பேசாலையில் துறைமுகம் -வடக்கு ஆளுநர் விரைவில் முடிவு!!

மன்னார் பேசாலையில் துறைமுகம் அமைப்பது தொடர்பாக, அந்த மக்களுடன் கலந்துரையாடி உரிய தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என்று வடமாகான ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த வருடம் பேசாலையில் துறைமுகம் அமைப்பதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டன. திடீரென பேசாலையில் துறைமுகம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பேசாலையில் துறைமுகம் அமைந்தால் பிற்காலத்தில் அப்பகுதி மக்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் என்று அஞ்சுவதாக கூறி கடிதங்கள் உயர் மட்டங்களுக்கு அனுப்பப்பட்டன. அதனால் துறைமுகப்பணி இடை நிறுத்தப்பட்டது.

மீண்டும் வடக்கு மாகானத்தை புதிய ஆளுநர் பொறுப்பேற்றவுடன் பேசாலையில் நவீன வசதிகளுடன் கூடிய துறைமுகம் அமைவது தொடர்பான பேச்சுக்கள் எழுந்தன.

இது பற்றி ஆளுநரிடம் கருத்துக் கேட்ட போது , பேசாலை மக்கள் துறைமுகம் அமைவது தொடர்பாக என்னுடன் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டிருந்தனர். அதன்படி பேசாலை மக்களுடன் கலந்துரையாடியதின் பின் முறைப்படி அறிவித்தல் தரப்படும் என்றார்.

You might also like