பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்களை – தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல்!!

பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்களைத் தட்டிக்கேட்ட பெண்ணின் தந்தை மற்றும் அவரது அண்ணணின் நண்பன் மீதும் இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் வவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லப்பர்மருதங்குளம் 8 ஆம் ஒழுங்கையில் நடந்துள்ளது.

தந்தையுடன் அயலில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவுக்குச் சென்ற பெண்ணை, அவ்வீதியில் நின்ற இளைஞர்கள் கிண்டல் செய்ததுடன் கையைப் பிடிக்கவும் முயன்றுள்ளனர்.

அதனால் பெண்ணின் தந்தை இளைஞர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். இளைஞர்களில் ஒருவர் பெண்ணின் தந்தை மீது கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். அதையடுத்து அருகில் நின்ற மற்றைய இளைஞர்களும் அவர்கள் கையில் வைத்திருந்த தலைக்கவசத்தினால் பெண்ணின் தந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த பெண் வீட்டுக்குள் சென்று அவரது அண்ணனின் நண்பனை அழைத்துள்ளார். பெண்ணின் தந்தையைக் காப்பாற்ற வந்த அண்ணனின் நண்பன் மீது இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது அயலவர்கள் ஒன்று கூடியதையடுத்து இளைஞர்கள் அவ்விடத்தினை விட்டு தப்பித்து சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது..

அயலவர்களின் உதவியுடன் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் தந்தை மற்றும் அண்ணனின் நண்பன் ஆகியோர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். பெண்ணின் தந்தை அநுராதபுரம் வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

You might also like