side Add

மாகா­ண­சபை தேர்­தல் பிற்­போக முதன்­மைக் கட்­சி­களே கார­ணம்

ஜே.வி.பி. தெரி­விப்பு

மாகாணசபை தேர்தல் பிற்போக இரண்டு முதன்மைக் கட்சிகளுமே காரணமாகும். எல்லை நிர்ணய அறிக்கையை காரணம் காட்டி முதன்மைக் கட்சிகள் இரண்டும் மாகாண சபைகள் தேர்தலை பிற்போடும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளன என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான மீளாய்வு குழுவின் அறிக்கை தாமதமாகியுள்ளமை தொடர்பாக எதிர்க்கட்சியினரால் எழுப்பப்பட்ட கேள்விகளை தொடர்ந்து சபையில் ஏற்பட்டிருந்த வாதப் பிரதிவாதங்களின் போது தனது கருத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

மாகாண சபைகள் தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அந்த அறிக்கை தோற்கடிக்கப்பட்டது. இந்த நிலையில் சபாநாயகரால் தலைமை அமைச்சர் தலைமையில் எல்லை நிர்ணயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க மீளாய்வுக் குழுவொன்று அமைக்கப்பட்டது.

அந்த குழு இரண்டு மாதத்துக்குள் தனது அறிக்கையை சம்ப்பித்திருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது. குறித்த குழுவால் அது தொடர்பான அறிக்கை இரண்டு மாதத்திற்குள் சமர்ப்பிக்காவிட்டால் அதற்கு அடுத்ததாக எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக அது தொடர்பான சட்டமூலத்தில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எல்லை நிர்ணய நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதில் சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஆகவே இந்த சட்ட மூலத்தில் திருத்தத்தை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எவ்வாறாயினும் அறிக்கையை சமர்ப்பிக்காது இருப்பது தொடர்பாக அந்த குழு நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

இதேவேளை பழைய முறைமையில் தேர்தலை நடத்துவது குறித்து இப்போது கூறுகின்றீர்கள், ஆனால் எல்லை நிர்ணய அறிக்கை சபையில் சமர்பிக்கப்பட்ட போது அதனை ஏற்றுகொள்ள முடியாது என இரண்டு தரப்பினரும் முரண்பட்டதுடன், எல்லை நிர்ணயத்தை எதிர்த்து திட்டமிட்டு தேர்தலை பிற்போடும் செயற்பாடுகளில் ஈடுபட்டீர்கள். இது தொடர்பான நடவடிக்கைகளை அன்றே செய்திருந்தால் இன்று தேர்தல் நடந்திருக்கும். ஆனால் அதற்கு இடமளிக்கப்படவில்லை. இப்போது மீண்டும் பழைய கதைகளைக் கூறுகிறீர்கள். தேர்தல்கள் பிட்போடப்பட இரண்டு முதன்மைக் கட்சிகளுமே காரணம் – என்றார்.

You might also like