கொழும்பில் நேற்று  சாந்தத்துக்கான அறிகுறி!!

நேற்­றைய தினம் கொழும்பு அர­சி­ய­லில் இரு முக்­கிய விட­யங்­கள் நடந்­தே­றின. ஒன்று அண்­மை­யில் அரச தலை­வர்  மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் தலைமை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட மகிந்த ராஜ­பக்­ச­வின் சட்­டத்­துக்கு முர­ணான தலைமை அமைச்­சர் அலு­வ­ல­கத்­திற்­கான நிதி­களை முடக்­கும் தீர்­மா­னம் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப் பட்­டது.

மற்­றொன்று ஐக்­கிய தேசிய முன்­னணி தலை­மை­யி­லான ஆட்­சிக்­குத் தமது கட்­சி­யைச் சேர்ந்த 14 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஆத­ர­வ­ளிக்­கி­றார்­கள் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அரச தலை­வ­ருக்கு அறி­வித்­தது.

ஐப்­பசி 26ஆம் நாள் மாலை நேரத்­துக் குழப்­ப­மா­கத் தொடங்­கப்­பட்ட கொழும்பு அர­சி­யல் திரு­கு­தா­ளங்­கள் ஒரு மாதத்­ துக்­கு மேலா­கி­யும் முடி­வின்­றித் தொடர்ந்­தது.

தனது ஆட்­சிக் காலத்­தில் இருந்­த­தைப் போன்று இம்­மு­றை­யும் ஏனைய கட்­சி­க­ளின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை விலைக்கு வாங்­கிக் கொண்டு பல­மான ஒரு ஆட்­சியை முன்­கொண்டு செல்ல முடி­யும் என்று மைத்­திரி – மகிந்த தரப்­பி­னர் போட்ட கணக்கு இம்­முறை எடு­ப­ட­வில்லை.

இந்த ஆட்­சி­யின் காலம் முடி­வ­டை­வ­தற்கு இன்­னும் ஒன்­றரை வரு­டங்­கள் மட்­டுமே எஞ்­சி­யி­ருக்­கும் நிலை­யில் அர­சி­யல் சுய­ப­ரி­சோ­த­னை­க­ளில் ஈடு­ப­டு­வ­தற்கு அனே­க­மான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தயா­ராக இல்லை என்­ப­தால் மகிந்த தரப்பு எறி­வ­தற்­குத் தயா­ராக இருந்த அமைச்­சுப் பதவி மற்­றும் பணம் என்­பன மட்­டுமே கட்சி தாவு­வ­தற்­கான கவர்ச்­சிப் பொரு­ளாக இருக்­க­வில்லை. இத­னால் எதிர்­பார்ப்­பு­கள் எல்­லா­வற்­றுக்­கும் மாறா­கப் பெரும்­பான்­மை­யைக் காட்டி ஆட்­சி­யைக் கொண்டு நடத்த முடி­ய­வில்லை.

மகிந்­த­வின் அர­சி­யல் வர­லாற்­றில் அவர் அடைந்த மிகப் பெரும் அர­சி­யல் சறுக்­க­லாக இது அமைந்­து­விட்­டது. மடை பரப்­பிக் கிடந்த மகிந்­த­வின் புக­ழும் இதன் மூலம் சரிவு கண்­டது.

இதி­லி­ருந்து மீள மைத்­திரி – –மகிந்த தரப்பு எடுத்த பொதுத் தேர்­தல் என்­கிற ஆயு­த­மும் உயர் நீதி­மன்­றத்­தின் தலை­யீட்­டால் பய­னற்­ற­தா­கிப் போனது. இதற்­கி­டை­யில் மகிந்­த­வின் ஆட்­சியைச் சட்­டத்துக்­கு முர­ணான, மக்­க­ளாட்­சிக்கு மாறா­னது என்­கிற பரப்­பு­ரை­யைக் கெட்­டி­யா­கப் பிடித்­துக்­கொண்ட ஐக்­கிய தேசி­யக் கட்சி மற்­றும் ஐக்­கிய தேசிய முன்­னணி என்­பன மக்­க­ளாட்­சி­யைக் காப்­ப­தற்­கா­கப் போரா­டும் போரா­ளி­க­ளா­கத் தம்மை வெளிப்­ப­டுத்­திக்­கொண்டு, கடந்த மூன்­றரை ஆண்டு காலப் பாவங்­களை எல்­லா­மல் அதில் கரைத்­துத் தம்­மைத் தூய்­மைப்­ப­டுத்­திக் கொண்­ட­வர்­க­ளா­கக் காட்­டிக்­கொண்­டார்­கள். இதன் மூலம் அர­சி­யல் இலா­பத்­தை­யும் அடைந்­தார்­கள்.

