side Add

புதூர் இராணுவத் தேடல் உணர்த்துவது எதை?

பா.குமுதன்

போர் முடி­வுற்று ஒன்­பது வரு­டங்­கள் கடந்த நிலை­யி­லும் தமி­ழர் பகு­தி­க­ளில் இரா­ணு­வப் பிர­சன்­னங்­க­ளும், பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் கெடு பிடி­க­ளி­லும் இது­வரை மாற்­றம் எது­வும் ஏற்­ப­ட­வில்லை. பாது­காப்­புக் கட­மை­க­ளைத் தவிர பொது­மக்­க­ளின் அன்­றாட விட­யங்­க­ளில் மிக அதி­க­ள­வில் இரா­ணு­வம் தனது தலை­யீட்டை மேற்­கொண்டு வரு­கின்­றது.

பொது­மக்­க­ளின் காணி­க­ளி­லும், குடி­யி­ருப்­பு­க­ளி­லும் தமது படை­மு­காம்­களை நிறு­வி­யுள்­ளது. யாழ்ப்­பா­ணம்– வலி­கா­மம் பகுதி, வன்னி மக்­க­ளின் பூர்­வீக் காணி­கள், ஏ– 9 வீதியை அண்­மித்த பகு­தி­க­ளில் படை­மு­காம்­கள், மற்­றும் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, வவு­னியா எனத் தமி­ழர் பகு­தி­கள் ஒன்­று­வி­டா­மல் மக்­க­ளின் நிலங்­க­ளில் ஆழ வேரூன்­றி­யுள்­ளது இரா­ணு­வம். முகாம்­களை அமைத்து அதில் நிலை­கொண்டது­டன் இந்த இடங்­க­ளில் இரா­ணு­வத்­தின் நட­வ­டிக்­கை­கள் முற்­றுப்­பெற்­று­வி­ட­வில்லை.

வியா­பா­ர­நி­லை­ யங்­களை அமைத்­தும், விவ­சா­யச் செய்கை, பண்­ணை­வ­ளர்பு போன்ற தொழில்­து­றை­க­ளை­யும் மேற்­கொண்டு வரு­கி­றது. அர­சைப் ­பொ­றுத்­த­வரை தேசி­ய­பா­து­காப்புக்கு அச்­சு­றுத்­தல் என்ற கார­ணத்தைத் தெரி­வித்தே தமி­ழர் பகு­தி­க­ளில் இரா­ணு­வத்­தின் இருப்பு தொடர்ந்­து பேணப்­பட்டு வரு­கி­றது. இந்­தக் கார­ணத்­துக்கு இடை­யி­டையே தூப­மிட்­டுத் தக்­க­வைக்­கின்ற தொடர் சம்­ப­வங்­க­ளின் வரி­சை­யி­லே­தான் வவு­னியா – புளி­யங்­கு­ளம் புதூர் பகு­தி­யில் கடந்த புதன்­கி­ழமை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த இரா­ணு­வக் குவிப்பும் இணைந்திருக்கிறது.

வடக்­கில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தின் எண்­ணிக்­கை­யைக் குறைத்து, அவர்­க­ளால் கைய­க­ப்ப­டுத்­த­பட்­டுள்ள பொது­மக்­க­ளின் காணி­களை விடு­விக்­க­வேண்­டும் என்று இலங்கை அர­சுக்­குப் பல்­வேறு தரப்­பு­க­ளி­டம் இருந்­தும் அழுத்­தங்­கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. அவற்­றுக்­கெல்­லாம் சாட்­டுப் போக்­குச் சொல்­லிக் காலத்­தைக் கழிக்­கும் இலங்கை அர­சா­னது தமி­ழர் பகு­தி­க­ளில் இரா­ணு­வத்­தின் இருப்பை மென்­மே­லும் அதி­கப்­ப­டுத்தி வரு­கின்­றது.

வடக்­கில் ஆங்­காங்கே நிக­ழும், நிகழ்த்­தப்­ப­டும் வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் இரா­ணு­வத்­தின் இருப்­பைக் கேள்­விக்­குட்­ப­டுத்த முடி­யாத நிலைக்­குத் தூப­மி­டு­வ­தாக அமை­கின்­றன. அமை­தி­யான சூழ்­நி­லை­யைக் குலைத்து மீண்­டு­மோர் இரா­ணுவ அடக்­கு­மு­றை­யைத் தமிழ் மக்­கள் மத்­தி­யில் திணிப்­ப­தா­கவே கடந்த புதன்­கி­ழமை புளி­யங்­கு­ளம் – புதூர் பகு­தி­யில் நிக­ழந்த சம்­ப­வத்­தைக் குறிப்­பிட முடி­யும்.

