பிரதி அமைச்­சர் -நிய­ம­னம் ஏன்?

அமைச்­ச­ரவை விரி­வாக்­கத்­தின்போது வடக்­கைச் சேர்ந்த இரு­வ­ருக்­குப் பிரதி அமைச்­சர் பத­வி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. திடீ­ரென இந்­தப் பத­வி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. பத­வி­யைப் பெற்­றுள்ள இந்த இரு­வ­ரும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள். ஒரு­வர் தமி­ழர். மற்­றொ­ரு­வர் முஸ்­லிம்.

பிரதி அமைச்­சர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளில் தமி­ழ­ரான அங்­க­ஜன் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு நெருக்­க­மா­ன­வர். மகிந்­த­விற்­கும் இவர் நெருக்­க­மா­ன­வ­ராக இருந்­தா­லும், 2015 அரச தலை­வர் தேர்­தல் தோல்­வியை அடுத்து மைத்­திரி பக்­கம் சாய்ந்த முதன்­மை­யா­ன­வர்­க­ளில் வடக்­கைச் சேர்ந்த ஒரே­யொ­ரு­வர்.

இத­னால் அவர் மீது மைத்­தி­ரி­பா­ல­வுக்கு எப்­போ­தும் கரி­சனை அதி­கமே. அத­னா­லேயே நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தோற்­ற­போ­தும் அவரை தேசி­யப்­பட்­டி­யல் மூலம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஆக்­கி­னார். அண்­மை­யில் அவ­ரைப் பிரதி சபா­நா­ய­கர் பத­விக்கு நிய­மிக்­க­வும் முன்­னின்­றார். அது சரி­வ­ரா­மல் போகவே இப்­போது பிரதி அமைச்­சர் பதவி கொடுத்­தி­ருக்­கி­றார்.

பிரதி அமைச்­சர் பத­வி­யைப் பெற்­றுக்­கொண்­டுள்ள மற்­றை­ய­வர் முஸ்­லிம். வவு­னியா மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர். சுதந்­தி­ரக் கட்­சி­யின் சார்­பில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­ற­வர். அங்கு கட்­சி­யைப் பலப்­ப­டுத்­து­வ­தில் அக்­க­றை­யோடு செயற்­ப­டு­ப­வர். முஸ்­லி­மான அவர் இந்து கலா­சார அமைச்­சுக்­கும் பிரதி அமைச்­ச­ராக நிய­ மிக்­கப்­பட்­டி­ருப்­பது குறித்­துக் கடும் கண்­ட­னங்­கள் எழத் தொடங்­கி­யுள்­ளன.

தற்­போ­தைய கூட்டு அர­சின் பத­விக் காலம் முடி­வ­தற்கு இன்­னும் 2 வரு­டங்­கள் மட்­டுமே இருக்­கும் நிலை­யில் இவர்­கள் இரு­வ­ருக்­கும் பிரதி அமைச்­சர் பதவிகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. வடக்கு அபி­வி­ருத்­திக்­கான அரச தலை­வர் செய­லணி ஒன்று அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்ற பின்­ன­ணி­யில், இந்த நிய­ம­னங்­க­ளும் வந்­தி­ருக்­கின்­றன என்­ப­தும் கவ­னத்­திற்­கு­ரி­யது.

இந்த அபி­வி­ருத்­திக் குழு­வில் வடக்கு கிழக்கு மாகா­ணத்­தைப் பெரி­தும் பிர­தி­நி­தித்­து­வப்­படுத் தும், இந்த அரசை முண்­டு­கொ­டுத்­துக் காத்­து­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எவ­ரும் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என்­கிற பின்­ன­ணி­யி­லும், இந்த நிய­ம­னங்­கள் முக்­கி­யத்­து­வம் மிக்­கவை.

இவற்­றுக்­கும் மேலா­க, அர­சுக்­குத் தலை­யிடி கொடுக்­கும் வகை­யி­லான அறப் போராட்­டங்­க­ளைத் தாம் தொடங்­கி­யி­ருப்­ப­தாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் அதன் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன், அண்­மைய மீன­வர்­கள் போராட்­டத்தை முன்­வைத்­துக் கருத்­துத் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில், அரச தலை­வ­ரின் இந்த நகர்­வு­க­ளும் கவ­னிக்­கத்­தக்­கவை.

இவை எல்­லாம் இணைந்து வடக்­கில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியை வலுப்­ப­டுத்­தும் முயற்­சி­களை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னெ­டுத்­துள்­ளாரா என்­கிற சந்­தே­கத்தை வலுப்­ப­டுத்­து­கின்­றன. கூட்டு அரசு அல்­லாடி வரும் நிலை­யி­லும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முரண்­டு­ பி­டிக்க ஆரம்­பித்­தி­ருக்­கும் நிலை­யி­லும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­ட­னான தேனி­லவு கசந்­து­விட்ட நிலை­யி­லும் ராஜ­பக்­சக்­க­ளைச் சமா­ளிக்­கும் நகர்­வு­க­ளுக்­குள் மைத்­திரி விழுந்­து­விட்ட நிலை­யி­லும் அரச தலை­வ­ரின் இந்­தப் புதிய நகர்­வு­கள் இத்­த­கைய சந்­தே­கங்­க­ளைக் கிளப்­பு­வது புதி­தல்ல.

எனி­னும் புதிய அர­ச­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களை விரை­வு­ப­டுத்­து­வ­தற்­கான எத்­த­னங்­கள் எத­னை­யும் மேற்­கொள்­ளா­மல், இனப் பிரச்­சி­னைக்­கான அர­சி­யல் தீர்வு ஒன்­றைக் காண்­ப­தற்­கான நகர்­வு­களை முன்­ன­கர்த்­தா­மல், வடக்­கில் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்­தும் எத்­த­னங்­கள் எத­னை­யுமே செய்­யா­மல் வெறு­மனே கட்­சியை வளர்ப்­ப­தற்­கா­க­வும், வாக்­கு­க­ளைக் கவர்­வ­தற்­கா­க­வும் அரச தலை­வர் திட்­ட­மிட்­டுச் செயற்­ப­டு­வா­ராக இருந்­தால் அது ஏற்­பு­டை­ய­தல்ல, விச­னத்­திற்­கும் கண்­ட­னத்­திற்­கும் உரி­யது.

இது போன்ற கட்சி அர­சி­யல் நகர்­வு­க­ளால் நாட்­டுக்கு நல்­லது ஏதும் நடக்­கப்­போ­வ­தில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close