்­த­லில் ஈடு­ப­ட­மு­டி­யாது. ஆனால் நிர்­வா­கப் பிறழ்­வு­கள், ஊழல்­கள், பிழை­யான கொள்­கை­கள், வரப்­போ­கும் அர­சி­யல், பொரு­ளா­தா­ர­, சமூக இடர்­கள் போன்ற பல­வற்­றைப் பற்­றி­யும் எமக்கு அறி­வுரை வழங்­கு­வார்­கள். தேர்­தல் கால வாக்­கு­று­தி­க­ளைக் காற்­றில் பறக்க விடவோ, பிற­ழவோ இந்த ஆலோ­ச­கர் சபை இடம் கொடுக்­காது. ஆகவே காலத்­துக்­குக் காலம் மக்­கள் அபி­லா­சை­க­ளை­யும் எதிர்­பார்ப்­பு­க­ளை­யும் கண்­ட­றிந்து உள்­வாங்­கு­வ­தற்கு எமது கட்சி ஒரு மக்­கள் சக்­தி­யாக இயங்­கு­வ­தற்கு ஏது­வாக நம் கட்­ட­மைப்பை அமைத்­துள்­ளோம்.

மூன்­றா­வது…
மக்­கள் நலன் சார்ந்த, ஆரோக்­கி­ய­மான, குறு­கிய, நெடுங்­கா­லத் திட்ட வடி­வ­மைப்­புக்­களை ஏற்­ப­டுத்தி அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த எண்­ணி­யுள்­ளோம். கூடு­மான வரை இரு­மொ­ழிப் பரிட்­ச­யம் கொண்­ட­வர்­க­ளையே எமது கட்­சி­யின் வேட்­பா­ளர்­க­ளாக இணைக்க உள்­ளோம். முக்­கி­ய­மாக நாம் கருத வேண்­டி­யது பிழை­யான வழி­யில் நாம் பய­ணம் செய்­தால் எமது பய­ணம் பிழை­யான குறிக்­கோ­ளையே அடை­யும் என்­ப­தையே. ஆகவே தான் திசை மாறிய பய­ணங்­கள் எமக்­குப் பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் என்ற கருத்தை நாம் முன்­வைத்­துச் செல்­கின்­றோம்.

ஒற்­றுமை சுய­ந­லத்­துக்­காக
இருக்­கக் கூடாது
ஒற்­றுமை பிழை­யான இலக்கை நோக்­கிப் போவ­தால் என்ன நன்மை கிடைக்­கும் என்ற கேள்­வி­யை­முன்­னி­றுத்­தி­யுள்­ளோம். மாறாக அத­னால் ஏற்­ப­டக் கூடிய தீமை­க­ளைச் சுட்­டிக் காட்டி வரு­கின்­றோம். மேலும் கூட்­டாட்சி வேண்­டாம், வடக்­கு,கிழக்கு இணைப்பு வேண்­டாம், பௌத்­தத்­துக்கு முத­லி­டம் கொடுக்க ஆட்­சே­பணை இல்லை, எமக்­கு­ச் சுயாட்சி தேவை­யில்லை என்று கூறு­வ­தற்கு எமக்­குள் ஒற்­றுமை ஏன்? அதைத்­தான் எல்­லாச் சிங்­கள அர­சு­க­ளும் கூறி வரு­கின்­ற­னவே? கூட்­டாட்சி தர­மாட்­டோம், இணைப்புத் தர­மாட்­டோம், சுயாட்சி தர­மாட்­டோம், பௌத்­தத்­துக்கே முத­லி­டம் வேண்­டும் என்­றெல்­லாம். அவர்­கள் கூறு­வதை நாம் ஏற்­றுக்­கொண்­டோ­மா­னால் எமக்­கென எதை நாம் வேண்டி நிற்­கின்­றோம்? எமக்­குள் ஒற்­றுமை இல்­லா­ம­லேயே இவற்­றைத்­தான் எல்­லாச் சிங்­க­ளப் பெரும்­பான்­மைக் கட்­சி­க­ளும் தரு­வ­தாக அல்­லது தர­மாட்­டோம் என்று கூறி வரு­கின்­ற­னவே!
ஆகவே ஒற்­று­மை­யா­னது கொள்கை அடிப்­ப­டை­யில் இருக்க வேண்­டும். மக்­க­ளின் நியா­ய­மான கோரிக்­கை­க­ளுக்­கா­கப் போரா­டு­வ­தாக இருக்­க­வேண்­டும். சுய­ந­லத்­துக்­காக இருக்­கக்­கூ­டாது. நாம் இவற்றை இவ்­வாறு மாறு­பட்ட விதத்­தில் எடுத்­துச் செல்­வது தான் நாம் மற்­ற­வர்­க­ளில் இருந்து வேற்­று­மைப்­பட்­ட­வர்­கள் என்­பதை எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

You might also like