புதூர் சம்­ப­வம்.
வவு­னியா வடக்­கின் புளி­யங்­கு­ளம் புதூர் பகு­தி­யில் கடந்த செவ்­வாய்க் கிழமை மாலை நடை­பெற்ற சம்­ப­வம் அந்­தப் பகுதி மக்­களை மாத்­தி­ர­மல்­லாது அனைத்­துத் தமிழ்­மக்­கள் மத்­தி­யி­லும் ஒரு­வித அச்­ச­நி­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. கடந்த செவ்­வாய்க் கிழமை இரவு 9 மணி­ய­ளி­வில் ஏ9 வீதி­யில் இருந்து புதூர் நாக­தம்­பி­ரான் ஆல­யத்­துக்­குச் செல்­லும் முதன்மை வீதி­யில் ஆயு­தங்­க­ளு­டன் நபர் ஒரு­வர் பய­ணிப்­ப­தா­கப் புளி­யங்­கு­ளம் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் கிடைத்­த­தா­கத் தெரி­வித்து அந்­தப் பகு­தி­யில் பொரி­ய­தொரு தேடு­தல் வேட்டை நடத்­த­பட்­டது.

சம்­ப­வம் தொடர்­பா­கப் புளி­யங்­கு­ளம் பொலி­ஸார் விவ­ரித்­த­போது, கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு 9மணி­ய­ள­வில் புதூர் –நாக­தம்­பி­ரான் ஆல­யத்­துக்­குச் செல்­லும் முதன்மை வீதி­யில் ஆய­தங்­க­ளு­டன் நபர் ஒரு­வர் செல்­வ­தாக எமக்கு இர­க­சி­யத் தக­வல் கிடைத்­தது. அதற்­க­மைய ஆயு­தங்­க­ளு­டன் செல்­லும் நப­ரைக் கைது செய்­யும் நோக்­கு­டன் புளி­யங்­கு­ளம் பொலிஸ் நிலை­யத்­தில் பணி­பு­ரி­யும் பொலி­ஸார் சாதா­ரண உடை­யில் குறித்த பகு­தி­யில் மறைந்­தி­ருந்­த­னர். பொலி­ஸா­ரைக் கண்ட நபர் தான் கொண்டு சென்ற ஆயு­தங்­களை வீதி­யில் போட்­டு­விட்­டுக் காட்­டுக்­குள் தப்­பிச் சென்­றுள்­ளார்.

அவர் போட்­டு­விட்­டுச் சென்ற கைக்­குண்டு, மற்­றும் கைத்­துப்­பாக்­கி­கள், கைபே­சி­க­ளைக் கைப்­பற்­றி­ய­து­டன் இரா­ணு­வத்­தி­ன­ருக்­குத் தக­வல் வழங்­க­ப்பட்­டது என்ற­னர். இந்த நிலை­யில் இரா­ணு­வம், பொலி­ஸார் மற்­றும் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர், புல­னாய்­வுப் பிரி­வி­னர் எனப் பல தரப்­பி­ன­ரும் அந்­தப் பகு­தி­யில் குவிக்­கப்­பட்­டுத் தேடு­தல் நடாத்­த­பட்­டது. அன்­றைய நாள் இரவு 10 மணி­யில் இருந்து மறு­நாள் மதி­யம் வரை புதூர் மற்­றும் கன­க­ரா­யன் குளம் நக­ருக்கு அண்­மித்த பிர­தே­சங்­க­ளில் வீதி­க­ளில் இரா­ணு­வத்­தி­னர் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­ட­னர். புதூர் காட்­டுப் பகு­தி­யி­லும் தேடு­தல் நட­வ­டிக்­கை­ளில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். தேடு­தல் நட­வ­டிக்­கைக்கு மோப்­ப­நாய்­க­ளும் பயன்­ப­டுத்­த­ப்பட்­டன.

திட்­ட­மிட்டு நடத்­தப்­பட்ட சம்­ப­வம்
என்கின்றனர் மக்­கள்
சுமார் 600க்கும் மேற்­பட்ட இரா­ணு­வச் சிப்­பாய்­கள் அந்­தப் பகு­தி­யில் குவிக்­கப்­பட்­டுத் தேடு­தல் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்ளப்பட்டிருக்கிறது. தப்­பிச்­சென்­ற­தா­கக் கூறப்­ப­டும் நப­ரைக் கைது­செய்­ய­வும், மேலும் ஆயு­தங்­கள் மறைத்து வைக்­க­ப்பட்­டி­ருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யி­லும் தேடு­தல் தொடர்­வ­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். குறித்த சம்­ப­வம் இயல்­பா­க­ந­டந்­ததா? அல்­லது திட்­ட­மிட்டு நடத்­தப்­பட்­டதா? என்ற ஐயப் பாடு­கள் தமிழ் மக்­கள் மத்­தி­யில் நில­வி­வ­ரு­கின்­றன.

