முதுமையால் பதவி துறந்தார் மன்னர் அகிடோ!!

ஜப்பானின் 125 ஆவது மன்னரான அகிடோ, வயது முதிர்வு மற்றும் உடல் நிலை காரணமாக மன்னர் பதவியை துறப்பதாக கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்.

மன்னர் அகிடோ முறைப்படி பதவி விலகுவார் என்றும், அதனை தொடர்ந்து அவரது மகன் நருகிடோ புதிய மன்னராக பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மன்னர் அகிடோ தனது பதவியை துறக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு தலைநகர் டோக்கியோவில் நேற்று நடைபெற்றது. ஜப்பானில், 200 ஆண்டுகளில் பதவியை துறக்கும் முதல் மன்னர் இவர் ஆவார்.

ஜப்பானின் அரச குடும்ப மூதாதையர்களுக்கு தான் பதவியில் இருந்து இறங்குவதை அறிவிக்கும் சடங்கில் மன்னர் அகிடோ பங்கேற்றார்.

அதனை தொடர்ந்து, உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு மத்திய டோக்கியோவில் உள்ள அரண்மனையில் பதவியை துறக்கும் விழா நடைபெற்றது.

இதில் இளவரசர் நருகிடோ, இளவரசி மசாகோ, பிரதமர் ஷின்ஜோ அபே உள்பட 300 க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

மன்னர் அகிடோ, தனது ஆட்சி காலத்தில் தனக்கு ஆதரவு அளித்த நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து, மன்னராக தனது கடைசி உரையை நிகழ்த்தினார்.

தனது உரையில் அவர் ‘‘ஜப்பான் உள்பட உலகம் முழுவதற்கும் அமைதி மற்றும் வளம் வேண்டும். என்னை அடையாளமாக ஏற்றுக்கொண்டு எனக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றியுடன் இருப்பேன்’’ எனக் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் புனித வாள், ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை அகிடோ ஒப்படைத்தார். அத்துடன் அந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

You might also like