பாராட்டத் தகுந்தவை பாப்பரசரின் நகர்வுகள்!!
கத்தோலிக்க திருச்சபை இதுவரைகாலமும் ஏகப்பட்ட தலைவர்களை (பாப்பரசர்களை) சந்தித்துள்ளது. ஒப்பீட்டளவில் அனைவரும் தமது பணிகளை செவ்வனே நிறைவேற்றிய போதிலும், தற்போதைய தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் ஏனையவர்களிடம் இருந்து வேறுபட்டு நிற்கின்றார். நிகழ்கால நிலையில் கத்தோலிக்க திருச்சபையின் தேவையும் பாப்பரசர் பிரான்சிஸ் ஆகவே உள்ளது என்பதை அவரது ஒவ்வொரு நகர்வும் புடம்போட்டுக் காட்டுகின்றது.
கத்தோலிக்கத் திருச்சபைக்குள் பாலியல் துர்நடத்தைகள் இடம்பெற்றன என்பதற்கான பதிவுகள் நூற்றாண்டுப் பழமையானவை. எனினும் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு மோசமான, அருவருக்கத்தக்க, விரும்பத்தகாத பதிவொன்று தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கத்தோலிக்கத் திருச்சபையின் பெண்துறவிகளான கன்னியாஸ்திரிகள் (அருட் சகோதரிகள்) பாதிரியர்களாலும் ஆயர்களாலும் பாலியல் இச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்பதே அது.
பாப்பரசர் பிரான்சிஸ், இஸ்லாமின் பிறப்பிடம் என்றழைக்கப்படும் நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மிகச் சமீபத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். தனது பயணத்தின் ஒரு பகுதியில் அதாவது கடந்த ஐந்தாம் திகதியன்று ‘கத்தோலிக்கத் திருச்சபையில் கன்னியாஸ்திரிகள் சிலர் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்று வர்த்திக்கான் அறிகிறது. சில பாதிரியார்களும், ஆயர்களும் கூடஇத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சினை எல்லா இடத்திலும் நடக்கிறது. ஆனால் சில பகுதிகளில் உள்ள சில திருச்சபைகளில் அதிகமாக இருக்கிறது. பாலியல் முறைப்பாடுகளால் வர்த்திக்கான் ஏராளமான பாதிரியார்களை இடைநீக்கம் செய்துள்ளது. அது தொடரும்’ என்று தெரிவித்து திருச்சபையில் பாதிரியார்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளார் அவர்.
இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா, அயர்லாந்து நாடுகளுக்கான தனது சுற்றுப் பயணத்தின்போதும்கூட பாப்பரசர் திருச்சபைக்குள் இருந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் தனது மன்னிப்பைக் கேட்டுக்கொண்டார். குறிப்பாக சிறுவர்கள் சிறுமியர்களுக்காக கண்ணீர் மல்கினார். அவர்களிடம் மன்றாடினார். அவர்களுக்காகவும் மன்றாடினார்.
அத்துடன் நின்றுவிடாமல் இத்தகைய இழிசெயலில் ஈடுபட்ட பாதிரியார்கள் மற்றும் ஆயர்கள் பலரை இடைநிறுத்தும் வகையில் செயற்பட்டு வந்தார். இதன்படி பல பாதிரியார்களும் ஆயர்களும் பாப்பரசரால் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அத்தகையவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் வேகம் இனிவரும் காலங்களில் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் பாப்பரசர் பிரான்சிஸ். அதை நம்பலாம்.
திருச்சபையானது பொற்கோபுரங்களையும், சிவப்புக் கம்பளங்களையும் தனது கடந்த கால வரலாறாகக் கொண்டிருக்கவில்லை. அதன் வரலாறு கசப்பானது. முட்களும், கற்களும் நிறைந்தது. பேதகங்களையும் (திருச்சபைக்கும் திருச்சபையின் கொள்கைகளுக்கும் எதிரான தப்பறைகள்) கலாபனைகளையும் (திருச்சபையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தல்கள், படுகொலைகள்) கண்டு கடந்த திருச்சபை இன்று இவ்வாறான குற்றங்களை ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை, பெரும் அபத்தம். எனினும் பாப்பரசர் பிரான்சிஸ் போன்ற தலைவர்களின் வழிகாட்டலில் தன் மீதான கறைகளைக் களைந்து அது மிகவிரைவில் மீண்டெழும். அதுவே ஒட்டுமொத்த கத்தோலிக்கர்களின் எதிர்பார்ப்பும்கூட.
‘நீதிமான்களை அல்ல பாவிகளையே மீட்க வந்தேன்’