விரைவான தீர்வுதான் தமிழர்களின் தேவை

இனப் பிரச்­சி­னைக்கு நடப்பு ஆண்­டுக்­குள் தீர்வு கிடைக்க வேண்­டு­மென தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­திக் கூறி­யுள்­ளமை தற்­போ­தைய கால­கட்­டத்­தில் முக்­கி­யத்­து­வம் பெற்­றுள்­ளது.

கொழும்பு அரசு மற்றும் இந்­தியா உள்­ளிட்ட பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­டம் கூட்­ட­மைப்பு இந்­தக் கோரிக்­கையை வலி­யு­றுத்­திக் கூறி­யுள்­ளமை குறிப்­பிடத்­ தக்­கது. கூட்­ட­ர­சி­டம் தமிழ் மக்­கள் கொண்­டி­ருந்த நம்­பிக்கை முற்­றா­கவே இழக்­கப்­பட்ட நிலை­யில், தமிழ் மக்களது ஏகப் பிர­தி­நி­தி­க­ளா­கக் கரு­தப்­ப­டும் கூட்­ட­மைப்பு இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பாக கூட்டு அரசிடம் வலி­யு­றுத்­திக் கூறி­யுள்­ளது.

கூட்டு அர­சுக்­கான ஆத­ர­வால் கூட்­ட­மைப்­பின் மீது அதி­ருப்தி

தமிழ் மக்­கள் அரச தலை­வ­ரைத் தெரிவு செய்­வ­தி­லும், கூட்­ட­ரசு அமைக்­கப்­ப­டு­வ­தி­லும் தாரா­ள­மா­கவே சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத­வி­யி­ருக்­கின்­ற­னர்.

ஆனால் அரச தலை­வரோ தமி­ழர்­க­ளைக் கண்டு கொள்­வ­தா­கத் தெரி­ய­வில்லை. இத­னால் அர­சுக்கு ஆத­ரவு தெரி­விக்­கின்ற விட­யத்­தில் கூட்­ட­மைப்பு சங்­க­டங்­களை எதிர் கொண்டு வரு­கின்­றது. தமிழ் மக்­க­ளின் வெறுப்­பைச் சம்­பா­தித்­தது மட்­டு­மல்­லாது, தமக்கு எதி­ரா­ன­வர்­க­ளின் விமர்­ச­னங்­க­ளை­யும் அது எதிர்­கொண்டு வரு­கின்­றது.

கடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கூட்­ட­மைப்­பின் ஆத­ர­வா­ளர்­கள் பலர் வேறு தரப்­பி­னர் பக்­கம் தாவிச் சென்­ற­மைக்கு இதுவே கார­ண­மா­கும். இதை நேர்சீர்­செய்ய வேண்­டிய கட்­டா­யத்­தி­னுள் கூட்­ட­மைப்பு தள்­ளப்­பட்­டுள்­ளது.

இலங்­கை­யில் இடம்­பெற்ற இறு­திப்­போ­ரும், அத­னால் தமி­ழர்­க­ளுக்கு நேர்ந்த அவ­லங்­க­ளும் பழைய விட­யங்­க­ளா­கவே மாறி­விட்­டன. பன்­னாட்­டுச் சமூ­கம் சிரி­யா­வி­டம் காட்டி வரு­கின்ற அக்­க­றையை இலங்­கைத் தமி­ழர்­க­ளின் விட­யத்­தில் காட்டுவதாகத் தெரி­ய­வில்லை.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னங்­கள் நிறை­ வேற்­றப்­பட்­ட­போ­தி­லும், அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் நீண்­ட­கால தாம­தம் ஏற்­பட்டு வரு­கின்­றது.

இலங்கை இத­னைத் தனக்­குச் சாத­க­மாக நன்கு பயன்­ப­டுத்­திக் கொள்­கின்­றது. இதன் கார­ண­மா­கத் தமி­ழர்­க­ளின் துய­ரங்­கள் தொட­ரவே செய்­கின்­றன.

அர­ச­மைப்பு உரு­வாக்­கத்தை முன்­னெ­டுக்க வேண்­டும் கொழும்பு

அர­சி­யல் ரீதி­யில் கூட்­ட­மைப்பு தன்னை மீளக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மா­னால், தமி­ழர்­க­ளின் குறை­க­ளைத் தீர்த்து வைப்­ப­தற்­கான முயற்­சி­க­ளில் அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­பட வேண்­டும். கொழும்பு அர­சும் கூட்­ட­மைப்பு வழங்கி வரு­கின்ற ஆத­ர­வுக்­குப் பிர­தி­யு­ப­கா­ர­மாக தீர்வு தொடர்பாக எதை­யா­வது செய்­வ­தற்கு முன்­வ­ர­ வேண்­டும்.