முன்­னைய அர­சின் காலத்­தில் இவ்­வா­றாக மேடை­யேற்­றப்­பட் பல சம்­ப­வங்­க­ளுக்­குத் தமிழ் மக்­கள் பழக்­கப்­பட்­டு­விட்­ட­தால் இந்­தச் சம்­ப­வத்­தை­யும் அத்­த­கை­ய­தொரு நட­வ­டிக்­கை­யா­கக் கணிப்­ப­தில் அவர்­க­ளுக்­குச் சிர­ம­மி­ருக்­க­வில்லை. கைக் குண்­டு­களை எடுத்து வந்­த­வ­ரின் நோக்­கம் என்ன? அதை ஏன் – வீதி­யில் போட்­டு­விட்­டுச் சென்­றார்? அத­னோடு சேர்த்துச் சிம் அட்­ட­டை­க­ளு­டன் கூடிய இரண்டு கைபே­சி­க­ளை­யும் ஏன் அவர் எறிந்து விட்­டுச் செல்ல வேண்­டும்? இத்­த­கைய கேள்­வி­கள் சாதா­ரண மக்­கள் மத்­தி­யில் இயல்­பாக எழுந்து நிற்­கின்­றன. இரா­ணு­வத்­தி­ன­ரின் இருப்­புக்­குத் தேவை­யுள்­ளது என்­ப­தைப் பன்­னா­டு­க­ளுக்­குக் காட்­ட­வேண்­டியதை நோக்­கா­கக் கொண்டு செயற்­ப­டுத்­தப்­பட்ட குறித்த சம்­ப­வம் குறித்து இன்­னு­மின்­னும் ஏரா­ளம் சந்­தே­கங்­கள் தமிழ்­மக்­கள் மத்­தி­யில் இருக்­கத்­தான் செய்­கின்­றன.

முன்­னாள் போரா­ளி­க­ளைக் குறி வைக்­கும் அரசு
தமி­ழர் பகு­தி­க­ளில் நடை­பெ­றும் அசம்­பா­வி­தச் சம்­ப­வங்­க­ளோடு முன்­னாள் போரா­ளி­க­ளைத் தொடர்­பு­ப­டுத்­தும் செயற்­பா­டு­கள் நிகழ்ந்­து­வ­ரு­கின்­றன. மட்­டக்­க­ளப்பு – வவு­ண­தீ­வில் இரண்டு பொலி­ஸார் சுட்­டுக் கொல்­ல­ப்பட்ட சம்­ப­வம் அண்­மை­யில் நடந்­தது. இத­னு­டன் முன்­னாள் போரா­ளி­க­ளைத் தொடர்­பு­ப­டுத்­திப் பல்­வேறு செய்­தி­கள் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன. அது தொடர்­பா­கக் கிளி­நொச்சி– வட்­டக்கச்­சியைச் சேர்ந்த முன்­னாள் போராளி ஒரு­வர் கைது செய்­யப்­பட்­ட­து­டன் மேலும் சில முன்­னாள் போரா­ளி­க­ளும் விசா­ரணை வளை­யத்­துக்­குள் இடம்­பெற்­றி­ருந்­த­னர்.

அவ்­வாறே வவு­னியா – புதூ­ரில் நடை­பெற்ற சம்­ப­வத்­துக்­கும் முன்­னாள் போரா­ளி­களை மைய­ப்ப­டுத்தி விசா­ர­ணை­கள் இடம்­பெற்­று­வ­ரு­வ­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

இதை இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்ற உட­னேயே மக்­கள் ஊகித்­துக் கொண்­டமையானது இரா­ணு­வத்­தி­ன­ரின் பழக்­க­தோ­ச­மாக இந்த விட­யம் மாறி­விட்­டி­ருக்­கி­றது என்­ப­தற்கு உதா­ர­ண­மாக இருக்­கி­றது. மக்­கள் ஊகித்தமைக்கு வலுச்­சேர்க்­கும் முக­மாக புதூர் பகு­தி­யில் போட்­டு­விட்­டுச் சென்­ற­தா­கக் கூறப்­ப­டும் கைபே­சி­க­ளில் உள்ள சிம் அட்­டை­கள் முன்­னாள் போரா­ளி­க­ளின் பெய­ரில் பதிவு செய்­ய­பட்­டுள்­ள­தா­கப் பாது­காப்­புத் தரப்­பால் கூறப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான சம்­ப­வங்­கள் இறு­திப்­போ­ரில் இராணு­வத்­தி­டம் சர­ண­டைந்து மறுவாழ்­வு­பெற்ற பின்­னர் வி­டு­த­லை­செய்­ய­பட்ட 12 ஆயி­ரம் முன்­னாள் போரா­ளி­க­ளை­யும் அச்­சம் கொள்­ளச் செய்­துள்­ளது.