எல்லா வழி­க­ளி­லும் முன்­னேற வழி­யின்றி முடங்­கி­ய­போ­தும் மகிந்த தரப்­பி­னர் ஆட்­சியை விட்­டுக்­கொ­டுக்­காது முரண்டு பிடித்­துக் கொண்­டி­ருந்­த­னர். ஏதோ­வொரு நம்­பி­கை­யு­டன். அவர்­களை அதி­லி­ருந்­தும் விரட்­டும் நோக்­கத்­தோடு தலைமை அமைச்­சர் அலு­வ­ல­கத்­திற்­கான நிதியை வெட்­டு­வது பின்­னர் அமைச்­சர்­க­ளின் அலு­வ­லகங்­க­ளிற்­கான நிதியை வெட்­டு­வது என்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யும் பிடியை இறுக்கி வந்­தது.எனி­னும் ஆட்சி அமைப்­ப­தற்­குத் தேவை­யான 113 ஆச­னங்­கள் என்­கிற இலக்கை அடைய முடி­யா­மல் தவித்­தது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆத­ர­வ­ளித்­தால் மட்­டுமே அந்த இலக்கை அடைய முடி­யும் என்­கிற நிலை­யில், கடந்த மூன்­றரை ஆண்­டு­க­ளில் தமி­ழர்­க­ளுக்கு வழங்கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாத ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் ஆட்­சிக்கு வெளிப்­ப­டை­யான ஆத­ர­வைக் கொடுக்­க­மு­டி­யாது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் திணறி வந்­தது. ஆனால், கடை­சி­யில் வழக்­கம்­போ­லவே ஐப்­பசி 26ஆம் திக­திக்கு முந்­தைய ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் ஆட்சி தொடர்­வ­தற்­குத் தனது வெளிப்­ப­டை­யான ஆத­ரவை கூட்­ட­மைப்பு வழங்­கி­யுள்­ளது.

இதை­ய­டுத்து கொழும்­பின் அர­சி­யல் சூடு மெல்­லத் தணி­யும் அறி­கு­றி­கள் தென்­ப­டத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. நாடா­ளு­மன்ற சபா­நா­ய­கர் கரு ஜெய­சூ­ரி­யவை நேற்று சந்­தித்­துப் பேசி­யி­ருக்­கி­றார் அரச தலை­வர். ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யி­னர் மற்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரை­யும் அரச தலை­வர் இன்று சந்­தித்­துப் பேச­வுள்­ளார்.

இதைத் தொடர்ந்து அனே­க­மாக அடுத்த ஒன்­றரை வரு­டத்­திற்­கான தலைமை அமைச்­சர் தெரிவு செய்­யப்­ப­டும் வாய்ப்பு இருக்­கி­றது என்று எண்­ணப்­ப­டு­கி­றது. ஆனால் அப்­ப­டி­யொரு எண்­ணம் இருந்­தால் அரச தலை­வர் நேற்றே அத­னைச் செய்­தி­ருக்க முடி­யும், அத­னால் பிரச்­சினை தீர்­வ­தற்­கான வாய்ப்­பு­கள் இன்­னும் பளிச்­சென்று தெரி­ய­வில்லை என்­கி­ற­வர்­க­ளும் இருக்­கி­றார்.

ஒரு­வேளை கூட்­ட­மைப்­பின் ஆத­ர­வு­டன் ரணில் மீ்ண்டும் ஆட்­சி­யைப் பிடித்­தால் அதன் பிர­தி­ப­லன் என்ன என்­பது குறித்து மக்­க­ளுக்கு எது­வும் தெரி­விக்­காத நிலை­யி­லேயே ஐக்­கிய தேசிய முன்­னணி ஆட்­சியை ஆத­ரிக்­கும் முடிவை கூட்­ட­மைப்பு எடுத்­துள்­ளது என்­பது கவ­லைக்­கு­ரி­யது.

You might also like