கூட்­ட­மைப்­பின் கோரிக்­கை­கள் நிறை­வேற்­றப்­பட முடி­யா­த­வை­யெ­னக்­கூற முடி­யாது. ஆனால் இன­வா­தி­க­ளுக்­கும், மத­வா­தி­க­ளுக்­கும் அஞ்­சு­கின்ற இந்த அரசு, எதைச் செய்­வ­தற்­கும் குழம்பி நிற்­கின்­றது.

புது­வ­ரு­டத்­து­டன் புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் தொடர்­பான வேலை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டு­மெ­னத் தலை­மை­கள் கூறி­யி­ருந்­த­ போ­தி­லும், அதற்­கான சமிக்­ஞை­க­ளைக் காண முடி­ய­வில்லை.

கூட்­ட­ மைப்­பின் தலை­வர்கள் புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பாக அடிக்­கடி நம்­பிக்கை வெளி­யிட்டு வந்­துள்­ள­னர். கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­கள் இதை எள்ளி நகை­யா­டத் தவ­ற­வில்லை.

ஆனால் கூட்டமைப்பு, நம்­பிக்­கை­யைத் தள­ர­வி­டாது அர­சு­டன் பேச்­சுக்­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­றது.

தெற்­கைப் பொறுத்­த­வ­ரை­யில் மகிந்த ராஜ­பக்ச குடும்­பத்­தின் செல்­வாக்கு வளர்ந்து செல்­கின்­றதே தவிர மங்­கி­ய­தா­கத் தெரி­ய­வில்லை. உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் பின்­னர் உற்­சா­க­ம­டைந்த நிலை­யில் அவர்­கள் காணப்­ப­டு­கின்­ற­னர்.

ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வதே அவர்­க­ளின் முதன்மை இலக்­கா­கக் காணப்­ப­டு­கின்­றது. அரச தலைவரொருவர் மூன்றாவது தடவையும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிட முடியுமென புதிதாக 20ஆவது திருத்தமொன்று கொண்டு வந்து நிறைவேற்றப்படுமானால், அடுத்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் மகிந்த மீண்­டும் போட்­டி­யி­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பம் கிடைத்­து­வி­டும்.

அவர் அரச தலை­வ­ரா­கின்ற வாய்ப்­பும் கிட்­டி­வி­டும். இத­னால்­தான் அரச தலை­வ­ரின் அதி­கா­ரங்­க­ளைப் பறித்­தெ­டுப்­ப­தற்­கான தீர்­மா­னங்­களை மகிந்த தரப்பு எதிர்த்து வரு­கின்­றது.

தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்கு மகிந்­த­வுக்­குச் சந்­தர்ப்­பம் கிடைத்து விட்­டால் மகிந்­த­வின் தம்பி கோத்­த­பா­ய­வுக்­குச் சந்­தர்ப்­பம் வழங்­கப்­ப­டு­மெ­னத் தெரி­கின்­றது. நிறை­வேற்று அதி­கா­ரங்­கள் இவ­ருக்­குக் கிடைத்­து­ விட்­டால் என்ன நடக்­கு­மென்­பதை இந்த நாடே அறி­யும்.

தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பாக இவர்­க­ளு­டன் பேச முடி­யு­மென எவ­ரும் எதிர்­பார்க்க முடி­யாது. ஆகவே இந்த அர­சின் ஆட்­சிக்­கா­லத்­தி­னுள் இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு கிடைக்­காவிட்­டால் அதை ஒரு போ­துமே எதிர்­பார்க்க முடி­யாது.

கூட்­ட­மைப்­பி­ன­ரி­டம் செயற்­றி­றன் தேவை

தமிழ் மக்­க­ளைப் பொறுத்த வரை­யில் எந்­தத் தீர்­வாக இருந்­தா­லும் கூட்­ட­மைப்பே அதைப் பெற்­றுத்­தர வேண்­டும் என்று எதிர்­பார்க்­கின்­ற­னர். ஏனைய தமிழ்க் கட்­சி­க­ளும் கூட்­ட­மைப்­பின் தலை­யில் பாரத்­தைச் சுமத்­தி­விட்­டுத் தாம் ஒதுங்கி நிற்­ப­தையே வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளன.

இனிவ­ரும் தேர்­தல்­க­ளும் கூட்­ட­மைப்­புக்­குச் சோத­னைக்கள­மா­கவே அமை­யப்­போ­கின்­றது.

இது நெருப்­பாற்றை நீந்­திக் கடப்­ப­தற்­குச் சம­மா­னது. இவற்­றை­யெல்­லாம் வெற்­றி­க­ர­மா­கத் தாண்­டிச் சென்­றால்­தான், அந்த அமைப்­பின் எதிர்­கா­லம் பிரகாசமாக அமை­யு­மென்­ப­தைச் சொல்­லத் தேவை­யில்லை.

கூட்­ட­மைப்­ பின் தலை­வர்­கள் தீர்க்க தரி­ச­னத்­த­டன் சிந்­தித்­துச் செயற்­ப­டாது விட்­டால் அதன் எதிர்­கா­லம் கேள்­விக் குறி­யா­கவே அமை­யும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close