உரி­மைக்­கா­கப் போரா­டித் தமது வாழ்வை இழந்து, அவ­ய­வங்­களை இழந்து, சமூ­கத்­தால் ஓரங்­கட்­டப்­பட்­டுப் பல இடர்­க­ளுக்கு மத்­தி­யில் வாழ்­வைக் கொண்டு நடத்­தி­வ­ரும் அவர்­கள்­மீது சுமத்­தப்­ப­டும் குற்­றங்­க­ளும், விசா­ர­ணை­க­ளும் அரச பயங்­க­ர­வா­தச் செயற்­பா­டா­கவே பல­ரா­லும் நோக்­க­ப்ப­டு­கின்­றன.

அச்­சம் கொள்­ளும் அரசு
உரி­மைக்­கா­க­வும், இன விடு­த­லைக்­கா­க­ வும் அற­வ­ழி­யா­க­வும், ஆயு­தம் ஏந்­தி­யும் போரா­டிய தமிழ் மக்­கள் இன்று வீழ்த்­தப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். அவர்­கள் விரும்­பு ­கின்ற, எதிர்­பார்க்கின்ற சுய­நிர்­ணய உரி­மை­யு­ட­னான அர­சி­யல் தீர்­வும், அடக்கு முறை­கள் அற்ற வாழ்­வும் கிடைக்­கின்ற வரை­யில் தமிழ்­மக்­க­ளது போராட்­டங்­கள் ஏதோ ஒரு மார்க்­கத்­தில் தொடர்ந்து கொண்­டே­தான் இருக்­க­ப்போ­கின்­றன. அதை எவ­ரா­லும் மறுத்­து­ரைக்க முடி­யாது.

ஒடுக்­கப்­ப­டும் இனங்­கள் தமது விடு­த­லைக்­கா­ கத் தொடர்ந்து போரா­டும் என்­பது உலக வர­லாறு. இலங்கை அர­சைப் பொறுத்­த­வரை தமிழ் மக்­க­ளுக்­கான நிரந்­த­ர­மா­ன­தும், நியா­ய­மா­ன­து­ மான அர­சி­யல் தீர்­வொன்றை வழங்­கு­வ­தற்­குத் தயா­ராக இல்­லாத நிலை தற்­போது உண­ரப்­ப­டு­கின்­றது. தீர்வொன்று வழங்­க­ப்ப­டாத சந்­தர்ப்­பத்­தில் தமிழ்­மக்­கள் தமக்கு எதி­ரா­கப் போரா­டிக்­கொண்­டு­தான் இருப்­பார்­கள் என்ற அச்­ச­நிலை பேரி­ன­வா­தி­க­ளி­டம் நிறை­யவே இருக்­கின்­றது.

அத­னால் ஏற்­ப­டும் கிளர்ச்­சி­க­ளை­யும், போராட்­டங்­க­ளை­யும் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கும், முளை­யி­லேயே கிள்ளி நசுக்­கு­வ­தற்­கும் இரா­ணு­வக்­கட்­ட­மைப்­பு­க­ளைப் பலப்­ப­டுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. இதுவே தமி­ழர் பகு­தி­க­ளில் இரா­ணு­வத்­தின் தலை­யீ­டு­கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தற்­குக் கார­ண­மாக இருக்­கி­றது.

வடக்கு – தெற்கு மன­நிலை
இரா­ணு­வத் தலை­யீ­டு­களை அதி­க­ரிப்­ப­தன் மூலம் தெற்கு மக்­க­ளைத் திருப்­தி­ப்ப­டுத்தி அர­சி­யல் ஆதா­யம் தே­டும் நோக்­க­மும் அர­சி­டம் இருக்­கத்­தான் செய்­கின்­றது. இதே­வேளை தெற்­கில் இடம்­பெ­றும் ஒரு சாதா­ரண விட­யம் வடக்­கில் இடம்­பெற்­றால் பூதா­க­ர­மாக்­கப் படு­கின்­றது. சிறிய விட­யங்­க­ளுக்கு அதி­க­ள­வி­லான இரா­ணு­வத்­தைக் குவித்­துத் தேடு­தல் நடத்­தப்படு­கின்­றது. இவை எல்­லாம் இரா­ணு­வம் பல­மாக இருக்­கி­றது என்­ப­தைத் தமிழ் மக்­க­ளுக்கு உள­வி­யல் ரீதி­யாக வெளிப்­ப­டுத்தி அச்­ச­மூட்­டும் செயற்­பாடுகளே.

