தமிழரின் ஒற்றுமை!!

தேர்தல் காலம் நெருங்க நெருங்க தமிழ் கூறும் அரசியல் நல்லுலகில் ஒற்றுமை குறித்த கதையாடல்கள் அதிகரித்து வருகின்றமையைப் பார்க்க முடிகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் போன்றவற்றில் ஒன்றாகப் போட்டியிட்டவர்கள், தமது சுய நலன்களுக்காக, தமிழ் மக்களின் பொது நன்மைக்காக என்று முழக்கமிட்டுக்கொண்டு ஒற்றுமையைக் காற்றில் பறக்கவிட்டு , மக்களின் ஆணையைத் தூக்கி வீசிவிட்டு தனித் தனியே போனவர்கள் எல்லோரும் இப்போது ஒற்றுமையைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

அதற்கான முழுக் காரணமும் ஒரே காரணமும் வாக்குகளை வேட்டையாடுவதுதான். யார் யாரோடு அரசியல் கூட்டு வைத்துக் கொள்வது என்பதில் தொடங்குகிறது இந்த ஒற்றுமைப் படலம். ஏனெனில் தனித் தனியாகக் கேட்டால் ஒற்றையாசனத்தைக்கூடத் தம்மால் கைப்பற்ற முடியாது என்கிற உண்மை பல தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் தெரியும்.

தனித்துப் போட்டியிட்டால் தாம் பெறக்கூடிய வாக்குகளைவிட கொழும்பில் ஆட்சி அதி காரத்தைக் கையில் வைத்திருக்கும் சிங்களக் கட்சிகளின் தமிழ்க் கையாள்கள் அதிகளவில் பெற்றுக்கொள்வார்கள் என்பதை உணர முடியாத அளவுக்கு முட்டாள்கள் அல்லர் அவர்கள்.

அதனால்தான் தொடங்கப்படுவதற்கு முன்னரே தேர்தல் கூட்டணி குறித்துச் சில தமிழ்க் கட்சிகள் பேசத் தொடங்கி விடுகின்றன என்கிற அபத்தமும் இங்கு நிகழ்ந்தேறுகிறது. இப்போது தமிழ் அரசியலின் முன்னணியில் உள்ள குதிரையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கப் போவதில்லை என்கிற வாக்குறுதிகளோடு கொள்கை ரீதியான ஒற்றுமை பற்றிய பேச்சுத் தொடங்கப்படுகிறது.

தமிழர் ஒற்றுமை, இன ஒற்றுமை, தமிழ்த் தேசியம், தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை, கொள்கை ரீதியான ஒற்றுமை என்கிற சொல்லாடல்கள் எல்லாவற்றுக்குமே தமிழ் அரசியலில் ஒரே பொருள்தான். தேர்தலில் வாக்குகளை வேட்டையாடு வதற்கான உத்தி என்பதுதான் அதன் பொருள். தேர்தலில் எத்தனை ஆசனங்களைக் கைப்பற்ற முடியும் என்கிற ஆசைக்கு மறு பெயர்கள்தான் மேலே குறிப்பிடப்பட்ட சொற்கள் அனைத்தும். கடந்த 30 ஆண்டுகால அரசியலில் தமிழ் மக்கள் கண்டுணர்ந்த வரலாற்று உண்மை இது.

திம்பு முதற்கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி வழியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரைக்கும் ஒற்றுமை என்பதன் வழியாகப் பெறப்பட்ட ஒரே அடைவு நாடாளுமன்ற ஆசனங்களே தவிர வேறொன்றும் இல்லை. புதிய மொந்தையில் பழைய கள்ளைப் போல மீண்டும் மீண்டும் புதிய சொல்லாடல்க ளுடன் ஒற்றுமை பற்றிப் பேசி வரும் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் அனைவரது நோக்கமும் வாக்குகள் மட்டுமே தவிர வேறெதுவும் இல்லை.

தமிழ் மக்களின் பிரச்சினையைக் கொள்கை ரீதியில் அணுகு வதற்கு ஒற்றுமை பற்றிப் பேசும் அரசியல் தலைவர்கள் அனைவரும் விரும்பியிருப்பார்களாயின் மக்கள் வாக்குகளைப் பெறும் அரசியல் கட்சி எதுவோ அது மக்களாணையில் இருந்து விலகிப் போகாத வகையிலான அழுத்தக் குழுக்களாகச் செயற்பட்டிருப்பார்கள். மக்கள் ஆணையைப் பெற்ற அரசியல் கட்சி ஒன்று அதிலிருந்து வழுகிச் செல்லும்போதும் மக்களைத் திரட்டிப் போராடி அந்தக் கட்சியை மீண்டும் சரியான வழிக்குக் கொண்டுவருபவர்களாக இருந்திருப்பார்கள்.

அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும் என்று எண்ணிக் கிடப்பவனைப்போன்று, மக்களாணை பெற்ற கட்சி எப்போது வழி தவறும் அந்த இடைவெளியில் புகுந்து நான் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி அதிகாரத்தைப் பிடித்துவிடலாம் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.

அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு அதன் போதையை அனுபவிக்கத் துடிப்பவர்கள்தான், தேர்தலின்போது ஒற்றுமை குறித்து முழக்கமிடப்போகிறார்கள். அதற்காக அவர்கள் இப்போதே தங்க முலாம் பூசப்பட்ட வார்த்தைகளைத் தடவத் தொடங்கிவிட்டார்கள்.
அப்படியென்றால், தமிழ் மக்களுக்கு அரசியல் ஒற்றுமை தேவையில்லையா என்கிற கேள்வி எழலாம். ஒற்றுமை தேவைதான்.

ஆனால், அந்த ஒற்றுமை அரசியல்வாதிகளை வாழ வைப்பதற்கானதாக இருக்கக்கூடாது, அது இனத்தை வாழ வைப்பதற்கானதாக இருக்கவேண்டும். கொழும்பு அரசுக்கு எதிரானதாக இருக்கவேண்டும். தமிழ் இன அடக்குமுறைக்கு எதிரானதாக இருக்கவேண்டும். பிரிக்கப்பட முடியாத ஒரே நாட்டுக்குள்கூட ஒரு தீர்வைத் தரமாட்டோம் என்கிற பௌத்த சிங்கள பேரினவாதச் சக்திகளுக்கு எதிரானதாக இருக்கவேண்டுமேயல்லாமல், இதையெல்லாம் செய்வோம் என்று, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் போலி வேசம்போடும் அரசியல்வாதிகளுக்கானதாக அந்த ஒற்றுமை இருக்கக்கூடாது.
மக்களே!

உங்கள் ஒற்றுமை வாக்குப் பெட்டிகளை நிரப்பு வதற்கான தாக அல்ல, அறவழிப் போராட்டக் களங்களை நிரப்பு வதற்கான இருக்க வேண்டும். அதுதான் ஒரு தீர்வையோ விடுதலையையோ வென்றெடுப்பதற்கான ஒரே வழி.

You might also like