இதற்­கும் மேலாக வடக்­கில் அதி­க­ரித்து வரு­கின்ற புத்த விகா­ரை­கள் அனைத்­தும் இரா­ணுவ முகாம்­க­ளுக்கு அரு­கில் அமைக்­கப்­ப­டு­கின்­றன. இது பௌத்த மய­மாக்­க­லின் சிந்­த­னை­வெ­ளிப்­பா­டாக இருப்­ப­து­டன் வடக்­கின் இன விகி­தா­ சா­ரத்­தில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கும் இரா­ணு­வம் கேட­ய­மா­கப் பயன்­ப­டுத்­த­ப­டு­கின்­றது என்­ப­தைக் காட்­டு­கி­றது. வடக்­கில் நிலை­கொண்­டி­ருக்­கும் இரண்டு இலட்­சத்­துக்­கும் அதி­க­மான இரா­ணு­வத்­தி­னர் வட­ப­கு­தி­யின் பூர்­வி­கக் குடி­க­ளாக மாற்­றப்­ப­டக் கூடிய நகர்­வு­கள் அர­சால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

உதா­ர­ண­மாக வடக்­கில் அமைந்­துள்ள இரா­ணுவ முகாம்­க­ளில் இரா­ணு­வச் சிப்­பாய்­க­ளின் குடும்­பத்­தி­ன­ரும் இணைந்து குடி­யி­ருப்­பு­களை அமைத்து வாழ்­கின்ற நிலை தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

தீர்க்க வேண்­டிய பிரச்­சி­னை­கள் பல
போர்ச் சூழ­லா­லும், இரா­ணு­வத்­தா­லும் பல்­வேறு பாதிப்­பு­க­ளைச் சந்­தித்­துள்ள மக்­க­ளை ஆற்­றுப்­ப­டுத்­தும் செயற்றிட்டங்களை மேற்­கொள்­ள­வேண்­டிய அரசு மீண்­டும் தனது அரச பயங்­க­ர­வா­தச் செயற்­பாட்­டில் இறங்­கி­யுள்­ளமை தமிழ்­மக்­களைப் பொறுத்­த­வரை ஏமாற்­றமே. குறிப்­பாக பயங்­க­ர­வாத தடை­ச் சட்­டத்­தின் மூலம் கைது­செய்­ய­ப்பட்ட இளை­ஞர்­கள் விடு­விக்­க­ப­ட­வில்லை, பொது­மக்­க­ளின் பூர்­வி­கக் காணி­க­ளைக் கைப்­பற்­றி­வைத்­தி­ருக்­கும் இரா­ணு­வம் அவற்றை விடு­விக்­க­வில்லை. இரா­ணு­வத்­தி­டம் கைய­ளிக்­க­ப்பட்­டுக் காண­ாமல் ஆக்­க­ப்பட்ட ஆயி­ரக்­க­ணக்­கான இளை­ஞர், யுவ­தி­க­ளின் நிலை கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது.

அவர்­க­ளின் உற­வு­கள் வீதி­க­ளில் தொடர்ச்சி­யான போராட்­டங்­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­ற­னர். இவை அனைத்­தும் பல ஆண்­டு­க­ளாக தொடர்ந்து வந்த இன­மு­ரண்பாட்­டின் பால் தோற்­றம் பெற்­ற­வையே. இவ்­வாறு தீர்க்க­ வேண்­டி­ய­வி­ட­யங்­கள் பல இருக்­கின்­ற­போ­தும் அவற்றுக்­கான தீர்­வு­க­ளில் இம்­மி­ய­ள­வும் முன்­னேற்­றம் ஏற்­ப­டா­த­நி­லை­யில் மரத்­தில்­இருந்து விழுந்­த­வனை மாடு ஏறி மிதித்­தது போல அர­சி­ன­தும், இரா­ணு­வத்­தி­ன­தும் செயற்­பா­டு­கள் தமி­ழர் பகு­தி­க­ளில் தொடர்ந்து மேடை­யேற்­றப்­பட்டு வரு­வது கவ­லை­ய­ளிக்­கும் செய­ல்களன்றி வேறல்ல.

You might also like